காமெடி ரோலில் நடிக்க ஆசை- 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' அஷ்வினி


பகத்பாரதி
readers@kamadenu.in

“என்னை ஒரு நடிகையாப் பார்க்காம அவங்க வீட்டுப் பெண்ணாவே பார்க்குறாங்க. அதுதான் இந்த சீரியலோட சக்சஸூக்கு முக்கிய காரணம்...” அழகாய் பேசுகிறார், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' தொடரின் நாயகி அஸ்வினி.

இந்த சீரியல் ஆயிரமாவது எபிசோடை நெருங்கிக் கொண்டிருக்கும் சந்தோஷத்தில் இருந்த அவரிடம் பேசியதிலிருந்து...

‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' சீரியல் குறித்து..?

இந்த சீரியல் ஆரம்பிக்கும்போது மக்கள் எந்த அளவுக்கு சப்போர்ட் கொடுத்தாங்களோ, அதே அளவுக்கு இப்போ வரைக்கும் கொடுக்குறாங்க. பொதுவா ஸ்லிம் ஃபிட்,  சைஸ் ஜீரோ பெண்கள் மட்டும் தான் இதுவரை ஹீரோயின்களா இருந்திருக்காங்க. ஆனா, அப்படி இல்லாம நான் குண்டா இருந்தாலும் என்னையும் அவ்வளவு அன்போட தங்கள் வீட்டுப் பெண்ணா மக்கள் ஏத்துக்கிட்டாங்க. ஏன்னா, எல்லோர் வீட்டிலும் என்னை மாதிரி அக்காவோ, தங்கச்சியோ, சித்தியோ கண்டிப்பா இருப்பாங்க. அதனால பர்சனலா நான் அவங்ககூட கனெக்ட் ஆகிட்டேன்.

கரோனா லாக்டவுன் நேரத்தில் என்ன செய்தீர்கள்?

முதல் லாக்டவுனில் பெருசா எதுவும் தெரியலை. ஆனா, இந்த லாக்டவுனில் வேலைக்கு போக முடியலையேன்னு ரொம்பவே ஒரு மாதிரி இருந்துச்சு. அதேநேரம், இவ்வளவுநாள் ஃபேமிலியோட செலவழிக்க முடியாமப் போனத இப்ப ஈடுகட்டினேன்னு சொல்லலாம். ஏன்னா, வழக்கமா பெங்களூருல இருந்து சென்னை வந்துட்டு ஷூட்டிங் முடிச்சிட்டு மறுபடி பெங்களூரு போய்டுவேன். வீட்ல இருக்கிற டைம் ரெஸ்ட் எடுக்கத்தான் கரெக்ட்டா இருக்கும். அதனால இந்தவாட்டி ஃபேமிலி கூட செலவழிச்சேன். சமைக்கிறது பிடிக்குங்கிறதால, வேளாவேளைக்கு பார்த்துப் பார்த்து சமைச்சு கொடுத்தேன். வரையவும் இஷ்டம்கிறதால, முதல் லாக்டவுனில் ஒரு கேன்வாஸ் பெயின்டிங் பண்ணேன். அதே மாதிரி இந்த முறையும் இன்னொரு பெயின்டிங் வரைய ஆரம்பிச்சேன்.

செட்டில் உள்ளவங்ககூட ரொம்ப நெருக்கமா ஆகிட்டீங்களே..?

ஆமாங்க. ஆர்ட்டிஸ்ட்ல இருந்து டெக்னீஷியன்ஸ் வரைக்கும் எல்லோர் கூடவும் நான் ரொம்பவே குளோஸ். அவங்க என்னுடைய இன்னொரு குடும்பம்னே சொல்லலாம். ஆரம்பத்தில் தமிழ் பேசத் தெரியாம எல்லார்கிட்டயும் இங்கிலீஷ்லதான் பேசிட்டு இருந்தேன். அழகா தமிழ் சொல்லிக் கொடுத்து,  “உன்னால முடியும்”னு நிறையப் பேர் சப்போர்ட் பண்ணாங்க. அதனாலதான் இப்போ இவ்வளவு சரளமா தமிழ் பேசுறேன். ஒவ்வொரு தடவை ஷூட் முடிச்சிட்டு பெங்களூரு கிளம்பும் போதும் மொத்த டீமையும் ரொம்பவே மிஸ் பண்ணுவேன்.

நெகிழ்வான தருணம்..?

இந்தத் தொடர் 800, 900 அப்படின்னு ஒவ்வொரு மைல் ஸ்டோனை தொடும் போதும் எனக்கு அவ்வளவு நெகிழ்ச்சியா இருக்கும். ‘ராசாத்தி' அப்படிங்குற பெயர் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்தப் பெயரும், அந்தக் கேரக்டரும் எப்பவும் என் மனசுக்கு நெருக்கமாகவே நீடிக்கும்.

என்ன மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புறீங்க..?

காமெடி ரோலில் நடிக்க ஆசை. ஆடியன்ஸை சிரிக்க வைக்கிற மாதிரியான ஒரு காமெடி கேரக்டரில் நடிக்கணும்.

நீண்ட நாள் ஆசை ஏதாவது..?

ரஜினி சாரை ரொம்பப் பிடிக்கும். அவரை ஒரே ஒரு முறை நேர்ல பார்த்தா மட்டும் போதும். அவரை சந்திக்கணுங்கிறதுதான் என்னுடைய நீண்ட நாள் ஆசை. 

x