ஓ.டி.டி. உலா: மாலிக்- மலையாள ‘நாயகன்'!


எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

மற்றுமொரு ‘காட் ஃபாதர்’ கதையாக அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகியிருக்கும் மலையாளத் திரைப்படம் ‘மாலிக்’. ஃப்ரான்சிஸ் ஃபோர்டு கொப்போலாவின் ‘தி காட்ஃபாதர்’ படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட ‘நாயகன்’ படத்தின் சாயலில் உருவாகியிருக்கும் ‘மாலிக்’, ஃபஹத் ஃபாசிலின் மாறுபட்ட நடிப்பாலும், இயக்குநர் மகேஷ் நாராயணனின் திரை எழுத்தாலும் தனித்துவம் பெறுகிறது!

இஸ்லாமிய கிறிஸ்துவ சமூக மக்கள் அதிகம் வாழும் கேரள கடற்கரை கிராமம் ஒன்றின் சாமானியனான அகம்மதலி மாலிக், சந்தர்ப்ப சூழல்களால் சக ஜனங்களுக்கான மீட்பராக உருவெடுக்கிறான். அவனை மையமாகக் கொண்ட கதையில் காதல், நட்பு, துரோகம், துயரம் உள்ளிட்ட என சகலமும் கலக்கின்றன. காட் ஃபாதர் பாதிப்பிலான கதையாக நாம் உணர வாய்ப்பானாலும், கேரள கடலோரங்களில் மக்கள் நலனுக்காக வாழ்ந்து மரித்த மாலிக்குகள் அதிகம். அந்த வகையில், அம்மண்ணின் உண்மைச் சம்பவங்களின் பாதிப்பும் மாலிக் திரைப்படத்தில் உண்டு.

ஆசிரியை மகனாக சமர்த்தாக வளரும் மாலிக்கைக் காலம் கடலோர கடத்தல்காரனாக மாற்றுகிறது. மக்களுக்கான நன்மைகள் செய்து அபிமானம் பெறும் அவனுக்கு, உயிர்த் தோழர்கள் இருவரின் துணையும் கிடைக்கிறது. கிறிஸ்தவ நண்பனின் சகோதரியை காதல் திருமணம் புரியும் மாலிக், தனது வளர்ச்சியுடன் ஊரையும் உயரச் செய்கிறான். இளமையில் நட்பு பாராட்டும் சகாக்கள் நாள்பட, தனிப்பட்ட நோக்கங்கள் மற்றும் புறக் கண்ணிகளில் சிக்கி மாலிக்கிடமிருந்து மாறுபடுகிறார்கள். மாலிக் சாம்ராஜ்யத்தில் எதிரிகளும் துரோகிகளும் அதிகரிக்க, பல ஆண்டுகளுக்குப் பின்னர் கைது செய்யப்படும் மாலிக்கைச் சிறையிலேயே கொல்ல திட்டம் தீட்டப்படுகிறது.

முதுமையைத் தொட்டுவிட்ட மாலிக், சிறைவசமாவதை ஒட்டி முக்கிய மூன்று கதாபாத்திரங்களின் வழியே அவனது முன்கதை நமக்குச் சொல்லப்படுகிறது. அதில் விரியும் மலையாள த்ரில்லருக்கு இணையான எதிர்பார்ப்புகள், தமிழ்  ‘நாயகனி’லிருந்து மாலிக் கதையை வேறுபடுத்துகின்றன. பார்த்து சலித்த டான் கதைகளின் தொனியை ஃபஹத், நிமிஷா, ஜோஜு உள்ளிட்டோரின் முத்திரை நடிப்பு மாற்றவும் செய்கிறது.

ஃபஹத் ஃபாசில் தனது ஒல்லிப்பிச்சு உடலில் ஒரு தலைவனின் கனத்தைக் கடத்துவதும், சின்னச்சின்ன பாவனைகளில்கூட துல்லியமான உணர்வுகளைப் பிரதிபலிப்பதுமாக அபாரமாக நடித்திருக்கிறார். இளம் பருவத்து மாலிக்கின் அதகளம், காதல், கல்யாணம் காட்சிகள் இன்னும் இனிமை. மாலிக் மனைவியிடம் காட்டும் கறார் காதல், மகனிடம் பிழியும் பாசம் எல்லாமே அந்தத் தருணத்தில் மட்டுமல்லாது பின்கதையின் உருக்கத்துக்கும் உதவுகின்றன. துணை கலெக்டராக தோன்றும் ஜோஜூ ஜார்ஜ் பல அடுக்குகளிலான நடிப்பில் ரசிக எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிறார்.

எண்பதுகள், தொண்ணூறுகளின்  ‘பீரியட்’ சாயல்கள், சுனாமி சோகங்கள், மதக்கலவர முஸ்தீபுகள் என கதைக்கான வண்ணங்களைப் பொறுப்பாகவே தோய்த்திருக்கிறார்கள். பிரியாணி பந்தியின் ஊடாகக் கேமரா புகுந்து வெளிப்படும் முதல் காட்சியிலேயே ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ் பிரமிக்க வைக்கிறார்.

ஏகப்பட்ட கதாபாத்திரங்கள், இரண்டே முக்கால் மணி நேர ஓட்டம் என அலுப்புக்கு வாய்ப்பிருந்த போதும் ஃபஹத் ஃபாசில் - மகேஷ் நாரயணன் கூட்டணி இம்முறையும் தங்களை நிரூபித்திருக்கிறது.

***

எமனாகும் செல்போன்

தென்னிந்தியாவின் முதல் டெக்னோ த்ரில்லர் என்ற அறிவிப்புடன் வெளியாகி இருக்கிறது ‘சதுர் முகம்’ (தமிழில் ‘நான்காவது முகம்’) என்ற மலையாளத் திரைப்படம்.

சிறந்த ஃபேன்டஸி மற்றும் திகில் திரைப்படங்களுக்கான தென்கொரிய திரைவிழா உட்பட சில சர்வதேச சினிமா மேடைகளை அலங்கரித்த இத்திரைப்படம், ஒரு வார திரையரங்கு தரிசனத்திலிருந்து கோவிட் இரண்டாம் அலையால் ‘ஜீ 5’ தளத்துக்குத் தாவியுள்ளது. மஞ்சு வாரியர், சன்னி வெய்ன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை ரஞ்சித் கமலா சங்கர் மற்றும் சலில்.வி இணைந்து இயக்கி உள்ளனர். முதன்மை கதாபாத்திரத்தில் தோன்றும் மஞ்சு வாரியர் தயாரிப்பிலும் இணைந்துள்ளார்.

நவயுக நங்கையான தேஜஸ்வினி, செல்போன் என்பதை உடலின் இன்னொரு அவயமாகப் பாவிக்கிறாள். தனது சூழலை செல்போன் கேமராவால் சுடுவதோடு, சதா செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பகிர்வதுமாய் திருப்தியாகிறாள். கல்லூரித் தோழனான ஆண்டனியுடன் இணைந்து சிசிடிவி நிறுவனம் ஒன்றையும் நடத்திவருகிறாள். எதிர்பாரா சம்பவமொன்றில் அவளது செல்போன் குளத்தில் மூழ்க, கையொடிந்து போனதுபோல வருந்துகிறாள். தற்காலிக ஏற்பாடாய் இணையச் சந்தையில் தட்டுப்படும் அதிகம் அறியப்படாத மலிவு விலை செல்போன் ஒன்றைத் தருவிக்கிறாள்.

அந்த செல்போன் அவள் கைக்கு வந்து சேர்ந்த நாளிலிருந்து அமானுஷ்யத்தின் ஆட்டம் தொடங்குகிறது. அதில் முதல் செல்ஃபியை க்ளிக் செய்த தருணம் அவள் மரணத்துக்கான கவுன்ட் டவுன் தொடங்குகிறது. அதைத் தாமதமாகவே கவனித்துச் சுதாரிக்கும் தேஜஸ்வினி, விபரீத செல்போனைத் தொலைப்பதும் அழிப்பதுமான முயற்சிகளில் பரிதாபமாய் தோற்கிறாள். தன்னைப் பணயமாக்கி சாவிடம் செலுத்தும் அந்த வஸ்துவின் பின்னணி குறித்து ஆராய ஆரம்பிக்கும் அவளுக்கு அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. அப்படியான பின்னணி என்ன, செல்போனின் பாசக் கயிறிலிருந்து அப்பெண் விடுபட்டாளா என்பதை அறிவியலும் அமானுஷ்யமும் கலந்த திரைக்கதையில் விவரிக்கிறது ‘சதுர் முகம்’.

‘ஹாரர்’ ரகங்களில் உப பிரிவான ‘டெக்னோ ஹார’ரில் அதற்கான அடையாள அறிவிப்பின்றி, ஏற்கெனவே பல படங்கள் வெளியாகி இருந்தபோதும், ‘சதுர் முகம்’ தனக்கான அங்கீகாரத்துக்கு நியாயம் சேர்க்க முயல்கிறது. ஆன்மாவுக்கு அழிவில்லை என்ற அமானுஷ்யத்துக்கும், ஆற்றலுக்கு அழிவில்லை என்ற அறிவியலுக்கும் சரியாக நூல் பிடித்து திரைக்கதை உருவாக்கி உள்ளனர். முதல் பாதியை நிரூபிக்கும் கதைகள் ஏராளம் என்பதால், பின்பாதி கூற்றே படத்தை வெகுவாய்த் தாங்குகிறது.

மரணம் நோக்கி பயத்துடன் அடியெடுத்து வைக்கும் மஞ்சு வாரியரின் நடிப்பு மிரட்டல் ரகம். அவரின் ஆத்ம நண்பனாக வரும் சன்னி வெய்ன், பேராசிரியராக நடித்திருக்கும் அலென்சியர் லே லோபெஸ் ஆகியோர் படு பாந்தம். நான்கு சுவர்களுக்குள் சுழலும் காட்சிகள் நிறைந்த திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் அபிநந்தனின் உழைப்பு அதிகம். பார்வையாளர்களைத் திடுக்கிடச் செய்வதில் இசையமைப்பாளர் டான் வின்சென்ட், படத்தொகுப்பாளர் மனோஜ் இருவரும் போட்டியிடுகின்றனர்.

பள்ளிப் பாடங்களுக்கு உட்பட்ட இயற்பியல் கோட்பாடுகளே கதையின் அறிவியலுக்கு அடிப்படை என்றபோதும் வெகுஜனத்துக்காக அவற்றை இன்னும் சற்று எளிமைப்படுத்தி இருக்கலாம். சமூக ஊடகங்கள் வழியே முகம் தெரியாத நபர்களுடன் குலாவும் இளம் தலைமுறையினர், சொந்த குடும்பத்தில் அந்நியப்பட்டு நிற்பது உள்ளிட்ட அர்த்தமுள்ள கருத்துகளும் படத்தில் உண்டு.

x