எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in
வட இந்தியாவில் அதிகம் நிகழும் ‘வாடகைத் தாய்’ விவகாரத்தை மையமாக்கி, உணர்வுபூர்வமான கதையை நகைச்சுவை பாணியில் தந்திருக்கிறது ‘மிமி’ (Mimi) இந்தித் திரைப்படம். நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஜியோ சினிமா தளங்களில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
திசைமாறும் வாழ்க்கை
ராஜஸ்தான் குறுநகரம் ஒன்றில் நடனமணியாக வளரும் இளம்பெண் மிமி (க்ருத்தி சனோன்), பாலிவுட் தாரகையாகும் கனவில் இருக்கிறாள். அவளை வழிமறிக்கும் வாடகைக் கார் ஓட்டுநர் பானு பிரதாப் (பங்கஜ் திரிபாதி), வாடகைத் தாயாக மாற அவளை வற்புறுத்துகிறான். அதில் கிடைக்கும் பெருந்தொகை தனது பாலிவுட் கனவுக்குப் படிக்கட்டாகும் என்ற நப்பாசையில், மிமியும் அரை மனதாகச் சம்மதிக்கிறாள். செயற்கைக் கருத்தரிப்பில், அமெரிக்கத் தம்பதியர் உயிரூட்டிய குழந்தைக்கு மிமியின் கருப்பை வளருமிடமாக வாடகைக்கு விடப்படுகிறது.
ஆனால் எதிர்பாராத சூழலில், சூலுற்ற மிமியைக் கைக்கழுவி தங்கள் நாட்டுக்கே ஓட்டமெடுக்கிறது அமெரிக்கத் தம்பதி. அதிர்ந்துபோகும் மிமி, ஒருவழியாகப் பிரசவத்துக்குத் தயாராவது, குடும்பத்துக்கும் ஊராருக்கும் பதில் சொல்வது, திரும்பி வந்து நச்சரிக்கும் அமெரிக்கத் தம்பதியைச் சமாளிப்பது உள்ளிட்ட இக்கட்டான சூழல்களை எதிர்கொள்கிறாள். மிமியும், அவளுக்கு உறுதுணையாக நிற்கும் ஓட்டுநரும் இதையெல்லாம் எப்படிச் சமாளித்து தீர்வு காண்கிறார்கள் என்பதே ‘மிமி’ திரைப்படம்.
நிறைவான நடிப்பு
தேசத்தை உலுக்கும் ஒரு பிரச்சினையை உணர்வுபூர்வமாக அலசும் அதேவேளையில், நகைச்சுவை கலந்தும் பரிமாறிய வகையில் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது இப்படம். நடனத்தை நேசிப்பது, பாலிவுட் கனவுகளில் சஞ்சரிப்பது, ஒரு ரசிகையாக நடிகர் ரன்வீர் சிங்கை நினைத்து உருகுவது என வசீகரிக்கிறார் சனோன். பல படங்களில் கவர்ச்சித் தாரகையாய் வலம் வந்தவர், இப்படத்தில் கனமான வேடத்தைப் பொறுப்புடன் சுமந்திருக்கிறார். வாடகைத் தாயாக மாற ஊசலாட்டத்துடன் சம்மதிப்பது, படப்பிடிப்பு என்று பெற்றோரை ஏமாற்றி குழந்தையைச் சுமப்பது, ஏமாற்றிய அமெரிக்கத் தம்பதியைத் தேடி நடுத்தெருவில் அழுது புலம்புவது என நடிப்பில் ஏகமாய் ஸ்கோர் செய்திருக்கிறார் சனோன்.
அவருக்கு அடுத்தபடியாக பங்கஜ் திரிபாதியின் நடிப்பும் படத்துக்குப் பெரும் பலமாகிறது. காசுக்கு ஆசைப்பட்டு வாடகைத் தாய்க்கு ஆள்பிடிக்க அலைவதில் தொடங்கி, இக்கட்டு நேர்ந்ததில் வாடகைத் தாய்க்கு சகலத்திலும் உடனிருப்பது வரை கலவையான கதாபாத்திரத்தை உள்வாங்கி தனது பாணியில் வெளிப்படுத்தியிருக்கிறார் பங்கஜ். முஸ்லிம் வேடத்தில் உளறிக்கொட்டுவது, குழந்தைக்குத் தந்தை என்ற பழியை அப்பாவியாய் சுமப்பது என, அசட்டுத்தனமும், பொறுப்புணர்வும் சேர்ந்த வித்தியாசமான வேடத்தைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
உணர்ச்சிக் குவியல்
பத்து வருடங்களுக்கு முன்பு மராத்தியில் வெளியான திரைப்படத்தின் தழுவல் இது. இடையில் ‘வெல்கம் ஒபாமா’ எனத் தெலுங்கிலும் வெளியான பின்னர், தாமதமாகவே இந்தியில் மறுஆக்கம் செய்திருக்கிறார்கள். கதையை சீரியஸாகச் சொல்வதா, சிரிக்கச் சிரிக்கச் சொல்வதா என்பதில் இயக்குநர் லக்ஷ்மண் உடேகர் சற்றே குழம்பியிருப்பார் போல. கடைசியில் இரண்டையும் கலந்த விதத்தில் ஒரு இயக்குநராக வெற்றியையும் பெற்றிருக்கிறார். ஆனால், பல ஆண்டுகளாக வட இந்திய கிராமத்து ஏழைப் பெண்கள் தரகர்களால் சுரண்டப்பட்ட சமூக அவலத்தை நகைச்சுவையின் பெயரில் மலினமாக்கிய பாதகத்தையும் படம் செய்திருக்கிறது.
வாடகைத் தாயில் தொடங்கிய கதை, ஆதரவற்ற குழந்தைகளுக்கான தத்தெடுப்பை வலியுறுத்துவதில் முடிகிறது. கடைசியில் இரண்டு கருத்துகளுமே பாதிப்பை ஏற்பாடுத்தாமல், ஒரு பொழுதுபோக்கு சினிமாவாக மட்டுமே மிஞ்சுகிறது ‘மிமி’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘பரம் சுந்தரி’ உட்பட பல பாடல்கள் ஏற்கெனவே ஹிட்! உணர்ச்சிக் குவியலான இடங்களின் பின்னணி இசையிலும் ரஹ்மான் கவனம் ஈர்க்கிறார். வார இறுதியில் குடும்பத்தோடு செலவிடுவதற்கான கலகலப்பான பொழுதுபோக்குப் படங்களின் வரிசையில் சேர்கிறது ‘மிமி’.
***
ஜேஸனின் ஆக்ஷன் பட்டாசு
ஜேஸன் ஸ்டேதம் நடித்த ‘ராத் ஆஃப் மேன்’ (Wrath of Man) ஹாலிவுட் திரைப்படம், லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) தளத்தில் கடந்த வாரம் வெளியாகி இருக்கிறது. ஆக்ஷன் ரசிகர்களுக்கான தலைவாழை விருந்தாக வந்திருக்கும் இந்தத் திரைப்படம், தமிழ் டப்பிங்கிலும் காணக் கிடைக்கிறது.
செக்யூரிட்டியாகும் தீரன்
பல மில்லியன் கரன்ஸிகளை டிரக்குகளில் பரிமாற்றும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் புதிய பணியாளனாகச் சேர்கிறான் பேட்ரிக் ஹில். ‘கேஷ் டிரக்’ எனப்படும் நகரும் கஜானாவைக் குறிவைத்து கொள்ளையர்கள் நடத்தும் தாக்குதல்களும், அதில் பாதுகாவலர்கள் இறப்பதும் தொடர்கதையாகின்றன. இப்படியான சூழலில்தான் அவனது பணியேற்பு நிகழ்கிறது. சேர்ந்த நாள் முதலே அவனது இயல்பு, செயல்பாடு அனைத்திலும் சக பணியாளர்களுக்கு ஏதோ பொறி தட்டுகிறது.
முதல் பணியாக அவன் புறப்பட்ட பயணத்தில், டிரக் மீது கொள்ளை முயற்சி மேற்கொண்ட ஆறு பேரைத் துரத்திச் சுட்டுக் கொல்கிறான். சாதாரண செக்யூரிட்டி வேலையில் ஓர் அசகாய சூரன் சேர்ந்திருப்பதை அந்த அலுவலகமே அச்சத்துடன் கவனிக்கிறது. அது உண்மை என்பது போல பேட்ரிக்கின் ஃபிளாஷ்பேக் காட்சிகளும், அங்கிருந்து புறப்பட்ட பழிவாங்கல் படலமும் அவனது பின்னணியை விவரிக்கின்றன.
பேட்ரிக்காகத் தோன்றும் ஜேஸன் ஸ்டேதம் வழக்கமான ஆக்ஷன் சாகசங்களுடன், படம் முழுக்க கோபாவேசத்தை விழுங்கிய பாவனையில் நடிக்கவும் செய்திருக்கிறார். அவரது வழக்கமான தீவிர ஆக்ஷன் படங்களிலிருந்து மாறுபட்டதாய் அழுத்தமும், இருளும் ஊடுபாவிய கதை வித்தியாசம் தருகிறது. நான்லீனியர் கதை சொல்லலில் நான்கு தலைப்புகளில் திரைக்கதையைப் பொருத்தமான தலைப்புகளுடன் பிரித்து வழங்குகிறார்கள். முழுதாய் நாயகன் முதுகிலேயே சுமக்காது, இந்த தலைப்புகளின்கீழ் வேறு பலரின் கோணத்திலும் கதையை விவரித்திருப்பது விறுவிறுப்பு தருகிறது.
ஆக்ஷன் அதிகம்
‘கேஷ் டிரக்’ என்ற தலைப்பில் பிரெஞ்சில் வெற்றி பெற்ற திரைப்படத்தை, ஜேஸன் ஸ்டே தமுக்கான மாற்றங்களுடன் மறுஆக்கம் செய்திருக்கிறார் இயக்குநர் கய் ரிட்ச்சி. முன்னாள் ராணுவத்தினர் கொள்ளை கும்பலாவதும், தங்களின் ஓய்வுக்கால முயற்சியாகக் கடைசிக் கொள்ளைக்குத் திட்டமிடுவதுமான பின்னணி விவரணைகள் இறுதிக் காட்சிகளை மேலும் பரபரக்கச் செய்கின்றன. ஒரு சஸ்பென்ஸ் கதைக்கான சாத்தியங்கள் நிறைய இருந்தும் அவற்றைக் குறைத்து, ஆக்ஷனுக்கு மட்டுமே முன்னுரிமை தந்திருப்பது ஒரு வகையில் ஏமாற்றம் தருகிறது. அதிரடி நாயகனுக்கு நேர் நிற்கும் பிரதான வில்லன் என்று எவரும் இல்லாததும் நாயக பிம்பத்தில் பொத்தலிடுகிறது.
அரதப் பழசான பழிவாங்கல் கதை என்றபோதும், அதைச் சொன்ன விதத்தில் ரசிகர்களைக் கவர்கிறது ‘ராத் ஆஃப் மேன்’.