கர்ணன் - விமர்சனத் தொகுப்பு


திரை விமர்சனம் என்பது வெவ்வேறு கோணங்களைக் கொண்டது. அதன் அடிப்படையில், பல்வேறு இதழ்களில் வெளியாகும் திரை விமர்சனங்களின் தொகுப்பை ‘காமதேனு’ வாசகர்களுக்குத் தருகிறோம். இது திரைப்படங்களைப் பற்றிய முழுமையான, செழுமையான பார்வையைத் தரும் என்று நம்புகிறோம்.

‘1996 - 2001 காலகட்டத்தில் தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில தலைவர்களின் பெயர்களைப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வைக்கக்கூடாது என கலவரங்கள் நடந்தன. இந்தப் பின்னணியில் பொடியன்குளம் கிராமத்தைப் பற்றிய கதையாக 'கர்ண'னை உருவாக்கியுள்ளார் மாரி செல்வராஜ்’ என்று படத்தின் ஒன்லைன் சொல்லும் ‘நக்கீரன்’ இணைய இதழ், ‘தனுஷ், லால், லட்சுமி பிரியா, யோகி பாபு இவர்களெல்லாம் நன்றாக நடித்திருக்கிறார்கள் அல்லது பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் கிளிஷே ஆகிவிட்டது. அவ்வளவு சிறந்த நடிப்பு. தலைப்பு உட்பட மொத்த படமுமே தனுஷ் தோளில்... அசால்ட்டாகச் செய்திருக்கிறார். குறிப்பாக, க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியின்போது அவரது உடல்மொழியும் முகமும் அபாரம். மற்றபடி நட்ராஜ் (நட்டி), ரஜிஷா விஜயன், அழகம்பெருமாள் என அனைவருமே அந்தந்த பாத்திரமாகவே தெரிகிறார்கள். அதுவே சிறப்பும்கூட. ஊர்மக்களையும் நடிக்க வைத்திருப்பது, கதையோடு நம்மை ஒன்றிவிடச் செய்கிறது. அவர்களும் இயல்பாகவே நடித்திருக்கிறார்கள்’ என்று பாராட்டியிருக்கிறது.

‘குணச்சித்திர கதபாத்திரத்தில் நடித்துள்ள லால், தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். பாட்டியிடம் திருடும் காட்சியில் கவர்கிறார்’ என்று கூறியிருக்கும் ‘மாலை மலர்’ இணைய இதழ், ‘தனுஷ் போன்ற மாஸ் நடிகர் படத்தில் இருந்தாலும், அவருக்காகக் கதையில் எந்தவித மாற்றமும் செய்யாமல், தான் சொல்லவந்ததை நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார் மாரி செல்வராஜ். மெதுவான திரைக்கதை படத்திற்குப் பலவீனம். படத்திற்குப் பெரிய பலம் சந்தோஷ் நாராயணன் இசை. பாடல்களில் அதிக கவனம் செலுத்திய இவர், பின்னணி இசையிலும் ஒரு சில இடங்களில் கவனித்து இருக்கலாம். கிராமத்து அழகை மாறாமல் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்’ என்று குறிப்பிட்டிருக்கிறது.

‘சமயம் தமிழ்’ இணைய இதழ், ‘ராணுவத்தில் தேர்வாகக் காத்திருக்கும் கோபக்கார வாலிபரான கர்ணன் தன் மக்களுக்காகப் போராட முடிவு செய்யும்போது கதை சூடுபிடிக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்கும், அதிகாரம் படைத்தவர்களுக்கும் இடையேயான மோதல் என்கிற பழைய கதை போன்று தெரிந்தாலும், மாரி செல்வராஜின் வித்தியாசமான அணுகுமுறையால் படம் தனித்துத் தெரிகிறது. முதல் பாதியில் அவசரமே படாமல் தன் கதாபாத்திரங்களை அழகாகக் காட்டியிருக்கிறார். பொடியன்குளம் மக்களுக்காகவும், அவர்களின் போராட்டத்திற்காகவும் நம்மைக் கவலைப்பட வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ்’ என்று பாராட்டியிருக்கிறது.

x