சினிமா மூலம் கலகம் செய்ய வேண்டும் என்றோ, கருத்துச் சொல்ல வேண்டும் என்றோ அவசியம் இல்லைதான். ஆனால், அவ்வாறு ஒரு சினிமா அதிகாரத்துக்கும் அநியாயத்துக்கும் எதிராகக் கலகம் செய்ய எத்தனிக்கும்போது அது கலைவடிவத்தின் பூரணத்துவத்தை அடைகிறது. அதிகாரம் என்றதும் நம் மனதுக்குத் தோன்றுவது அரசாங்கம்தான். ஆனால், அரசாங்கங்கள் மாறக்கூடியவை. உலகம் முழுக்க நிலையான அதிகாரமாக இருப்பது மதம்தான். அமெரிக்காவில் கிறிஸ்தவ மதத்துக்குள் நடந்த நெஞ்சைப் பதறச் செய்யும் அநியாயத்தை எதிர்த்துப் போராடிய பத்திரிகையாளர்களின் போராட்டத்தைத் துளிகூட சமரசம் இன்றி பதிவுசெய்த அற்புதமான கலைப் படைப்புதான், 2015-ல் வெளிவந்த ‘ஸ்பாட்லைட்’ திரைப்படம்.
டாம் மெக்கார்த்தி இயக்கத்தில் மார்க் ரஃபல்லோ, மைக்கேல் கீட்டன், ரேச்சல் மெக் ஆடம்ஸ் போன்ற மிகச் சிறந்த நடிகர்களின் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் பல அதிர்வலைகளை உண்டு பண்ணியது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றி இத்திரைப்படம் சமூகத்தின் மைய நீரோட்டத்தில் ஒரு விவாதத்தைத் தொடங்கிவைத்தது. 249 பாதிரியார்கள், மேலும் பல தேவாலய ஊழியர்களின் முகத்திரையைக் கிழித்து, அவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளின் வலியைப் பதிவுசெய்த ‘தி பாஸ்டன் குளோப்’ நாளிதழின் பத்திரிக்கையாளர்களுக்கு 2003-ம் ஆண்டு உயரிய விருதான ‘புலிட்சர்’ விருது வழங்கப்பட்டது. இது சம்பந்தமாக அந்நாளிதழ் வெளியிட்ட 600-க்கும் மேற்பட்ட கட்டுரைகளும், நேர்காணல்களும் அமெரிக்க நிலப்பரப்பில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. அந்நிகழ்வை மையமாகக் கொண்டு வெளிவந்த ‘ஸ்பாட்லைட்’ திரைப்படம் உலகம் முழுக்க இதுகுறித்த விவாதத்தை எழுப்பியது.
கத்தோலிக்க சபையின் ரகசியம்
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ‘தி பாஸ்டன் குளோப்’ அலுவலகத்தின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்கும் மார்ட்டி பேரன், கத்தோலிக்க சபையின் சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடுத்த வழக்கறிஞர் பற்றி அந்நாளிதழில் சில நாட்களுக்கு முன்பு வெளியான துண்டு செய்தியைக் கையில் எடுப்பார். அது தொடர்பாக மேலதிக செய்திகள் வெளியாகவில்லை என்பதையும் கவனிப்பார். அந்த வழக்குடன் தொடர்புடைய பாதிரியார் கேகன் மேல் உள்ள பாலியல் புகாரைப் பற்றி விசாரிக்குமாறு அந்நாளிதழின் சிறப்பு துப்பறியும் அணியான ‘ஸ்பாட்லைட்’ குழுவிடம் பொறுப்பை ஒப்படைப்பார்.
கத்தோலிக்க சபையை எதிர்த்து வழக்காடியவழக்கறிஞர், கேகனால் பாலியல் சீண்டலுக் குள்ளானவர்கள் என்று பலரிடம் தங்களுடைய விசாரணையை ஆரம்பிப்பார்கள் ‘ஸ்பாட்லைட்’ குழுவினர். இவ்விஷயத்தை ஆராய்ந்து செல்லச் செல்ல கேகன் மட்டும் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடவில்லை; பாஸ்டனில் மட்டும் கிட்டத்தட்ட 30 பாதிரியார்கள் இது போன்ற கொடூரச் செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும். இவர்களைப் பற்றிய புகார்கள் பல வந்திருந்தாலும் அவை அனைத்தும் கத்தோலிக்க சபையால் மூடி மறைக்கப்பட்டதும், வழக்கறிஞர்களை வைத்து பேரம் பேசி நான்கு சுவர்களுக்குள் இழப்பீடு வழங்கப்பட்டதும் வெளிச்சத்துக்கு வரும். தங்களுக்குத் தெரிந்த பல மரியாதைக்குரிய பிரமுகர்களே இதற்குத் துணையாக இருந்தார்கள் என்பதையும் அறியும் ‘ஸ்பாட்லைட்’ குழு அதிர்ச்சியடையும்.
மதத்தின் நற்பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த அநீதியைக் கண்டும் காணாமல் இருப்பார்கள் அனைவரும். மதத்தில் அதீத நம்பிக்கைக் கொண்டவர்கள் சட்டப் பரிபாலன அதிகாரிகளாகவும், அரசாங்கப் பதவியிலும் இருக்கும் காரணத்தால் கத்தோலிக்க சபை யாராலும் தொட முடியாத பெரும் சக்தியாக இருக்கும். பாதிரியார்கள் குழந்தைகளுக்குக் கொடுத்த பாலியல் தொல்லைகள் பற்றிய புகார்கள்கூட நீதிமன்றத்தின் பாதுகாப்பில் சீல் செய்து பாதுகாக்கப்பட்டுவரும்.
இப்படியான இக்கட்டான சூழ்நிலையில், பாதிரியார்களால் சிறுவயதில் ரணத்தை அனுபவித்தவர்களுக்கான அமைப்பை நடத்திவரும் பில் சேவியானோ என்பவரின் மூலம் ரிச்சர்ட் சைப் என்பவரின் தொடர்பு ‘ஸ்பாட்லைட்’ குழுவுக்குக் கிடைக்கும். ரிச்சர்ட் சைப், பாலியல் குற்றச்சாட்டுக்கும் உள்ளான பாதிரியார்களுக்கு மனோதத்துவ ரீதியாக சிகிச்சை அளிப்பதுடன், இதுபோன்ற பாதிரியார்களைப் பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருபவர். அவரது அறிமுகத்துக்குப் பிறகு மிகப் பெரும் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் ஒன்று தெரியவரும். ‘ஸ்பாட்லைட்’ குழு எப்படி அனைத்துச் சிக்கல்களையும் கடந்து இந்தச் செய்தியை உலகத்துக்குக் கூறியது என்பதே படத்தின் மீதிக்கதை.
ஆதரவு தந்த கத்தோலிக்க சபை
இத்திரைப்படம் வெளியானபோது பிற்போக்குவாதி களிடமிருந்து பல எதிர்ப்புக் குரல்கள் வந்தாலும் கத்தோலிக்க சபை இத்திரைப்படத்தை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. நிகழ்ந்த தவறுகளை மறுக்க முடியாது என்றும் குறிப்பிட்டது. யாரை விமர்சித்து இத்திரைப்படம் பேசியதோ அவர்களே பாராட்டும் உன்னத படைப்பான ‘ஸ்பாட்லைட்’ திரைப்படம் ஆறு ஆஸ்கர் பரிந்துரைகளைப் பெற்று, சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த அசல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது. சரித்திரத் துல்லியம், மனோதத்துவ ரீதியான அணுகுமுறை என்று சகல அம்சங்களும் கூடிய இத்திரைப்படத்துக்கு, டாம் மெக்கார்த்தி மற்றும் ஜோஷ் சிங்கர் எழுதிய திரைக்கதை மிகப் பெரிய பலம்!
கண்முன் நடக்கும் கொடூரத்தைப் பார்க்கச் சகிக்காமல் கண்களை மூடிக்கொள்ளும் சமூகத்துக்கு மத்தியில், அந்தச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் கேள்வியை எடுத்து வைத்தது ‘ஸ்பாட்லைட்’ திரைப்படம். இத்திரைப்படத்தில் வழக்கறிஞராக வரும் மைக்கல் கார்பீடியன் கதாபாத்திரம் சொல்லும், “ஒரு குழந்தை வளர சமூகம் காரணமென்றால், ஒரு குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதற்கும் சமூகம்தான் காரணம்” என்ற வசனம் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் மறக்கக்கூடாத சமூகப் பாடம்!