திரை விமர்சனம் என்பது வெவ்வேறு கோணங்களைக் கொண்டது. அதன் அடிப்படையில், பல்வேறு இதழ்களில் வெளியாகும் திரை விமர்சனங்களின் தொகுப்பை ‘காமதேனு’ வாசகர்களுக்குத் தருகிறோம். இது திரைப்படங்களைப் பற்றிய முழுமையான, செழுமையான பார்வையைத் தரும் என்று நம்புகிறோம்.
‘மிஷ்கின் எப்படி பிசாசு எனும் வித்தியாசமான ஹாரர் படத்தைக் கொடுத்தாரோ அதே போன்று செல்வராகவன் தன் ஸ்டைலில் ஒரு ஹாரர் படத்தைக் கொடுத்திருக்கிறார். அப்பாவியைக் கெட்டவன் கொலை செய்ய, அவர் ஆவியாக வந்து பழிவாங்கும் பழைய ஃபார்முலாவைத்தான் செல்வராகவன் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், அதை அவர் பயன்படுத்திய விதம்தான் அருமை’ என்று குறிப்பிட்டிருக்கும் ‘சமயம் தமிழ்’ இணைய இதழ், ‘படத்தில் சில விஷயங்கள் ரசிகர்களை ஈர்க்கவில்லை. மரியத்திற்காக ரசிகர்கள் பெரிதாகப் பாவப்படவில்லை. மேலும், கொடூரனான ராம்சேவை வெறுக்கவும் இல்லை. ஸ்வேதாவை நாம் பெரிதாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. அதனால்தானோ என்னவோ க்ளைமாக்ஸ் காட்சி திருப்தி அளிப்பதற்குப் பதில் வித்தியாசமான உணர்வை அளிக்கிறது’ என்றும் விமர்சித்திருக்கிறது.
‘எஸ்.ஜே.சூர்யா தனது நடிப்பால் திரையரங்குகளில் சரவெடி கொளுத்துகிறார். காட்சிகளுக்கு ஏற்ப மாறும் அவரின் வசன உச்சரிப்புகள் க்ளாப்ஸை அள்ளுகிறது. ரெஜினா படம் முழுக்க தனது பார்வையாலேயே மிரட்டுகிறார். நந்திதாவின் கதாபாத்திரமும் அவரின் நடிப்பும் கச்சிதம். வேலைக்காரர்களாக நடித்துள்ள நால்வரும் கவனிக்க வைக்கிறார்கள்’ என்று நடிகர்களின் பங்களிப்பைப் பாராட்டியிருக்கும் ‘பிஹைண்ட்வுட்ஸ்’ இணைய இதழ், ‘செல்வா படம் என வந்தாலே தனி குஷி ஆகிவிடுகிறார் யுவன். பாடல்கள் ஆல்ரெடி சூப்பர் ஹிட் அடித்த நிலையில் பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார். அரவிந்த் கிருஷ்ணாவின் கேமரா கோணங்களும் லைட்டிங்கும் வித்தியாசம் காட்டுவதுடன் படத்தின் அடர்த்தியை நமக்குள் கடத்துகிறது. ஜி.கே.பிரசன்னாவின் எடிட்டிங் மற்றுமொரு பலம்’ என தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாழ்த்துப் பூங்கொத்தை வழங்கியிருக்கிறது.
‘கடவுள் x மனிதன் அல்லது நன்மை x தீமை இரண்டுக்குமான உளவியலைச் சொல்ல முயன்ற இயக்குநர், அதை முழுமையாகச் சொன்னாரா என்றால் கேள்விக்குறிதான். ஆனால், பணக்காரன், ஏழை என எந்த வர்க்கமானாலும் தீமை தன்னை நிலைநிறுத்த கடைசிவரை போராடும், யாரைப் பற்றியும் கவலைப்படாது என்ற உளவியலைக் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். பேய்க்கதையின் வழக்கமான ஃபார்மெட்டில் படம் இல்லையென்றாலும், ஒரு தொடர்ச்சி இல்லாமல், தனித்தனியாக எடுத்த காட்சிகளை ஒட்டவைத்து பார்ப்பதைப் போன்ற உணர்வைத் தவிர்க்க முடியவில்லை’ என்கிறது ‘நக்கீரன்’ இணைய இதழ்.