எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in
பெரும் வெற்றி பெற்ற த்ரில்லர் திரைப்படத்தின் அடுத்த பாகத்தை, விறுவிறுப்பு குறையாமல் படமாக்கி ரசிகர்களைத் திருப்திப்படுத்துவது எப்படி என்பதற்குச் சரியான உதாரணமாகிஇருக்கிறது ‘த்ரிஷ்யம் 2’ மலையாளத் திரைப்படம். அமேசான் பிரைமில் பிப்ரவரி 19-ல் வெளியான இப்படத்தை, உலகெங்கும் உள்ள ரசிகர்கள் வரவேற்றுக் கொண்டாடிவருகிறார்கள்.
கடல் கடந்த கதை
மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடிப்பில் 2013-ல் ‘த்ரிஷ்யம்’ முதல் பாகம் வெளியானது. உள்ளூரில் கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் ஜார்ஜ்குட்டி என்ற சாமானியனின் குடும்பத்தில் அசம்பாவிதம் ஒன்று நடக்கிறது. தவிர்க்க முடியாத அந்தச் சூழலில் குடும்ப அங்கத்தினர் ஒருவர் செய்யும் கொலையை மறைத்து, தனது குடும்பத்தைக் காப்பாற்ற ஜார்ஜ்குட்டி எடுக்கும் சாதுர்ய அவதாரமே ‘த்ரிஷ்யம்’ திரைப்படம். தமிழில் கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்’ உட்பட சிங்களம், சீனம் என கடல் கடந்த மொழிகளிலும் மறு ஆக்கமாக வெளியாகி வரவேற்பும் பெற்றது இப்படம்.