விமர்சனத் தொகுப்பு - காடன்


திரை விமர்சனம் என்பது வெவ்வேறு கோணங்களைக் கொண்டது. அதன் அடிப்படையில், பல்வேறு இதழ்களில் வெளியாகும் திரை விமர்சனங்களின் தொகுப்பை ‘காமதேனு’ வாசகர்களுக்குத் தருகிறோம். இது திரைப்படங்களைப் பற்றிய முழுமையான, செழுமையான பார்வையைத் தரும் என்று நம்புகிறோம்.

‘தங்களுக்குச் சொந்தமான காட்டை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிடுகின்றனர் ராணாவின் குடும்பத்தினர். சிறுவயதிலிருந்தே காட்டில் வளரும் ராணா, அந்தக் காட்டின் பாதுகாவலராக இருக்கிறார். சரளமாக ஆங்கிலமும் பேசி அசத்துகிறார். அந்தக் காட்டுக்குள் வாழும் யானைகள், புலிகள் ஆகியவற்றுக்கு அவர் பாதுகாப்பாக விளங்குகிறார். அந்தக் காட்டை அழித்து ஒரு குடியிருப்பை உருவாக்க ரியல் எஸ்டேட் நிறுவனம் முயல்கிறது. வனவிலங்குகள் வாழ்விடத்தை இழக்கும் அபாயம் ஏற்படும் என்பதனால் ராணா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதையடுத்து என்ன ஆனது, இதனை ராணா தடுத்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை’ என்று படத்தைப் பற்றிய அறிமுகத்தைத் தருகிறது ‘மாலை மலர்’ நாளிதழ். மேலும், ‘காடனாக நடித்துள்ள ராணா, கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வனத்துக்கும், விலங்குக்கும், மனிதனுக்கும் உள்ள உறவைத் தன் நடிப்பின் மூலம் மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். யானைப் பாகனாக நடித்துள்ள விஷ்ணு விஷால் குறைந்த அளவிலான காட்சிகளே வந்தாலும், கொடுத்த வேலைகளைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்’ என்றும் அந்த இதழ் பாராட்டியிருக்கிறது. 

‘தனது கும்கி யானை ஜில்லுவுடன் அமைச்சரின் ஆட்கள் காட்டு யானைகளை அடக்க உதவி செய்ய வருகிறார் மாறன். அவருடன் வயதான ஒருவரும் வருகிறார். வந்த இடத்தில் மாறனுக்கு அருவி (ஜோயா ஹுசைன்) மீது காதல் ஏற்படுகிறது. தங்களின் உரிமைக்காகவும், காட்டைப் பாதுகாக்கவும் போராடும் கும்பலைச் சேர்ந்தவர் அருவி. அருவி மற்றும் மாறன் நிலையைப் பார்த்து பரிதாபப்படும் அருந்ததி (ஸ்ரியா பில்காவ்ன்கர்) கதாபாத்திரத்திற்குப் பெரிதாக முக்கியத்துவம் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. கதையை அழகாகச் சொல்கிறார் பிரபு சாலமன். ஆனால் க்ளைமாக்ஸில்தான் அறிவுரை வழங்கியிருக்கிறார்’ என்கிறது ‘சமயம் தமிழ்’ இணைய இதழ். 

‘முழுக்க முழுக்க வனப்பகுதியில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளரின் பங்கு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. காடுகளின் அழகை மிக நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளார் ஏ.ஆர்.அசோக்குமார். அதேபோல் ரசூல் பூக்குட்டியின் ஒலிக்கலவையும் சிறப்பாக அமைந்துள்ளது’ என்று பாராட்டியிருக்கிறது ‘புதிய தலைமுறை’ விமர்சனம். 
    
‘யானை டாக்டர் என்று வர்ணிக்கப்படும் விலங்கியல் மருத்துவர் வி.கிருஷ்ணமூர்த்தியைக் கொஞ்சம் நினைவூட்டும் விதமாக காடன் கதாபாத்திரத்தை எழுதியிருக்கும் இயக்குநர், வி.கிருஷ்ணமூர்த்தியைப் பெருமைப்படுத்தும்விதமாக ஜெயமோகன் எழுதிய ‘யானை டாக்டர்’ என்கிற சிறுகதையின் தாக்கத்தையும் உள்வாங்கிக்கொண்டிருக்கிறார். அதேபோல காசியாபாத், மேற்குத் தொடர்ச்சி மலையின் பல பகுதிகள் உட்பட இந்தியாவில் வனம் மற்றும் மலைப்பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட் மாஃபியாக்களை வில்லன் தரப்பாகத் திரைக்கதையில் நுழைத்திருக்கிறார்’ என்று குறிப்பிட்டிருக்கும் ‘இந்து தமிழ்திசை’ இணையதளம், ‘எந்தக் கதாபாத்திரத்துக்கு முழுமையைக் கொடுக்கத் தவறிவிட்டார், அவற்றை அரைகுறையாக எழுதியிருக்கும் இயக்குநர். இதில் உச்சபட்ச ஏமாற்றம் யானைகளே தங்களுக்காகப் போராட முன்வருவது போல இராம.நாராயணன் ஸ்டைலுக்கு மாறிவிடும் இறுதிக் காட்சி’ என்றும் விமர்சித்திருக்கிறது.

x