காமெடி படங்கள் அமைவதில் மகிழ்ச்சி!- ஷிரின் காஞ்ச்வாலா பேட்டி


மகராசன் மோகன்
mohan.m@hindutamil.co.in

‘‘சொந்த ஊர் மும்பையாக இருந்தாலும், எனக்கு செகண்ட் ஹோம் சென்னைதான். தமிழ் மக்கள், இங்கே பேசும் மொழி, வெளிவரும் திரைப்படங்கள் என ஒவ்வொன்றின் மீதும் எனக்கு அளவு கடந்த ஈர்ப்பு உண்டு’’ என்று நெஞ்சம் பூரிக்கப் பேசுகிறார் நாயகி ஷிரின் காஞ்ச்வாலா. ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் வழியே தமிழில் அறிமுகமாகி, ‘வால்டர்’, அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகி வரும் ‘டிக்கிலோனா’, ‘மஞ்சள் குடை’ வரை நடித்திருக்கும் ஷிரின் காஞ்ச்வாலாவுடன் ‘காமதேனு’ மின்னிதழுக்காக பேசியதிலிருந்து...

விமானப் பணிப்பெண்ணான உங்களுக்கு நடிப்பின் மீது காதல் துளிர்த்தது எப்படி?

கல்லூரி படிப்பை முடித்ததும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணி அமைந்தது. 3 வருடங்கள் தரையில் வேலையே இல்லை. வானில் பறந்துகொண்டே இருந்தேன். சிறு வயதில் இருந்தே சினிமா என்றால் உயிர். அந்த ஆர்வத்தில்தான் கன்னட திரைத்துறையில் ‘விராஜ்’ பட வாய்ப்பு அமைந்தது. அங்கே ஒரே ஒரு படம்தான் நடித்தேன். அடுத்து தமிழ் சினிமா அழைத்துக்கொண்டது. இப்போது, வேறு எந்த மொழியிலும் கவனம் செலுத்தமுடியாத அளவுக்கு அடுத்தடுத்து தமிழில் படங்கள் அமைகின்றன. நடிக்க வந்ததும் விமானப் பணிப்பெண் பணியையும் துறந்துவிட்டேன்.
    
சந்தானத்துடன் நடித்துள்ள ‘டிக்கிலோனா’, விமலுடன் ‘மஞ்சள் குடை’ என அடுத்தடுத்து வெளிவரவுள்ள இரண்டு திரைப்படங்களுமே காமெடி தளத்தில் உருவானவை. நிஜ வாழ்க்கையில் உங்களது சுபாவம் எப்படி?

யார்தான் காமெடியை ரசிக்காதவர்கள்? ஜிம், ஸ்விம்மிங் ஏரியா, வீட்டில் அம்மாவுக்கு உதவி செய்வது என நான் இருக்கும் எல்லா இடங்களிலுமே அரட்டைக்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் தொடர்ந்து காமெடி கலந்த ரசனையான திரைப்படங்கள் அமைவதும் மகிழ்ச்சி. ‘டிக்கிலோனா’ படம் முழுக்க காமெடி சரவெடியாகத்தான் இருக்கும். ‘மஞ்சள் குடை’ காமெடி, ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் பாணியில் இருக்கும். அடுத்தடுத்து தமிழில் கேட்டு வரும் கதைகளிலும் காமெடி கலந்ததுதான். சினிமாவோ, நிஜ வாழ்க்கையோ... லைஃப்ல காமெடியையும் ஒரு அங்கமாகத்தான் பார்க்கிறேன்.

தொடர்ந்து தமிழ்ப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்த என்ன காரணம்?

சினிமாவுக்கு வந்து  3 வருஷம் ஓடியாச்சு. வீட்டில் இருக்கும்போது நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்கள் வழியே நிறைய தமிழ் படங்கள்தான் பார்க்கிறேன். அதுவழியேத்தான் தமிழ் பேச கற்றுக்கொள்ளவும் முயல்கிறேன். தமிழ்ப் படங்களில் கதை நகரும் விதம், சென்டிமென்ட், ஆக்‌ஷன், கிளைமேக்ஸ் என ஒவ்வொரு அம்சமும் வித்தியாசமாக ரசனையாக இருக்கும். அதனால்தான் என்னோட செகண்ட் ஹோம் தமிழ்நாடு ஆனது. இந்தக் கரோனா காலகட்டம் முழுமையாக முடிவுக்கு வந்து, எப்போது பழையபடி முழு சுதந்திரமாக சென்னைக்கு வந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போகிறோம் என்ற ஆர்வம்தான் இப்போது அதிகமாக இருக்கிறது.

வட இந்தியாவில் பிறந்து வளந்தவர் நீங்கள். தமிழ் சினிமா கலாச்சாரம் பற்றி உங்களவர்களின் பார்வை என்ன?

இந்தியாவில் பெரும்பகுதி ஹிந்தி பேசும் மக்கள் வசித்தாலும், சினிமா மாதிரியான பொழுதுபோக்கு அம்சங்களில் அதிக அளவுக்கு தென்னிந்திய கலைஞர்களின் செயல்பாடுகளை ரசிக்கவே செய்கின்றனர். என்னோட நடிப்பில் வெளிவந்த ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘வால்டர்’ ஆகிய படங்களை ஃப்ரண்ட்ஸ் நிறையப் பேர் பார்த்துவிட்டுப் பாராட்டினாங்க. அதேபோல, தென்னிந்திய படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் தான் அவை ஹிந்தி மொழியில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. அப்படி வெளிவரும் ஒரு படத்தையும் விட்டுவைக்க மாட்டோம். குறிப்பாக, தெலுங்கில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் உடனடியாக ஹிந்தியில் டப் செய்யப்பட்டு ரிலீஸாகிறது. ஆனால், தமிழ் படங்களில் குறிப்பிட்டவை மட்டுமே டப் செய்யப்படுகின்றன. தமிழ் படங்கள் அனைத்தும் ஹிந்தியில் வர வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

புதிதாக திரைக்கு வரும் ஒவ்வொரு இளம் நடிகைக்கும் ஃபேவரிட் ஸ்டார்ஸ் பட்டியல் இருக்கும். உங்களுக்கு..?

ஹீரோவில் தளபதி விஜய்யும் நாயகிகளில் நயன்தாராவும் எனது லிஸ்ட்டில் இருந்தாலும் அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களிலும் நடிக்க வேண்டும். அதுக்கான கதைகளும், சூழலும் அமையும் என காத்திருக்கிறேன்.

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் உங்களின் பொழுதுபோக்கு?

டிராவலிங்தான். காஷ்மீர், கோவா இரண்டு இடங்களுக்கும் அடிக்கடி பயணம் செய்வேன். சினிமாவுக்கு வந்தபின் மும்பை, சென்னை இரண்டு இடங்களும் ஃபேவரிட் இடங்களாக மாறியது. கடந்த இரண்டு வருடமாக கரோனா பிரச்சினையால் வெளியே அதிகம் போக முடியவில்லை. சீக்கிரமே எல்லாம் சரியாகி மீண்டும் ஊர் சுற்ற வேண்டும்.

அடுத்து..?

தமிழில்தான் ஆர்வமாய் கதைகளைக் கேட்டு வருகிறேன். ஒரு சில கதைகளை டிக்கும் அடித்திருக்கிறேன். அடுத்த மாதம் படப்பிடிப்பு இருக்கும்.

படங்கள் உதவி: கேமரா செந்தில்

x