விமர்சனத் தொகுப்பு - கமலி ஃப்ரம் நடுக்காவேரி


திரை விமர்சனம் என்பது வெவ்வேறு கோணங்களைக் கொண்டது. அதன் அடிப்படையில், பல்வேறு இதழ்களில் வெளியாகும் திரை விமர்சனங்களின் தொகுப்பை ‘காமதேனு’ வாசகர்களுக்குத் தருகிறோம். இது திரைப்படங்களைப் பற்றிய முழுமையான, செழுமையான பார்வையைத் தரும் என்று நம்புகிறோம்.

‘நடுக்காவேரி எனும் கிராமத்தில் ப்ளஸ் ஒன் படித்துவரும் ஆனந்தி, குறும்புத்தனம் நிறைந்த புத்திசாலி மாணவி. ஆனந்தியின் தந்தை அழகம்பெருமாள் மகனை மேற்படிப்பு படிக்க வைக்கவும் மகளை விரைவில் திருமணம் செய்துகொடுக்கவும் திட்டமிடுகிறார். இந்நிலையில் ப்ளஸ் டூ தேர்வு முடிவு வருகிறது. அதில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற ரோகித்தின் பேட்டி வருகிறது. ரோகித்தைக் காதலிக்கத் தொடங்கும் ஆனந்தி அவரைச் சந்திப்பதற்காகச் சென்னை ஐஐடியில் படிக்க ஆசைப்படுகிறார். இந்திய அளவில் கடினமான ஐஐடி நுழைவுத்தேர்வுக்கு ஆனந்தி எப்படி தயாராகிறார், ரோகித்திடம் அவரது காதலைச் சொல்ல முடிந்ததா, கிராமத்துப் பெண்ணான அவர் எப்படி சாதனை படைக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை’ என்று கதையின் ஒன்லைனை சற்றே விரிவாகச் சொல்கிறது ‘மாலை மலர்’ நாளிதழின் விமர்சனம்.

‘காதலுக்காக வராத படிப்பை வம்படியாகப் படிக்கும் கமலியின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. கண்டதும் காதல், அதற்காகத் தீவிரமாகப் படிப்பது, யாராவது திட்டினாலோ, தரக்குறைவாகப் பேசினாலோ தூங்காமல் படிப்பது, சாதிப்பது என்று கமலி இருப்பது செயற்கையாக இருக்கிறது. காதல் இருக்க வேண்டுமே என்று திணிக்கப்பட்டிருக்கிறது. வில்லன் என்று தனியாக ஒரு ஆள் இல்லாதது ஆறுதல்’ என்று விமர்சிக்கிறது ‘சமயம் தமிழ்’ இணைய இதழ்.

‘கமலியாக வாழ்ந்துள்ளார் ஆனந்தி. இனி கயல் ஆனந்தி கமலி ஆனந்தியாக அழைக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை’ என்று ஆனந்தியின் நடிப்புக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கும் ‘தமிழ் ஃபிலிம்பீட்’ இணைய இதழ், ‘உயர் கல்வி நிறுவனங்களில் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளைத் தெளிவுறப் படமாகியுள்ளார் இயக்குநர் ராஜசேகர் துரைசாமி. அதுமட்டும் அல்லாமல், ஒரு ஆண் படிப்பதற்கும் ஒரு பெண் படிப்பதற்கும் சமுதாயத்தில் உண்டான வித்தியாசங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் அழகாகப் பதிவு செய்துள்ளார்’ என்று பாராட்டியிருக்கிறது.

x