நான் நயன்தாராவுக்குப் போட்டியா?- ஐஸ்வர்யா ராஜேஷ்


ரசிகா
readers@kamadenu.in

‘மானாட மயிலாட' ரியாலிட்டி ஷோவில் வென்று, அதன் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இன்று நயன்தாராவுக்கு இணையாக பெண் மையக் கதாபாத்திரங்களில் வெளுத்துக் கட்டிக்கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் ‘திட்டம் இரண்டு’ அண்மையில் ஓடிடியில்  வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ‘பூமிகா’ என்கிற மற்றொரு மர்டர் த்ரில்லர் படம் ஓடிடியில் வெளியாகவிருக்கிறது. தமிழில் மட்டுமல்லாது தனது தாய்மொழியான தெலுங்கிலும் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்,  காமதேனு மின்னிதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி இது.
    
‘க/பெ.ரணசிங்கம்’, ‘திட்டம் இரண்டு’, அடுத்து ‘பூமிகா’ என நீங்கள் நடிக்கும் படங்கள்  ஓடிடியில் வரிசையாக வெளியாகிறதே... ஓடிடி கதாநாயகி ஆகிவிட்டீர்களா?

அது எல்லாமே தயாரிப்பாளர்கள் எடுக்கும் முடிவு. ஏனென்றால், கரோனா காலத்தில் மக்களைப்போல் அவர்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கடன் வாங்கிப் படமெடுக்கிறார்கள். வட்டி கட்டப்போவது அவர்கள்தானே... உடனே தியேட்டர்கள் திறக்கப்பட்டாலுமே கூட, மக்கள் அச்சமின்றி படம் பார்க்க வந்து விடுவார்கள் என்று சொல்லிவிடமுடியாது. அவர்களைக் கட்டாயப்படுத்தவும் முடியாது. அவர்களுக்கு மூச்சு விட்டுக்கொள்ள ஒரு அவகாசம் தேவை. இந்த இடைவெளியில் பாதுகாப்பான பொழுதுபோக்காக ஓடிடி மாறியிருக்கிறது.

‘பே பர் வியூ’ என்ற அடிப்படையில் ஒருமுறை பார்க்க 199 ரூபாய் கொடுத்து பத்து லட்சம் பேர் ‘க/பெ.ரணசிங்கம்’ படத்தைப் பார்த்திருக்கிறார்கள். அப்படியானால் 20 கோடி ரூபாயை அந்தப் படம் ஓடிடி-யிலேயே வசூல் செய்திருக்கிறது. நேரடியாக ஓடிடி-க்காக தயாராகும் படங்களில் நடிப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. தியேட்டர், ஓடிடி இரண்டில் எதற்காக எடுத்தாலும் சினிமா சினிமாதான்.
    
எப்படியிருக்கிறது ‘திட்டம் இரண்டு’ படத்துக்கான வரவேற்பு?

மிகப்பெரிய ஹிட்!   “இதுவரை, பெண் போலீஸ் என்றாலே மேலதிகாரிக்கு சல்யூட் அடிப்பார், அல்லது வில்லன்களைப் புரட்டியெடுப்பார். காக்கி உடுப்புப் பெண்ணுக்கு காதல் என்றால்  என்னவென்றே தெரியாது என்றுதான் பார்த்திருக்கிறோம். ஆனால், ‘திட்டம் இரண்டு’ படத்தில் இவ்வளவு அழகான காதல் ஒரு பெண் போலீஸ் அதிகாரிக்கும் பொதுவானதாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை” என்று பாராட்டியவர்களே அதிகம். அந்த வகையில் ‘திட்டம் இரண்டு’ படமும் நான் நடித்த மாறுபட்ட படங்களின் பட்டியலில் சேர்ந்துவிட்டது.

தற்போது என்ன மாதிரியான கதைகள் உங்களுடைய தேர்வாக இருந்து வருகின்றன?

சம்பளத்தை ஏற்றிவிட்டதாக என்னைப் பற்றிச் செய்திகள் வருகின்றன. ஆனால், என்னுடைய உண்மையான சம்பளம் எவ்வளவு என்பது எனக்கு மட்டுமே தெரியும். சம்பளத்தை ஏற்றுவது இறக்குவது என்பதெல்லாம் எனக்கு முக்கியமல்ல. நான் நடிக்கும் படங்களை அனைவரும் குடும்பத்துடன் வந்து முகம் சுழிக்காமல் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட கதையையும் அதில் எனது கதாபாத்திரம் என்ன என்பதை மட்டும்தான் பார்க்கிறேன். அது எவ்வளவு பெரிய கதாபாத்திரம், எத்தனை நட்சத்திரங்கள் இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்க மாட்டேன்.

உதாரணத்துக்கு, ‘தர்மதுரை’ படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்... அதில் மொத்தம் மூன்று பெண் கதாபாத்திரங்கள் இருந்தன. இதில் நமது கதாபாத்திரம் எடுபடுமா என்கிற சந்தேகம் எனக்குத் தொடக்கத்தில் இருந்தது. ஆனால், கிராமத்துப் பெண்ணாக நடித்த என்னுடைய குடும்பம், அதன் பொருளாதார பலவீனம், திருமணம் என்பது ஒரு சாமானியக் குடும்பத்துக்கு எத்தனை பெரிய சுமையாக இருக்கிறது என்பது போன்ற உணர்ச்சிபூர்வமான விஷயங்கள் என்னைச் சுற்றி இருந்தது தைரியம் கொடுத்தது. அந்த தைரியத்துடன் டப்பிங் பேசி முடித்து படத்தைப் பார்த்தபோது, மற்ற இரண்டு கதாபாத்திரங்களின் உணர்வுநிலைக்கு சற்றும் குறையாத ‘வெயிட்டேஜ்’ எனது கதாபாத்திரத்திலும் இருந்தது. இப்படித்தான் நான் எனக்கான கதாபாத்திரங்களை இப்போதும் தேடுகிறேன். என்னிடம் மக்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டபிறகு அவர்களை என்னால் ஏமாற்ற முடியாது.

‘பூமிகா’,  ‘டிரைவர் ஜமுனா’, ‘கிரேட் இண்டியன் கிச்சன்’ படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் என பெண் மையப் படங்களில் நடித்துக் குவிக்கிறீர்கள். நயன்தாராவுக்கு போட்டியாக கலக்க வேண்டும் என்று முடிவே செய்துவிட்டீர்களா?

போட்டி என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியான நாட்களில் இருக்கிறேன். என்னைத் தேடி பெண் மையக் கதைகள் வரிசை கட்டுவதை என்னாலேயே கூட நம்ப முடியவில்லை. சில வருடங்களுக்கு முன்புவரை  “நீயெல்லாம் ஹீரோயினா நடிக்க ஆசைப்படுறியா?” என்று கேட்டவர்கள் அதிகம். ஆனால், இப்போது எனது படத்தை பிரதானமாகப் போஸ்டரில் போடும் அளவுக்கு நான் வளர்ந்திருக்கிறேன். என்னை வளர்த்துவிட்ட உள்ளங்களுக்கு இது நன்றி சொல்லும் தருணம். பெண் மையக் கதைகளில் நடிப்பதால், கதாநாயர்களுடன் நடிக்கமாட்டேன் என்று மட்டும் நினைத்துக்கொள்ளாதீர்கள்.

வாழ்க்கை ‘ரிவர்ஸ் கியரில்’ செல்கிறது என்று நினைத்த தருணம் இதுதானா?

‘காக்கா முட்டை’யில் நடிக்கும்போதே அதுதான் நிலை. அந்தப் படத்தில் நடித்தபோது எனக்கு 21 வயது. இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்தேன். பின்னர் 25 வயதில் ‘கனா’ படத்தில், வயதுக்கு வரும் பள்ளி மாணவியாக நடித்தேன். முதலில் அம்மா, பிறகு பள்ளி மாணவி என்று நடித்த ஒரே நடிகை நானாக மட்டுமே இருப்பேன்.

‘கனா’ படம் ரிலீஸ் ஆனபோது அந்தப் படத்துடன் சேர்ந்து 5 படங்கள் வெளியாகின. முதலில் தியேட்டர் கொடுத்தவர்கள், திடீரென்று, “உங்களுடைய படத்துக்கு முன்பு தயாரான படங்கள் இப்போது வருகின்றன. எனவே, உங்கள் படத்துக்கு ஒப்புக்கொண்ட தேதியில் தியேட்டர்கள்  கிடையாது.” என்றார்கள். ஆனால், தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் சார்,  “உறுதியாக ‘கனா’ வெளியாகியே தீரும்” என்றார். அப்படியே கொஞ்ச திரையரங்குகளில் வெளியானது. படத்தின் தரத்தைப் பார்த்த மக்கள் திமுதிமுவெனக் குவிந்தார்கள். பிறகு ‘கனா’ படத்துக்கு திரையரங்குகளின் எண்ணிக்கை சட சடவென தானாக உயர்ந்தது. தரமும் திறமையும்தான் சினிமாவில் எல்லாம் என அப்போது புரிந்தது.

x