ஜெய்
jeyakumar.r@hindutamil.co.in
கரோனா நம் வாழ்க்கை முறையை வெகுவாக மாற்றியிருக்கிறது. முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல் என்று அடியோடு மாறியிருக்கும் நாம், இதற்கு முன் இருந்த பல விஷயங்களில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களின் சாட்சியமாகவும் இருக்கிறோம். அவற்றுள் ஒன்றுதான் ஓடிடி தளங்கள். இந்த வசதி பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டாலும் இப்போதுதான் அது தன் முழுப் பயனை அடையத் தொடங்கியிருக்கிறது.
திருப்புமுனை தந்த த்ரிஷ்யம் 2
தமிழைப் பொறுத்தவரை திரையரங்குகள் பெருந்தொற்றால் மூடியிருக்கும் சூழலில் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ படம் மட்டும் நேரடியாக ஓடிடியில் வெளியானது. விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்துக்கு ஓடிடி-யில் நேரடியாக வெளிவரும் துணிச்சல் இருக்கவில்லை. அதன் ரசிகர்களுக்காக முதலில் திரையரங்கிலேயே வெளியானது. ஆனால், விஜய்யைப் போல் மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் மோகன்லாலின் புதிய படமான ‘த்ரிஷ்யம் 2’ நேரடியாக ஓடிடி-யில் வெளியானது. இந்தியா மட்டுமல்லாது சீனா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இப்படத்தைத் துணிச்சலுடன் ஓடிடி-யில் வெளியிட்டது அந்தப் படக் குழு.