மகராசன் மோகன்
mohan.m@hindutamil.co.in
‘‘முதல் படத்திலேயே ஹீரோயினாக நடிக்கத் தொடங்கினால் தான் கேரியருக்கு நல்லது என்கிற பேச்செல்லாம் இப்போது மாறிவிட்டது. என்னை எடுத்துக்கோங்க, வித்யா... எந்த ஒரு நல்ல கேரக்டருக்கும் பொருத்தமா இருப்பாங்க என்ற நோக்கத்தில்தான் கதைகள் என்னைத் தேடி வருகின்றன. அந்த அடிப்படையில் ஒரு முழுமையான ஆர்ட்டிஸ்ட்டாக என்னைப் பார்ப்பதில்தான் எனக்கும் மகிழ்ச்சி!’’ விவரமாகவே பேசுகிறார் வித்யா ப்ரதீப். தமிழில், ‘கண்ணகி’, ‘பவுடர்’, ‘இன்ஃபினிடி’, ‘எக்கோ’, ‘ஸ்ட்ரைக்கர்’ என அரை டஜன் படங்களுக்கும் மேல் கையிருப்பில் வைத்திருக்கும் வித்யா, ‘ஸ்டெம் செல் பயாலஜி’யில் பிஎச்.டி பட்டம் பெற்று மருத்துவத் துறையில் ஆராய்ச்சி பெண்மணியாகவும் திகழ்கிறார். காமதேனு மின்னிதழுக்காக அவருடன் பேசியதிலிருந்து...
உங்களது படிப்பு பின்னணிக்கும் சினிமாவுக்கும் கொஞ்சமும் தொடர்பு இல்லையே... பிறகு எப்படி திரைத் துறைக்குள் நுழைந்தீர்கள்?
தொடக்கத்தில் இருந்தே படிப்புதான் லைஃப்ல முக்கியமான விஷயம்னு ஓடிட்டு இருந்தேன். வீட்டில் பேரன்ட்ஸோட விருப்பமும் நல்லா படிச்சோமா... வேலைக்கு போனோமான்னு இருக்கணும்கிறதா தான் இருந்தது. அவங்களோட விருப்பத்தை நிறைவேற்றுவதை விட நமக்கு வேறென்ன வேலை? இதை மனதில் வெச்சுத்தான் ‘பயோ டெக்னாலஜி’ முதுகலைப் படிப்பை முடித்து, ‘ஸ்டெம் செல் பயாலஜி’ பிரிவில் ஆராய்ச்சி பட்டமும் பெற்றேன்.
சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜூனியர் சயின்டிஸ்ட் வேலையும் கிடைத்தது. அப்படியே ஓடிட்டிருந்த நேரத்தில் தான், விளம்பர படத்துல நடிக்கலாமேன்னு ஒரு ஆசை மனசுல விழுந்துச்சு. வீட்டில், அலுவலகத்தில் யாரிடமும் சொல்லாமல் பிரத்யேகமாக போட்டோ ஷூட் எல்லாம் செய்து உள்ளுக்குள் நுழைந்தேன். தொடர்ந்து விளம்பர படங்களும் அமைஞ்சது.
என்னோட விளம்பரப் படங்களைப் பார்த்த திரைப்பட இயக்குநர் விஜய், தன்னோட ‘சைவம்’ படத்துல நடிக்க அழைப்பு விடுத்தார். தொடக்கத்தில் சற்று யோசித்தேன். ஆனா அவரைச் சந்திச்ச பின்னாடி, என்னோட எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். இப்படி ஒரு நல்ல மனிதரான்னு தோணுச்சு; நடிக்க ஒப்புக்கொண்டேன். அடுத்தடுத்து ‘பசங்க 2’, ‘அச்சமின்றி’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘தடம்’ என எனது கேரியர் வளரத் தொடங்கியது.
‘சைவம்’ திரைப்படத்தில் அறிமுகமான நீங்கள் படிப்படியாக உயர்ந்துதான் தற்போது கதாநாயகி என்ற இடத்தை அடைந்திருக்கிறீர்கள். இந்த கிராஃப் அமைய இடைப்பட்ட காலகட்டத்தில் நிறைய சவால்களை எதிர்கொண்டிருக்க வேண்டுமே?
உன்னுடைய கேரியர் திரைத்துறைதானா என 10 வருடத்துக்கு முன்பு கேட்டிருந்தால் இல்லை என்பதுதான் எனது பதிலாக இருந்திருக்கும். அந்த அளவுக்கு படிப்பில் ஃபோகஸாக இருந்தேன். மருத்துவமனையில் ஆராய்ச்சி பணிக்கு இடையேதான் சினிமாவுக்கு நேரம் ஒதுக்கும் சூழல் அமைந்தது. அதுவும் எனக்கு பிடித்தமான நல்ல கதாபாத்திரங்களாக அமைந்தால் மட்டும் தான் ஏற்றுக்கொள்வேன். ‘சைவம்’, ‘பசங்க 2’ மாதிரியான கதைகளில் நடித்த போது, “இந்த மாதிரி கேரக்டர் வேண்டாம்; கேரியர் சரியாக அமையாது” என்று நலம் விரும்பிகள் சொன்னார்கள். ஆனால், அது மாதிரியான கேரக்டர்களில் நடிப்பது எனக்கு தவறாக தெரியவில்லை. விதவிதமான கதாபாத்திரங்கள் தொடும்போதுதான் நல்ல அனுபவம் கிடைக்கும் என நினைத்தேன். அப்படியே தொடர்ந்துதான் ஒரு கட்டத்தில் ‘தடம்’ படத்தில் கதாநாயகி வாய்ப்பைப் பெற்றுத் தந்தது.
இப்போது நாயகியாக நிறைய வாய்ப்புகள். நான் என்னை முதலில், ஆர்ட்டிஸ்ட் என்கிற மனோபாவத்தில் தான் வடிவமைத்துக் கொள்கிறேன். நாம் லீட் கேரக்டர் மட்டும்தான் செய்ய வேண்டும் என ஒருபோதும் நினைத்தில்லை. அதனால்தான், ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் வில்லியாக ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்தேன். இதெல்லாம்தான் எனக்கு திருப்தி.
உங்களின் நடிப்புச் சரித்திரத்தில் அடுத்து உருவாகி வரும் ‘கண்ணகி’ என்ன மாதிரியான களம்?
ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார் முழுக்க முழுக்க பொறுப்பை எடுத்துக்கொண்டு உருவாக்கி வரும் திரைப்படம். கதை பற்றி இப்போதைக்கு அவ்வளவாகப் பேச முடியாது. 4 ஹீரோயின்களை மையமாகக் கொண்டு கதை சுழலும். பொள்ளாச்சி, கோவை என படப்பிடிப்பு நடந்தது. இன்னும் சில ஷெட்யூல்ஸ் பாக்கி இருக்கு. மிகவும் அர்த்தமுள்ள அடையாளத்தை கொடுக்கும் படமாக கண்ணகி அமையும். அதேபோல், ‘எக்கோ’, ‘இன்ஃபினிட்டி’, ‘பவுடர்’ என அடுத்தடுத்து வர உள்ள படங்களும் தனி அம்சம் கொண்டவை. எதுவும் பெரிய பட்ஜெட் இல்லையென்றாலும் பெரிய அளவில் பேசப்படும் கதைகள்.
முழுநேர சினிமாவாசியாக மாறிவிட்டீர்களே. இனி மருத்துவ ஆராய்ச்சிப் பணிகளை கவனிப்பது எப்படி?
சினிமாவா படிப்பா என்றால், இப்போது என்னால் இரண்டில் எதையுமே விட்டுக்கொடுக்க முடியாது. ‘தடம்’ திரைப்படத்துக்கு பிறகு நிறைய படங்கள் நடிக்கும் வாய்ப்பு அமைந்ததால் சமீபத்தில்தான் மருத்துவ ஆராய்ச்சி தொடர்பான வேலையை விட்டேன். இந்த சூழலில்தான் கரோனா வைரஸ் தொற்று காரணமாக லாக் டவுன் காலகட்டமும் வந்தது. இடைப்பட்ட இந்த நேரத்தை வீணாக்க வேண்டாம் என என்னோட படிப்பு சார்ந்த துறையில் சர்வதேச அளவிலான ஆராய்ச்சி கட்டுரைகளைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறேன்.
அந்த வரிசையில், ‘இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் கார்னியா’, ‘இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் செல் தெரபி’ ஆகிய ஜர்னல்களில் எனது கட்டுரைகளை பதிவேற்றம் செய்துள்ளேன். நடிப்பு பணிகளுக்கு இடையே என்னோட மருத்துவ ஆராய்ச்சியில் இதை முக்கிய பங்களிப்பாகவும், அங்கீகாரமாகவும் பார்க்கிறேன்.
தமிழைத் தவிர பிறமொழிப் படங்களில் அதிக கவனம் செலுத்தாதது போல் தெரிகிறதே?
கன்னடத்தில் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தேன். அங்கே அது மிகப் பெரிய வெற்றி. இதுபோல மற்ற மற்ற மொழிகளிலும் நடிக்க தொடர்ந்து கதைகள் வருகின்றன. அதில் நல்லவிதமான கதைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்துகிறேன். இந்த கரோனா முடிந்த பிறகு தென்னிந்திய சினிமாவில் அதிகம் பேசப்படும் நடிகையாக இருப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது.