கடந்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமா பிரத்யேகமான ஒரு வகைமையை உருவாக்கியுள்ளது. ஆம், மண்சார்ந்த படைப்பு எனும் வகைமையின் தொடர்ச்சியாக, விவசாயம் / விவசாயி சார்ந்த கதைக்களத்தின் அடிப்படையிலான வகைமையை அறிமுகப்படுத்தி அடுத்தடுத்து படங்கள் வெளியாகின்றன. விவசாயத்தைப் பற்றி படங்கள் வருவது நல்ல விஷயம்தானே என்று நீங்கள் கேட்கக்கூடும். தமிழில் சமீபத்தில் வெளிவந்த விவசாயக் கதைக் களம் கொண்ட திரைப்படங்கள் விவசாயத்தின் எதார்த்தச் சிக்கல்களை, விவசாயிகளின் உண்மையான பிரச்சினைகளைப் பேசத் தவறிவிட்டன என்பதே கசப்பான உண்மை.
எதிர்மறை விளைவுகள்
தமிழில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் நில உரிமையாளரான விவசாயிகளின் வாழ்வியலைச் செயற்கைத்தனத்துடன் காட்சிப்படுத்திவருகின்றன என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. விவசாயிகளின் அசலான சிக்கல்களை விவாதிக்காமல் விவசாயத்தின் எதிரி, விவசாயிகளின் பிரச்சினை எனக் கட்டமைக்கப்பட்ட மாய பிம்பத்தின் வழியாகக் கற்பனை தளத்துக்கு நகர்த்தும் இம்முயற்சிகளால், வருங்கால சந்ததியினரிடமிருந்து விவசாயம் அந்நியப்படுத்தப்படும் அபாயமும் உள்ளது.
நேர்மையாகச் சொன்னால், விவசாயிகளின் உண்மையான பிரச்சினைகளை வைத்து வறட்சியான திரைக்கதையைத்தான் எழுத முடியும். அந்தத் திரைக்கதையை எப்படி சுவாரசியமான திரைப்படமாக எடுக்க முடியும் என்ற கேள்விக்கான பதில்தான்
2019-ல் வெளிவந்த ‘தி பாய் ஹூ ஹார்னஸ்டு தி விண்ட்’ திரைப்படம். ஆப்பிரிக்காவின் தென்கிழக்கு மூலையில் உள்ள மலாவி என்ற நாட்டில் கோரத் தாண்டவமாடிய வறுமையை, உயிர் குடிக்கும் பஞ்சத்தைத் தன் அறிவின் துணை கொண்டு வெற்றிபெற்ற ஒரு சிறுவனின் கதை இது.
சோதனைகளுக்கு நடுவே கண்டுபிடிப்பு
மலாவி நாட்டில் உள்ள சின்ன கிராமமான காசுங்குவில் வளரும் வில்லியம் கம்க்வம்பாவின் குடும்பம், வறுமையான விவசாயக் குடும்பம். தாங்கள் பசித்திருந்தாலும் பரவாயில்லை தங்கள் பிள்ளைகள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என்று நினைக்கும் வில்லியமின் பெற்றோர்கள் அவனை அரும்பாடுபட்டு பள்ளிக்கு அனுப்புவார்கள். அறிவியலில் ஆர்வம் கொண்ட வில்லியம் பள்ளி நேரம் போக, ஊரில் இருக்கும் குப்பைக் கிடங்கு போன்ற இடத்தில் பழைய கருவிகள் எதையாவது தேடி அதில் சில பரிசோதனைகளைச் செய்துபார்ப்பதில் ஆர்வமாக இருப்பான்.
உள்ளூரில் இருக்கும் பெரு நிறுவனத்தின் சதி, ஊழல் நிறைந்த அரசாங்கம் மற்றும் இயற்கையின் கருணையற்ற தன்மையினால் அவர்கள் ஊரில் பஞ்சம் ஆரம்பிக்கும். வில்லியமின் படிப்புக்குப் பணம் கட்டமுடியாமல் போகும். இருந்தாலும் தலைமையாசிரியருக்குத் தெரியாமல் அறிவியல் வகுப்புக்கு மட்டும் செல்வான் வில்லியம். தன் அக்காவின் மேல் காதலில் இருக்கும் அறிவியல் ஆசிரியரைப் பயன்படுத்தி பள்ளி நூலகத்தையும் பயன்படுத்திக்கொள்வான். அங்கே அவன் பார்க்கும் ‘யூசிங் எனர்ஜி’ என்ற புத்தகத்தின் மூலம் மின்சாரமே இல்லாத தன் கிராமத்தில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து தண்ணீர் பம்ப் மூலம், மழை இல்லாத காலத்திலும் விவசாயம் செய்யலாம் என்ற யோசனை உதிக்கும்.
இதற்கிடையே, பள்ளி நிர்வாகத்தை ஏமாற்றி வில்லியம் பள்ளிக்கு வருவதைத் தலைமையாசிரியர் கண்டுபிடித்துவிடுவார். அடுத்தடுத்து அவனுக்கு நெருக்கடிகள் உருவாகும். அவன் குடும்பத்தின் சிறிய தானிய சேமிப்பும் பஞ்ச காலத்தில் கொள்ளை போகும். சில நாட்களில் அவனுடைய அக்கா யாரிடமும் சொல்லாமல் அறிவியல் ஆசிரியருடன் ஓடிச்சென்றுவிடுவாள். இந்தச் சவாலான சூழலில் வில்லியம் காற்றாலையைக் கட்டி முடித்தானா அவனது கிராமம் பஞ்சத்திலிருந்து தப்பியதா என்பதே படத்தின் மீதிக் கதை.
உண்மைக் கதை
இத்திரைப்படம் வில்லியம் கம்க்வம்பா என்ற உண்மை சிறுவனின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. அந்தச் சிறுவன் எழுதிய சுயசரிதையான ‘தி பாய் ஹூ ஹார்னஸ்ட் தி விண்ட்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே படத்தின் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. வில்லியம் என்ற பதினான்கு வயது சிறுவனின் பார்வையிலேயே, இந்த உலகம் நமக்குக் காட்டப்படுகிறது. பஞ்சம், அரசியல்வாதிகளின் அடாவடிகள், தனியார் நிறுவனங்களின் கோர முகம், அதிகாரிகளின் வறட்சியான கண்டிப்பு என அனைத்தையும் படம் முழுக்க அண்ணாந்து பார்த்தவாறே கடந்துவருகிறான் வில்லியம். படத்தின் இறுதியில், தான் கட்டிய காற்றாலையின் மீது அவன் ஏறி நின்று பார்க்கும்போது அவன் சந்தித்த அனைத்துப் பிரச்சினைகளும் அவன் காலடியில் சிறியதாகக் கிடப்பதுபோல் தோன்றும். அந்தக் காட்சி நெகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் ஒருசேரத் தரும். மதியைக் கொண்டு விதியை வெல்லும் அவனது பூரிப்பு நமக்கும் தொற்றிக்கொள்ளும்.
பிரபல நடிகரான சிவெட்டல் எஜியோஃபர் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும், வில்லியமின் தந்தை வேடத்திலும் மிக அற்புதமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். இத்திரைப்படம் சண்டான்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு விருதைப் பெற்றது.
விவசாயம் என்பது ஓர் அடையாளச் சின்னம் மட்டுல்ல, அது அத்தியாவசிய தேவை என்பதை உலகுக்கு உணர்த்தும் இத்திரைப்படம், நம் தமிழ் சினிமா இயக்குநர்கள் அவசியம் பார்க்க வேண்டிய அசல் படைப்பு!