எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in
ஸ்போர்ட்ஸ் டிராமா வகைமையில் இத்தனை அழுத்தமான கதையைத் தர இயலுமா என வியக்க வைத்திருக்கிறது, பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம். நேரடி ஓ.டி.டி வெளியீடாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் இத்திரைப்படம், பரவலான ரசிகர்களை ஈர்த்திருப்பதுடன் விமர்சகர்களின் பாராட்டுகளையும் குவித்துவருகிறது.
ரோசமான குத்துச் சண்டை
எழுபதுகளின் மத்தியிலான வடசென்னையின் ‘ரோசமான ஆங்கிலக் குத்துச் சண்டை’ விளையாட்டுதான் படத்தின் கதைக்களம். தங்களுக்குள் பல பரம்பரைகளாகப் பிரிந்து குத்துச்சண்டை வீரர்கள் மோதிக்கொள்கிறார்கள். அவற்றில் இடியப்பா பரம்பரையின் நட்சத்திர வீரன் வேம்புலியை வீழ்த்துவதற்குத் தோதான ஆளின்றி, சார்பட்டா பரம்பரை தத்தளிக்கிறது. சார்பட்டாவின் வாத்தியார் ரங்கன் கண்களில், அதுவரை மேடையே ஏறியிராத கபிலனின் தற்செயல் திறமை பளிச்சிடுகிறது. கபிலனின் தாய் பாக்கியமோ, குத்துச்சண்டையின் பெயரால் தன் கணவனைப் போல மகனும் ரவுடியாகி அழிந்துபோவானோ என்ற அச்சத்தில் அவனைப் பொத்திபொத்தி வளர்க்கிறாள். தாய்க்குத் தெரியாமல் குத்துச்சண்டை மேடைகளை ஒரு ரசிகனாய் வலம் வரும் கபிலன், மேடை ஏறாமலேயே வித்தையின் நுணுக்கங்களில் தேறும் ஏகலைவனாகிறான்.
மானம் மிகுந்த பரம்பரை
சார்பட்டா பரம்பரையின் மானம் காக்கும் வாக்குவாதத்தில் ஒரு வேகத்தில் மேடையேறும் கபிலன், எதிர் ஆட்டக்காரனைச் சுலபமாய் சாய்க்க, அவனது வெற்றிக்கணக்கு தொடங்குகிறது. ஆனால், தொடக்க வெற்றிகளின் மிதப்பிலும், தவறான சிநேகத்திலும் பாதை மாறியதில் குத்துச்சண்டை மேடையிலிருந்து வெகுதூரம் விலகிப்போகிறான். பிற்பாடு பரம்பரையின் மானத்தைக் காக்கவும், தன்னை நம்பிய சிலருக்காகவும், குறிப்பாக, தனது சுயத்தை மீட்டெடுக்கவும் களம் கண்டாக வேண்டிய நெருக்கடியை எதிர்கொள்கிறான். அதற்கான போராட்டமும் அத்தனை சுலபமில்லை என்று போகிறது ‘சார்பட்டா பரம்பரை’யின் கதை.
மண்ணின் மக்களும் விளையாட்டும்
விளையாட்டை மையமாகக் கொண்ட ஒரு சினிமாவில், அந்த விளையாட்டுக்கு நேர்மையாகவும் அதன் வீரர்களுக்கு நெருக்கமாகவும் படமாக்கிய விதத்திலேயே ‘சார்பட்டா பரம்பரை’ வியப்பூட்டுகிறது. ஒரு நிலம், அதன் மக்கள், அவர்களின் வாழ்க்கை, அந்த வாழ்வோடு பிணைந்த விளையாட்டு, அதன் பின்னணியில் விரவிக்கிடக்கும் அரசியல், சமூகக் கூறுகள் எனப் பெரும் ஆய்வையும் உழைப்பையும் கோரும் திரைபடைப்புக்குப் படக் குழுவினர் நியாயம் சேர்த்துள்ளனர். எழுபதுகளின் வடசென்னையைக் கண்முன்னால் நிறுத்தும் பீரியட் திரைப்படத்துக்கான கலையாக்கம் பிரமிக்கவைக்கிறது. ரத்தம் சிந்தும் ‘ரோசமான குத்துச் சண்டை’ மோதல்களும், அதன் பார்வையாளர் ஆர்ப்பரிப்பும் பிரம்மாண்டம் என்பதை அதன் உரிய பொருளுடன் உணர்த்துகின்றன.
கட்டுடல் ஆர்யா, கண்ணால் பேசும் பசுபதி
‘நான் கடவுள்’ படத்துக்குப் பின்னர், ஆர்யாவின் திரைவாழ்வில் முக்கியமான படமாகிறது ‘சார்பட்டா பரம்பரை’. சண்டைக்காரனுக்கான முறுக்கிய உடலுடன் அசத்தியிருக்கிறார். பின்னர் உடற்கட்டு குலைவது, மறுபடியும் முன்னிருந்ததைவிட உடலை இரும்பாய் இறுக்கம் வார்ப்பது என ஆர்யா காட்டியிருக்கும் அர்ப்பணிப்பு மெச்சத்தக்கது. கபிலனின் மனைவியாக வரும் துஷாரா, முதலிரவு குத்தாட்டத்தில் தொடங்கி கணவனை ஏச்சும் பாசமுமாக அங்கலாய்ப்பது வரை வடசென்னை வாழ் பெண்ணாகவே வாழ்கிறார். பசுபதியை படத்தின் இன்னொரு நாயகன் என்றே சொல்லலாம். குத்துச்சண்டை வாத்தியாராகப் பார்வையிலும் தோரணையிலும் மிரட்டுபவர், சிறைவாசம் முடித்து மனைவியின் கனிவில் கறிச்சோறு ருசிக்கும்போது சிறு பார்வையில் வேறு ரங்கனாகிறார்.
ஆல்பாஸ் ‘டான்சிங் ரோஸ்’
இடியப்பா பரம்பரையின் ‘டான்சிங் ரோஸ்’ பாத்திரத்தைச் செதுக்கியதிலும், அதற்கான எழுத்திலும் தனி நேர்த்தியை உணர முடிகிறது. குத்துச் சண்டைகளின் கொண்டாட்ட காலத்தில், தனி பாணியில் விளையாட்டை தகவமைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் அவர்களின் தனித்துவ ஆட்டங்களுக்கு, விநோத ஆட்டக்காரன் ‘டான்சிங் ரோஸ்’ சிறந்த உதாரணம். கரங்களே பிரதானமாகும் ஒரு சண்டையில் கால்களின் நகர்வுகளைப் பிரத்யேக நடனமாக வரித்துக்கொண்ட பாத்திரம் அது. அந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கும் ஷபீர் கல்லரக்கல் ரசிகர்களைக் கொள்ளைகொண்டிருக்கிறார்.
காரம் கூடிய கடுகுகள்
ரோஸ் போலவே இடியப்பா பரம்பரையின் இன்னொரு சூரனாக வரும் வேம்புலி (ஜான் கொக்கென்), உடைந்த ஆங்கிலத்தில் உதார் விடும் ‘டாடி’ கெவின் (ஜான் விஜய்), எதிர் ஆட்டக்காரனாகக் கூடிய வில்லத்தனத்திலும் தனக்கான நியாயங்களைக் கொண்டிருக்கும் ராமன் (சந்தோஷ் பிரதாப்), ரங்கன் வாத்தியார் மகனாகப் பிறந்ததாலேயே நிராகரிப்புக்கு ஆளாவதாகக் குமுறும் வெற்றி (கலையரசன்), எம்ஜிஆர் ரசிகனான மாஞ்சா கண்ணன் (மறைந்த நடிகர் மாறன்) எனப் பலர் தங்கள் திரை இருப்பை அலாதியாகப் பதிவு செய்திருக்கிறார்கள். இவர்களில் டான்சிங் ரோஸ், ரங்கன் வாத்தியார், ராமன் போன்ற கதாபாத்திரங்களை மட்டுமே மையமாகக் கொண்டு தனி ‘ஸ்பின்-ஆஃப்’ திரைப்படங்களை எடுக்கலாம்.
படம் பேசும் அரசியல்
சமகாலத்தில் இத்தனை வெளிப்படையாக அரசியல் கட்சிகளையும், கதையில் அவற்றின் ஊடாட்டங்களையும் பதிவுசெய்த திரைப்படங்கள் அரிது. திமுக கட்சிக் கரையில் வேட்டி துண்டு, தொடக்கத்தில் உதயசூரியன் சின்னத்துடன் வரும் கபிலனின் அங்கி கடைசியில் முழு நீல வண்ணத்துக்கு மாறுவது, ஒரே குடும்பத்தினர் இருவேறு திராவிடக் கட்சியாகப் புகைவது, தீவிர உடன்பிறப்பான பசுபதி நெருக்கடி நிலை அமலானதும் கைதுசெய்யப்படுவது, கல்யாணப் பரிசு தொடங்கி இதர செட் பிராப்பர்டிகளிலும் சிரிக்கும் புத்தர் மற்றும் அம்பேத்கர் படங்கள்... இப்படி அக்கால அரசியலைப் பதிவு செய்வதன் போக்கில் பா.இரஞ்சித் பாணியிலான சாடலும், தோழமைச் சுட்டலும் இயல்பாகப் பதிவாகியிருக்கின்றன. அதிலும் கதையின் பிரதான திருப்பத்துக்கு அப்போதைய நெருக்கடிநிலைப் பிரகடனத்தைப் பயன்படுத்தியிருப்பது, ‘முரசொலி’ தலைப்புச் செய்தியில் அப்போதைய ஊடகத் தணிக்கை பகடிக்கு ஆளாவது போன்றவை படம் மீதான ரசிப்பை அதிகரிக்கின்றன.
குறைகளைத் தாண்டிய நிறைவு
‘நீயே ஒளி’ பாடலிலும், குத்துச்சண்டைக் காட்சிகளிலும் நரம்புகளை மீட்டி நிமிர உட்கார வைக்கிறார் சந்தோஷ் நாராயணன். விளையாட்டு அரங்கம் முதல் வீதிகள் வரை அன்றைய வட சென்னையைப் பதிவு செய்ததிலும் முரளியின் கேமரா தன் பங்கினை நிறுவுகிறது. திரைக்கதை - வசனத்தில் இயக்குநருடன் இணைந்திருக்கும் தமிழ்ப்பிரபா, வடசென்னை உச்சரிப்பிலான வசனங்களில் அத்தனை உருக்கத்தையும் உயிர்ப்பையும் குவித்திருக்கிறார்.
தொடக்கத்திலிருந்தே வேகமெடுக்கும் கதை, அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் மூலம் புதிய உச்சம் தொடுகிறது. எனினும், அதற்கு ஈடுகொடுக்காத இரண்டாம் பாதியின் தொடக்கம் சற்று தொய்வை உணர்த்துகிறது. ஆக்ஷனிலும், ரொமான்ஸிலும் சமாளிக்கும் ஆர்யா, உணர்வுபூர்வமான காட்சியில் ஒட்டாது தவிக்கிறார். கலையரசன் தரப்பின் மாறும் நியாயங்களில் போதிய தெளிவில்லை. இது போன்று சொல்வதற்கான குறைகள் கொஞ்சம் தென்பட்டாலும், ‘மெட்ராஸ்’ படத்துக்குப் பின்னர் முற்றிலும் பா.இரஞ்சித் பாணியிலான ‘நாக்-அவுட்’ நிகழ்த்தியிருக்கிறது ‘சார்பட்டா பரம்பரை’!