பகத்பாரதி
readers@kamadenu.in
“என் கணவர் கொடுத்த சுதந்திரம்தான் நான் சீரியலில் நடிக்க காரணம்” என ஆரம்பமே அத்தானுக்கு ஐஸ் வைக்கிறார் மெளனிகா. கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘இதயத்தை திருடாதே சீசன் 2’-ல் நடித்துக் கொண்டிருக்கும் மவுனத்தைக் கலைத்தோம். அவர் நம்மிடம் பேசியதிலிருந்து...
திருமணத்துக்குப் பிறகு சீரியலில் நடிக்க ஆரம்பிச்சிருக்கீங்க... கணவர் எந்த அளவுக்கு சப்போர்ட்டா இருக்காரு?
என் கணவர் கொடுத்த சப்போர்ட்லதான் நான் சந்தோஷமா சீரியலில் நடிச்சிட்டிருக்கேன். திருமணமானதுமே, “எனக்காக நீ எதையும் மாத்திக்க வேண்டாம். நீ எப்படி இருப்பீயோ அப்படியே இயல்பா இரு”ன்னு சொன்னார். அவர் கொடுத்த சுதந்திரத்தால்தான் இயல்பா என்னுடைய வேலையை செய்ய முடியுது. சில நேரம் ஷூட் முடிச்சு வீட்டுக்கு போக இரவு பத்தரை மணி ஆகிடும். அவர்தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து என்னை கூட்டிட்டு போவார். ஏன் இவ்வளவு நேரம்னு ஒருநாளும் கேட்டதில்லை. என் பணிச் சூழலைப் புரிஞ்சுக்கிட்டு எனக்கு அவர் ஆதரவா இருப்பதே பெரிய வரம் தான்.
டீச்சர் கதாபாத்திரத்தில் நடிக்கும் அனுபவம் குறித்து..?
ரொம்பவே புதுவிதமான அனுபவமா இருக்கு. இந்த கேரக்டர் ரொம்ப கம்பீரமான பொண்ணு கேரக்டர். ஆடியன்ஸ் நிறைய பேர் சீரியல் பார்த்துட்டு இன்ஸ்டாகிராம்ல தேடி மெசேஜ் அனுப்புறாங்க. ரொம்பவே சந்தோஷமா இருக்கு.
நீங்க அதிகமா எதுக்கு செலவழிப்பீங்க?
இப்போ சீரியலுக்காக நிறைய சேலை வாங்கிட்டு இருக்கேன். டீச்சர் கேரக்டருங்குறதனால காட்டன் சேலைகள் அதிகமா பயன்படுத்துறேன். மத்தபடி எதையுமே தேவைக்கதிகமா நான் வாங்குறதில்லை.
என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கணும்னு ஆசை?
‘படையப்பா’ நீலாம்பரி கதாபாத்திரம் ரொம்பவே பிடிக்கும். அப்படியான ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில்தான் நம்மளுடைய நடிப்புத் திறமையை வெளிக்காட்ட முடியும். அதனால அப்படியொரு ரோலில் நடிக்கணும்.
விளம்பரப் படங்கள்லயும் நடிக்கிறீங்களே... சினிமா என்ட்ரி எப்போது?
விளம்பரப் படங்கள் மூலமாகத்தான் சீரியலுக்குள்ளேயே வந்தேன். ஆரம்பத்தில் இருந்து இப்போது வரைக்கும் விளம்பரங்களில் நடிச்சிட்டுதான் இருக்கேன். சினிமாவில் நடிக்கும் ஆசை இல்லை. அதனால அதைப் பற்றி யோசிக்கவே இல்லை.
ஹெல்த் விஷயங்களில் எவ்வளவு தூரம் அக்கறை எடுத்துக்குறீங்க?
ஹெல்த் விஷயத்தில் நான் ரொம்பவே வீக். மேக்கப் போட்டுட்டு கேமரா முன்னாடி நின்னா எனக்கு எதுவுமே நினைவில் இருக்காது. கரோனாவைகூட மறந்திடுவேன். என் கணவர்தான் அடிக்கடி போன் பண்ணி கை கழுவு, ஷூட் முடிச்சதும் மறக்காம மாஸ்க் போட்டு ரெஸ்ட் எடுன்னு என்னை விட அதிகமா என் ஹெல்த் மேல அக்கறை எடுத்துப்பார். ஹெல்தியா சாப்பிடுறேனாங்குறது வரைக்கும் அவர்தான் முழுக்க முழுக்க என்னோட ஹெல்த்தை கவனிச்சுக்கிறார்.
அடுத்த பிளான்..?
இப்போதைக்கு 'இதயத்தை திருடாதே சீசன் 2', 'மகராசி' சீரியலில் நடிச்சிட்டு இருக்கேன். தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வு செஞ்சு நடிக்கணும்.