உலகம் சுற்றும் சினிமா - 53: மவுனத் திரைப்படங்களின் ஜாக்கிசான்!


மவுனத் திரைப்படக் காலத்தின் நகைச்சுவை நாயகன் என்று சொன்னால் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சார்லி சாப்ளின்தான். ஆனால், சாப்ளின் வாழ்ந்த அதே காலகட்டத்தில் வாழ்ந்து மறைந்த தலைசிறந்த நகைச்சுவை மேதையான பஸ்டர் கீட்டனைப் பற்றி பலர் அறிந்துகொள்ளாமல் போனது பெரும் சோகம்.

பஸ்டர் கீட்டன் நகைச்சுவை கலந்த சாகசக் காட்சிகளுக்காகவே அறியப்பட்ட நடிகர். அட்டகாசமான இயக்குநரும்கூட. சாப்ளினும் நகைச்சுவைப் படங்களை இயக்கினாலும், இயக்குநர் என்ற அளவுகோலில் பஸ்டர் கீட்டன் சாப்ளினை விடவும் கெட்டிக்காரர் என்று உலக சினிமா விமர்சகர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.

சினிமா கலை உலக அளவில் பிரபலமடையத் தொடங்கிய காலகட்டத்திலேயே பல திரை நுணுக்கங்களையும், இன்றைக்குப் பார்த்தாலும் வியக்கவைக்கும் உத்திகளையும் தனது படங்களில் மிக லாவகமாகக் கையாண்டிருப்பார் பஸ்டர் கீட்டன். வெள்ளந்தியான சிரிப்புடன் பல முகபாவனைகளில் மக்களை சாப்ளின் சிரிக்க வைத்துக்கொண்டிருந்த அதே சமயத்தில் பாவனைகளும், உணர்வுகளும் இல்லாத இறுகிய முகத்துடன் கீட்டனும் மக்களைச் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். உணர்வுகள் அற்ற முகம் என்று குறிப்பிட ‘தி க்ரேட்டஸ்ட் ஸ்டோன் ஃபேஸ்’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். அவர் இயக்கி நடித்த, ‘ஷெர்லாக் ஜூனியர்’ (1924) என்ற திரைப்படம் திரைப்பட உருவாக்கத்தில் ஒரு மைல்கல்.

‘தி ஜெனரல்’, ‘பேட்டலிங் பட்லர்’, ‘கோ வெஸ்ட்’ போன்ற பல படங்களைக் கீட்டன் இயக்கி நடித்திருந்தாலும் ‘ஷெர்லாக் ஜூனியர்’ திரைப்படத்தில் பல திரை உத்திகளைப் பயன்படுத்தி அசத்தினார். மேலும், இது புகழ்பெற்ற கதாபாத்திரமான ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தின் ‘ஸ்பின் ஆஃப்’ திரைப்படம். பிரசித்தி பெற்ற கதாபாத்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அந்தக் கதாபாத்திரத்தை வேறொரு கோணத்தில், முற்றிலும் வித்தியாசமான கதைக் களத்தில் பொருத்தி எழுதுவதே ஸ்பின் ஆஃப் வகைத் திரைக்கதை.

சினிமாவுக்குள் சினிமா

திரையரங்கில் படம் ஓட்டும் வேலை பார்க்கும் இளைஞன் கீட்டன். திரையரங்கில் வேலை பார்த்தாலும் துப்பறியும் நிபுணர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர். அது சம்பந்தமான புத்தகங்களைப் படிப்பதையே பொழுதுபோக்காகக் கொண்டிருப்பவர். தான் மணக்க விரும்பும் பெண்ணுக்குப் பரிசு வாங்கிக்கொடுக்க விரும்புவார் கீட்டன். கையில் இருக்கும் சொற்பப் பணத்தை வைத்து ஒரு டாலர் மதிப்புள்ள சாக்லெட் பெட்டியை வாங்கி அதில் விலையை நான்கு டாலர் என்று மாற்றி அவர் விரும்பும் பெண்ணிடம் கொடுப்பார். அதே பெண்ணை விரும்பும் தீய குணம் கொண்ட ஒருவன் அப்பெண்ணுடைய தந்தையின் கைக் கடிகாரத்தைத் திருடி, அடகுக் கடையில் நான்கு டாலருக்கு அடமானம் வைத்துவிடுவான். அந்தப் பணத்தில் மூன்று டாலருக்குப் பெரிய சாக்லெட் பெட்டியை வாங்கிவந்து கீட்டன் முன்னிலையில் அப்பெண்ணிடம் தருவான்.

இவர்கள் அனைவரும் வீட்டில் இருக்கும் அதே சமயத்தில் தன்னுடைய கடிகாரம் களவு போனதை நாயகியின் தந்தை அறிந்துகொள்வார். கொள்ளையன் யார் என்பதை அறிய தன்னுடைய துப்பறியும் திறமை உதவும் என்று களமிறங்குவார் கீட்டன். இதைக் கவனித்து உஷார் ஆகும் திருடன், கடிகாரத்தை அடகுவைத்த ரசீதைக் கீட்டனின் கோட் பைக்குள் யாருக்கும் தெரியாமல் வைத்துவிடுவான்.

அனைவரிடமும் சோதனை போடப்படும். இறுதியில் கீட்டனின் பையில் ரசீது கண்டுபிடிக்கப்பட்டதும், கடிகா
ரத்தை நான்கு டாலருக்கு அடமானம் வைத்துத்தான் நான்கு டாலர் மதிப்புடைய சாக்லெட் பெட்டியை வாங்கியுள்ளான் என்று கீட்டன் மீது பழி சுமத்துவான் உண்மையான திருடன். காதலியின் தந்தையின் கோபத்துக்கு ஆளாகி அவளது வீட்டைவிட்டு விரட்டப்படுவார் கீட்டன்.

மனமுடைந்து திரையரங்க வேலைக்குத் திரும்பும் கீட்டன், படத்தை ஓட்டிக்கொண்டிருக்கும்போதே தூங்கிவிடுவார். தூக்கத்திலிருந்து கனவுலகுக்குச் செல்லும் கீட்டன் அங்கே ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படத்தில் தன் காதலி, அவளது தந்தை, திருடன் என்று அனைவரையும் பார்ப்பார். அவரும் அந்தத் திரைப்படத்துக்குள் நுழைவார். அந்த திரைப்படத்திலும் ஒரு கொள்ளை நடக்கும். அதைத் துப்பறியும் ஷெர்லாக் ஹோம்ஸ் ஜூனியராக கீட்டன் செல்வார். கனவுத் திரைப்படத்தில் கொள்ளையர்களைப் பிடித்தாரா, கனவு கலைந்து உண்மை வாழ்வில் தான் நல்லவன் என்று தன் காதலியிடம் நிரூபித்தாரா என்பதே படத்தின் மீதிக் கதை.

வியக்கவைக்கும் திரை நுணுக்கம்

இத்திரைப்படத்தில் கீட்டன் திரையில் ஓடும் திரைப்படத்துக்குள் நுழையும் காட்சி அக்காலகட்ட தொழில்நுட்பத்தில் ஓர் பேரதிசயம் என்றே சொல்லலாம். திரைப்படத்துக்குள் நுழைந்ததும், கீட்டனின் அசைவுகள் கோர்வையாக இருக்கும். ஆனால், பின்னணிக் காட்சிகள் மட்டும் நகர வீதி, பூங்கா, காடு, கடல், மலைக்குன்று, பாலைவனம் என்று மாறிக்கொண்டே இருக்கும். காட்சிகள் சிக்காமல், நேர்த்தியாக எடிட் செய்யப்பட்டிருக்கும். இக்காட்சியை எடுக்க பல நுட்பங்களைப் பயன்படுத்தினார் கீட்டன்.

சர்வே பணிகளில் பொறியாளர்கள் பயன்படுத்தும் கருவிகளைப் பயன்படுத்தி அவர் நிற்கும் இடமும், கேமரா பொருத்தப்படும் இடமும் துல்லியமாக அளவெடுக்கப்பட்டு அதே இடைவெளியுடன் அனைத்து இடங்களிலும் படம்பிடிக்கப்பட்டது. இறுதியில் அவையனைத்தையும் கோர்வையாக ஓட்டி இக்காட்சியை எடுத்தார்கள். பஸ்டர் கீட்டன் என்ற திரை மேதைமையின் திறமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

அதிரடி சாகசக்காரர்

எவ்வளவு ஆபத்தான சண்டைக் காட்சியாக இருந்தாலும் டூப் போடாமல் நடிப்பவர் என்ற பெருமை இன்றைக்கு ஜாக்கிசானுக்கு உண்டு. இவ்விஷயத்தில் முன்னோடி கீட்டன் தான். மூன்று மாடிக் கட்டிடத்திலிருந்து குதிப்பதானாலும் சரி, ஓடும் ரயிலுக்கு முன்னால் தாவி ஓடுவதாக இருந்தாலும் சரி, கீட்டன் அசகாய சூரனாகச் செயல்படக்கூடியவர். இன்று இருப்பது போல் பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லாமல் அந்தக் காலத்தில், கீட்டன் செய்த சாகசங்களைக் கண்டால் இன்றும் ஆச்சரியத்தில் கண்கள் விரியும்.

‘ஷெர்லாக் ஜூனியர்’ திரைப்படத்தில், ஓடும் ரயில் மேலாக ஓடி தண்ணீர் தொட்டியின் குழாயைப் பிடித்து கீட்டன் தப்பிக்கும் காட்சி நம்மை வியப்பில் ஆழ்த்தும். உண்மையில் அந்தக் காட்சியில் தண்ணீர் வேகமாக அடித்து கீட்டனைத் தள்ளியதில் அவரது கழுத்து எலும்பில் சிறிய முறிவு ஏற்பட்டது. வலியுடனே முழு படத்தையும் நடித்து முடித்தார் கீட்டன். ஒன்பது வருடங்கள் கழித்தே தனது கழுத்தில் சின்ன எலும்பு முறிவு உள்ளது என்பதை அறிந்துகொண்டார். இது போல் கீட்டனின் உடம்பில் பல விழுப்புண்கள் அவரது சினிமா வரலாற்றைப் பேசும். திரைப்படக் கலையின் பாதையை மெருகேற்றிய பஸ்டர் கீட்டன் வரலாற்றில் கொண்டாடப்பட வேண்டிய மாபெரும் கலைஞன்.

x