திரை விமர்சனம் - சங்கத்தலைவன்


திரை விமர்சனம் என்பது வெவ்வேறு கோணங்களைக் கொண்டது. அதன் அடிப்படையில், பல்வேறு இதழ்களில் வெளியாகும் திரை விமர்சனங்களின் தொகுப்பை ‘காமதேனு’ வாசகர்களுக்குத் தருகிறோம். இது திரைப்படங்களைப் பற்றிய முழுமையான, செழுமையான பார்வையைத் தரும் என்று நம்புகிறோம்.

‘கருணாஸ், நூற்பாலை நெய்யும் நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாகப் பணிபுரிந்துவருகிறார். இந்த நிறுவனத்தை நடத்திவருகிறார் மாரிமுத்து. நிறுவனத்தில் விபத்து ஏற்பட்டு ஒரு பெண்ணின் கை துண்டாகிறது. நஷ்ட ஈடு வழங்காமல் அந்தப் பெண்ணை ஏமாற்ற நினைக்கிறார் மாரிமுத்து. மறைமுகமாக, இந்த பிரச்சினையை சமுத்திரக்கனியிடம் எடுத்துச் செல்கிறார் கருணாஸ்.

நெசவுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருக்கும் சமுத்திரக்கனி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈட்டை முறையாகப் பெற்றுக் கொடுக்கிறார். ஒருகட்டத்தில், பிரச்சினையை சமுத்திரக்கனியிடம் எடுத்துச் சென்றது கருணாஸ்தான் என மாரிமுத்துவுக்குத் தெரியவருகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே படத்தின் மீதிக் கதை’ என்று படத்தின் கதைச் சுருக்கத்தைச் சொல்லியிருக்கும் ‘தமிழ் வீதி’ இணைய இதழ், ‘ராபர்ட் சற்குணம் இசையில் பாடல்கள் படத்தோடு ஒன்றியிருக்கிறது. பின்னணி இசை கதையோடு பயணம் புரிகிறது. ஸ்ரீநிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு சிவப்பு வெளிச்சத்தை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது’ என்று பாராட்டியிருக்கிறது.

‘சங்கத்தலைவராக சமுத்திரக்கனி. இவருக்குச் சிவப்பும் கருப்பும் எப்போதும் பொருந்திப்போகிறது, தண்ணீர் மாதிரி... எல்லாவித சாதனத்திலும் அடங்கிவிடும் இவருக்கும் விஜய் சேதுபதிக்கும் அப்படி ஒரு முக, குரல் ராசி! பவ்யம், பயம், இயலாமை எப்படி படிப்படியாகக் குறைந்து குரல் உயர்த்தி சங்கத்தலைவனாக மாற முடிந்தது என்பதைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார் சமுத்திரக்கனி. மாரிமுத்து இயக்குநர் என்பதால் எந்த கேரக்டருக்குள்ளும் ஒன்றிக்கொள்ள முடிகிறது. வித்தியாசமான கேரக்டர்கள் என்றால் இனி மாரிமுத்துவைக் கூப்பிடுவார்கள். சுனு லட்சுமியின் நடிப்பு சும்மா சொல்லக்கூடாது. அதேபோல ரம்யா சுப்பிரமணியனையும் வாழ்த்தியாக வேண்டும். சமுத்திரக்கனியின் மனைவியாக மட்டுமில்லாமல் இரண்டு குழந்தைகளின் அம்மாவாகவும் நடித்திருக்கிறார். கேஸ்டிங் டைரக்டரைப் பாராட்ட வேண்டும்’ என்று ‘சினிமா முரசம்’ இணைய இதழ் வாழ்த்தியிருக்கிறது.

x