ஓ.டி.டி. உலா: ‘சின்ன' கதையில் பெரிய மெசேஜ்!


எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

பேசாப் பொருள் ஒன்றை ஆழமாய் அலசியிருப்பதுடன் அர்த்தமுள்ள விவாதத்தையும் முன்னெடுக்கிறது, அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகி இருக்கும் ‘ஏக் மினி கதா’ என்ற தெலுங்கு திரைப்படம்.

படித்து பொறுப்பான பணியில் இருக்கும் பண்பான இளைஞன் சந்தோஷ். காதல், கல்யாணம் எல்லாம் தானாகக் கைகூடி வரும்போதும் சந்தோஷமின்றி விலகிச் செல்கிறான். பெரிய பிரச்சினையாக அவன் உள்ளுக்குள் உழல்வதன் பின்னே ‘சின்ன’ காரணம் ஒன்று ஒளிந்திருக்கிறது. பால்யத்தில் பள்ளி நண்பன் ஒப்பிட்டுச் சொன்னதை உண்மையென நம்பியவனுக்கு, ஆள் வளர தனது ஆண்குறியின் அளவு குறித்த தாழ்வு மனப்பான்மையும் சேர்ந்தே அலைக்கழிக்கிறது. இந்தத் தடுமாற்றம் கல்லூரிப் பருவத்தில் பூத்த கவர்ச்சி காதலுக்கு முட்டுக்கட்டை போடுவதுடன், பிற்பாடு பெண் என்றாலே பின்வாங்கும் அளவுக்கு அவனை மாற்றுகிறது. ஆனபோதும் இயல்பான ஆணின் ஆசைகளும், கனவுகளுமாக உள்ளுக்குள் அவன் ஏங்கித் தவிக்கிறான்.

உதவுகிறேன் பேர்வழி என அவன் நண்பன் ஏடாகூடங்களில் மாட்டிவிடுகிறான். மகனின் தடுமாற்றத்தைத் தவறாகப் புரிந்துகொள்ளும் பெற்றோர் அவனுக்குத் திருமண ஏற்பாடு செய்கின்றனர். திருமணத்தைத் தவிர்க்க அவன் போடும் திட்டங்கள் எல்லாம் ஜாலி கலாட்டாவாக நமுத்துப்போகின்றன. மணமான பின்னர் புதுமனைவியுடன் தனித்திருப்பதைத் தவிர்க்க புதிய திட்டங்கள் போடுகிறான். அந்த திட்டங்கள் பலித்ததா, அவனது அளவான அவஸ்தையும், ஆசை மண வாழ்க்கையும் என்னவானது என்பதை நகைச்சுவை கொப்பளிக்க விவரிப்பதே ‘ஏக் மினி கதா’ திரைப்படம்.

x