உலகம் சுற்றும் சினிமா - 51: மவுனமும் மான்டேஜும் எழுப்பும் சித்திரங்கள்


சினிமா என்னும் காட்சி ஊடகத்துக்கு மொழி ஒரு தடையாக இருப்பது பெரும் நகைமுரண். கிம்-கி-டுக் போன்ற சிறந்த இயக்குநர்கள் வசனமே இல்லாமல் ‘மொபியஸ்’ போன்ற சிக்கலான திரைக்கதைகளை நேர்த்தியான காட்சி மொழியாகத் திரையில் பதிவு செய்திருக்கிறார்கள். மவுனப் படங்களின் காலம் முடிந்து வெகுகாலத்துக்குப் பின்னர், இந்தியாவில் வெளியான ‘பேசும் படம்’ எனும் மவுனப்படம்கூட, காட்சிமொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான்.

ஒரு திரைப்படத்துக்கு மொழி தேவையில்லை என்ற நிலைமை வந்துவிட்டாலே, அப்படம் இவ்வுலகத்தின் அனைத்து மக்களும் பார்க்கக்கூடிய படைப்பாகிவிடுகிறது. 1927-ல் ஒலிக்கோர்வையுடன் கூடிய திரைப்படங்கள் வர ஆரம்பித்த பிறகு, மவுன சினிமாக்கள் கலைவடிவின் மறக்கப்பட்ட வரலாற்று விழுமியங்களாகவே இருக்கின்றன. மவுன சினிமா யுகத்தில் வெளிவந்து இன்றளவும் திரைத் துறையினர் வியந்து போற்றும், உலகளவில் திரைப்படக் கலையைப் பயிலும் மாணவர்களுக்குப் பாடமாக இருக்கும் திரைப்படம் ‘பேட்டல்ஷிப் பொடம்கின்’.

1925-ல் வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தை ‘மான்டேஜ்’ உத்தியின் தந்தை என்றழைக்கப்படும் செர்ஜே ஐஸன்ஸ்டைன் இயக்கினார். துண்டு துண்டான சிறிய காட்சிகளை அடுத்தடுத்து அடுக்குவதன் மூலம் கதையின் தீவிரத்தைக் கூட்டும் உத்திதான் ‘மான்டேஜ்’. ‘பேட்டல்ஷிப் பொடம்கின்’ திரைப்படத்தில் பொடம்கின் போர்க்கப்பல் போருக்குத் தயாராகும் காட்சியும், ஒடேசா நகரப் படிக்கட்டுகளில் நடக்கும் துப்பாக்கிச்சூடு காட்சியும் மான்டேஜ் உத்திக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். ஒடேசா நகரப் படிக்கட்டு காட்சிகள் ‘ஒடேசா காட்சி வரிசை’ என்ற பெயரில் உலகின் பல திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக இருக்கிறது.

செம்புரட்சியின் வரலாறு

ரஷ்யாவில் ஜார் மன்னன் ஆட்சிக்காலத்தில் பாட்டாளி வர்க்கத்தின் கை ஓங்க ஆரம்பித்த காலகட்டத்தில் கதை ஆரம்பிக்கிறது. கடலில் நங்கூரமிட்டிருக்கும் பொடம்கின் என்ற போர்க்கப்பலில் மாலுமியான வாக்குலின்சுக் தன் சக மாலுமிகளிடம், “தோழர்களே நாடெங்கும் புரட்சியின் வீரியம் பரவத் தொடங்கியுள்ளது. நாமும் கொடுங்கோலன் ஜாரை எதிர்த்து புரட்சிப்போரில் இறங்க வேண்டும்” என்று அறைகூவல் விடுவார். புரட்சியில் பங்குகொள்ள சக மாலுமிகளும் ஒப்புக்கொள்வார்கள். ஜார் மன்னனுக்கு விசுவாசமாக இருக்கும் கப்பல் அதிகாரிகளை எதிர்க்க ஒரு காரணம் வேண்டும் அல்லவா? மாலுமிகளுக்குக் கெட்டுப்போன, புழுக்கள் நெளியும் மாமிசமும் அதிகாரிகளுக்கு நல்ல மாமிசமும் கொடுக்கப்படும் அநியாயத்தைப் போராட்டத்தின் ஆரம்பப் புள்ளியாகத் தேர்ந்தெடுப்பார்கள் மாலுமிகள்.

கொடுக்கப்படும் மாமிசத்தைச் சாப்பிட மறுக்கும் மாலுமிகளைச் சுட்டுத்தள்ள உத்தரவிடுவான் மேலதிகாரி. கப்பலின் காவல் அதிகாரிகள் மாலுமிகளை நோக்கி சுடப்போகும் போது, “தோழர்களே, யாரைச் சுடப்போகிறீர்கள்?” என்று உணர்வு பொங்கக் கேட்பார் வாக்குலின்சுக். மனம் மாறி புரட்சியின் பக்கம் சேருவார்கள் காவல் அதிகாரிகள். இதற்குள் மேலதிகாரிகள் தங்கள் துப்பாக்கியை மாலுமியை நோக்கி நீட்ட, சண்டை ஆரம்பித்துவிடும். மேலதிகாரியின் தோட்டாவுக்கு வாக்குலின்சுக் பலியாவார். அவருடைய உடல் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டு, ‘ஒரு கலயம் கஞ்சிக்காகக் கொல்லப்பட்டவர்’ என்று எழுதப்பட்டு ஊரை நோக்கியவாறு வைக்கப்படும். அடுத்த நாள் அவருக்கு நடந்த அநியாயம் ஊரெங்கும் காட்டுத்தீ போல் பரவும். ஊரின் மூலை முடுக்கில் இருந்து எல்லாம் மக்கள் சாரை சாரையாக அவரது உடலைக் காண வருவார்கள். பரிதாபமாக உயிரிழந்த அவரது நிலையைக் கண்டு அழுவார்கள். சடலத்தின் கைகளுக்குக் கண்ணீர் கலந்த முத்தங்கள் தருவார்கள். சிறிது நேரத்தில் அழுகைகள் கோபம் கொப்பளிக்கும் கூக்குரல்களாக மாறும். அது புரட்சியின் குரலாக எதிரொலிக்க ஆரம்பிக்கும்.

ஒடேசா நகரப் படிக்கட்டுகளில் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களை ஆண், பெண், குழந்தைகள் என்று வித்தியாசம் பார்க்காமல் கொத்துக் கொத்தாக ஜார் மன்னனின் படைகள் சுட்டுத் தள்ள ஆரம்பிக்கும். இத்தனை இன்னல்
களையும் தாண்டி ரஷ்யப் பாட்டாளி வர்க்கம் எப்படி சுதந்திரத்தை வென்றெடுத்தது என்பதுதான் ‘பேட்டல்ஷிப் பொடம்கின்’ சொல்லும் கதை.

ஐஸன்ஸ்டைனின் திரைத் தொண்டு 

ஐஸன்ஸ்டைன் எழுதிய ‘ஃபிலிம் ஃபார்ம்’, ‘ஃப்லிம் தியரி’ போன்ற ஆய்வுக் கட்டுரைகள் அவர் திரையுலக்கு அளித்த மாபெரும் கொடை என்றே இன்றளவும் கருதப்படுகின்றன. இன்று திரையுலகில் கையாளப்படும் பல்வேறு புதிய உத்திகளை, காட்சிகளுடன் பார்வையாளர்களை உணர்வுபூர்வமாக ஒன்றவைக்கக்கூடிய சூட்சுமங்கள் பலவற்றுக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்தது ‘பேட்டல்ஷிப் பொடம்கின்’ திரைப்படம். உலகின் தலைசிறந்த திரைப்படங்கள் என்று யாரேனும் ஒரு பட்டியல் தயாரித்தால், அதன் முதல் வரிசையில் கண்டிப்பாக இப்படத்துக்கு இடம் இருக்கும்.

இப்பேர்ப்பட்ட மாமேதையான ஐஸன்ஸ்டைனை ரஷ்ய அதிபரான ஸ்டாலின் மிகவும் கடுமையாகவே நடத்தினார். ‘பேட்டல்ஷிப் பொடம்கின்’ திரைப்படத்துக்குப் பிறகு ஐஸன்ஸ்டைன் இயக்கிய ‘அக்டோபர்’ என்ற படத்தை ஸ்டாலின் கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தினார். அத்திரைப்படத்தின் வடிவம் முழுவதுமாக சிதைக்கப்பட்டுத்தான் வெளியானது.

‘பேட்டல்ஷிப் பொடம்கின்’ வெளியான சமயத்தில், “இத்திரைப்படம் போல்ஷ்விக் புரட்சியை ஆதரிக்கிறது. இது ஒரு புரட்சிப் படம் என்று வெளிப்படையாகத் தெரிகிறது” என்று குறிப்பெழுதி அப்போதைய பம்பாய் கமிஷனர் இத்திரைப் படத்துக்குத் தடை விதித்தார். இந்தியா சுதந்திரம் அடையும் வரையில் இத்தடை அமலிலிருந்தது.

ஒவ்வொரு முறையும் இத்திரைப்படத்திலிருந்து ஒரு புது விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாம். வெறுமனே திரைப்பதிவாக மட்டும் அல்லாமல் ஒரு வரலாற்று ஆவணமாகத் திகழும் ‘பேட்டல்ஷிப் பொடம்கின்’ திரைப்படம் சினிமா பயில விரும்புபவர்கள் தவறவிடக்கூடாத படைப்பு!

x