ஓ.டி.டி. உலா: கொலையில் பிறக்கும் மர்மங்கள்


எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

ஓடிடி தளங்களில் பிற மொழிகளை ஒப்பிட, கவனம் ஈர்க்கும் வலைத்தொடர்கள் தமிழில் மிகக் குறைவு. இந்தக் குறையை நிவர்த்திக்க முயன்றிருக்கிறது, ‘டிஸ்னி+ ஹாட்ஸ்டார்’ தளத்தில் அண்மையில் வெளியாகி யிருக்கும் ‘நவம்பர் ஸ்டோரி’ என்ற வலைத்தொடர்.

பிரபல க்ரைம் எழுத்தாளரான கணேசன், நினைவுகளைச் செல்லரிக்கும் அல்சைமர் நோயின் ஆரம்ப கட்டத்தில் அவதிப்படுகிறார். அப்பாவின் நோய் முற்றிவிட்டால் தன்னைக்கூட மறக்கவும் வாய்ப்புண்டு என்பதால் பெரும் செலவிலான ஸ்டெம் தெரபி சிகிச்சைக்கு அவரது பாச மகள் ஏற்பாடு செய்கிறாள். இதற்காகத் தங்களது பூர்விக வீட்டை விற்கும் மகளின் முயற்சிக்குத் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். அந்தப் பழைய வீட்டோடு அப்பா உணர்வுபூர்வமாக பிணைந்திருப்பதும், அவ்வப்போது அங்கே சென்று வருவதும் புதிராய் மகளுக்குப் புலப்படுகிறது. சம்பவத்தன்று தாமதமாய் வீடு திரும்பும் அவள், அங்கில்லாத தந்தையைத் தேடி பழைய வீட்டுக்குச் செல்கிறாள். அங்கே ஒரு பெண் கொலையாகி கிடக்க, அருகில் பிதற்றியபடி அப்பா அமர்ந்திருக்கிறார். அங்கிருந்து தொடங்குகிறது மர்மச் சுழல்.

தொடரின் முதல் அத்தியாயத்தில் வரும் இந்தக் கொலையை மையமாகக் கொண்டே கதையின் எல்லாத் திருப்பங்களும் சுழல்கின்றன. அடுத்து வரும் 6 அத்தியாயங்களில் முன்னும் பின்னுமாகக் காலவெளியில் அலைபாயும் கதையில் வேறு சில கொலைகளும் மர்மங்களும் வெளிப்படுகின்றன. இறுதி அத்தியாயம்வரை கொலையாளி யார் என்பது உட்பட அதுவரையிலான அத்தனை மர்ம முடிச்சுகளையும் இறுக்கிவைக்கிறார்கள். இருளில் மெல்ல ஊர்ந்து வெளிச்சம் பட்டதும் படமெடுக்கும் நாகம் போல, ஆரம்ப அத்தியாயங்களில் சுருண்டு நகரும் கதை கடைசி இரண்டு அத்தியாயங்களில் சீறுகிறது.

x