பகத்பாரதி
readers@kamadenu.in
“எனக்கு நடிக்கிறது பிடிச்சிருக்கு. ஆனா, தனி ரூம்ல உட்கார்ந்து டப்பிங் பேசத்தான் பிடிக்கல” சுட்டித்தனமாகப் பேசுகிறார் ரியா மனோஜ். சன்டிவியில் ஒளிபரப்பாகும் ‘அபியும் நானும்' சீரியலில் அபியாக நடிக்கிறார் ரியா. சமர்த்தாக தனது அம்மாவின் மடியில் உட்கார்ந்தபடி, கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சட்டென பதிலளித்தவரிடம் பேசியதிலிருந்து...
சீரியல் வாய்ப்பு எப்படி கிடைச்சது..?
ஜீ தமிழில் ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்' காமெடி ஷோவில் கலந்துக்கிட்டேன். அந்த நிகழ்ச்சி மூலமாதான் சீரியல் வாய்ப்பு கிடைச்சது. முதலில் விஜய் டிவியில் 'செந்தூரப்பூவே' சீரியலில் நடிச்சேன். கரோனா லாக்டவுனால அதில் தொடர்ந்து நடிக்க முடியல. அப்புறமா அம்மாவும், அப்பாவும் இந்த சீரியல் ஆடிஷனுக்காக என்னைக் கூட்டிட்டு போனாங்க. ஆடிஷனுக்கு போனப்போகூட இவ்வளவு முக்கியமான கேரக்டர்னு தெரியாது. டிவியில் சீரியல் விளம்பரத்தில் என்னுடைய போட்டோ வந்ததும் ரொம்ப ஹேப்பி ஆகிட்டேன்.
சீரியலில் நடிக்கும்போது ஏதாவது கஷ்டமா இருந்துச்சா?
எனக்கு மாடர்ன் டிரெஸ்தான் பிடிக்கும். பாவாடை சட்டையெல்லாம் அடிக்கடி போட்டதில்ல. ஆனா, இந்த சீரியலில் நான் பாவாடை சட்டை மட்டும்தான் நிறைய தடவை போட்டேன். இப்போ எனக்கு பாவாடை சட்டையும் பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு. நடிக்கிறது ஜாலியா இருந்தாலும், ரூமுக்குள்ள நான் மட்டும் உட்கார்ந்து டப்பிங் பேசணுங்கிறது கஷ்டமா இருந்துச்சு.
செட்ல எப்படி இருப்பீங்க..?
செட்டுக்கு போனா ஜாலியா இருக்கும். என் கூட ரெண்டு குட்டீஸ் அந்த சீரியலில் நடிக்கிறாங்க. அவங்களோட சேர்ந்து விளையாடிட்டு இருப்பேன். நாங்க மூணு பேரும் அடிக்கடி சண்டை போட்டுக்குவோம். எங்களுக்குள்ளேயே பட்டப் பெயர் வைச்சு தான் கூப்பிடுவோம். அதே மாதிரி, சீரியலில் எனக்கு அம்மாவாக நடிக்கிற மீனா அம்மா (நடிகை வித்யா) கூட நான் ரொம்ப க்ளோஸ். ராஜ்கமல் அங்கிள், அரவிந்த் அங்கிள்னு செட்ல எல்லோர்கூடவும் ஜாலியா பேசி விளையாடிட்டு இருப்பேன்.
அபி அமைதியான அறிவான பொண்ணு. ரியா எப்படி..?
நான் சீரியலில் வர்ற அளவுக்கெல்லாம் அமைதியான பொண்ணு கிடையாது. அம்மா, அப்பாகிட்ட கொஞ்சம் சேட்டை பண்ணுவேன். நானும், என் தங்கச்சியும் சேர்ந்தா வீட்ல அவ்வளவு ரகளையா இருக்கும். ரெண்டு பேரும் கொஞ்சம்தான் சண்டை போடுவோம். ரொம்ப பாசமா இருப்போம். இப்ப ரெண்டாம் வகுப்பு படிக்கிறேன். ஷூட்டிங் போனாலும் படிப்புல இன்ட்ரஸ்ட் இருக்கு. நடிக்கவும் பிடிக்கும், படிக்கவும் பிடிக்கும்.
படங்களிலும் நடிச்சிருக்கீங்களாமே..?
ஆமா... பாபி சிம்ஹா அங்கிள்கூட ஒரு படத்துல நடிச்சிருக்கேன். நான் நடிக்கிறதை பார்த்துட்டு, “உங்க பொண்ணு பார்ன் ஆர்ட்டிஸ்ட்”னு அம்மா, அப்பாகிட்ட அந்த அங்கிள் சொன்னாங்க. இப்பவும் சில படங்களில் நடிக்க வேண்டியிருக்கு. கரோனா காலங்கிறதால நிறுத்தி வைச்சிருக்காங்க.
எதிர்காலத்துல என்னவாகணும்னு ஆசை..?
நயன்தாரா மேடம் மாதிரி சூப்பரா நடிக்கணும்னு ஆசைப்படுறேன்.