உலகம் சுற்றும் சினிமா - 44: எல்லைகளற்ற காதல் தேசம்!


காதல்...பரிணாம வளர்ச்சியின் பெரும் கொடையாக மானுடம் பெற்ற அதி அற்புதமான உணர்வு. உலகின் ஆகப்பெரும் சக்திகளைப் பட்டியலிட்டால் காதலுக்கு முதல் வரிசையில் என்றும் இடமுண்டு. ஒரு தனிநபரின் வாழ்க்கையை மட்டுமல்ல, ஒட்டுமொத்தச் சமூகத்தின் போக்கையும் மாற்றும் வல்லமை கொண்டது காதல். ஆனந்தத்தின் எல்லையை வழங்கும் ஆற்றல் மட்டுமல்ல, துக்கத்தின் பெருங்கொடுமையை உணர்த்தும் வன்மமும் காதலுக்கு உண்டு.

இப்படிப் பல பரிமாணங்களை தன்னுள்ளே அடக்கிவைத்திருக்கும் காதல், திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்படும் விதம் பெரும்பாலும் ஒரே தொனியில் இருப்பது பெரும் குறை. திருமணத்துக்கு முன்பு மலரும் காதலைப் பற்றியே பெருவாரியான காதல் திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன.

ஆனால், திருமணத்துக்குப் பின்பே காதல் அதிகமாகத் தேவைப்படுகிறது. காதலின் இருப்பே தம்பதியினரின் இடையே இருக்கும் நிம்மதியின் விலை. திருமணத்துக்குப் பின்பு காதலில் விரிசல் ஏற்பட்டால் என்னவாகும், உடைந்த மனதைக் காதல் என்னும் உயிர் பசை கொண்டு ஒட்டிவிட முடியுமா, ஒருவரிடத்தில் தொலைத்த காதலை இன்னொருவரிடம் கண்டுவிட முடியுமா? என நீளும் கேள்விகள் வெறும் சினிமாவுக்கானது மட்டுமல்ல. வாழ்வில் பலரும் விடை தேடி அலையும் அதிமுக்கியமான கேள்விகள் இவை. இந்த முக்கியமான கேள்விகளைக் கதையின் மையமாகக் கொண்டு, அதே நேரத்தில் மெல்லிய நகைச்சுவையுடன் அழகானதொரு படைப்பாக உருவான திரைப்படம்தான் ‘கிரேஸி, ஸ்டுப்பிட், லவ்’.

க்ளென் ஃபிக்காரா மற்றும் ஜான் ரெக்குவா என்ற இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில், ஸ்டீவ் கேரல், ஜூலியானா மூர், ரயான் காஸ்லிங், எம்மா ஸ்டோன் ஆகியோரின் அற்புதமான நடிப்பில் 2011-ல் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் இது. டேன் ஃபோகல்மேனின் திரைக்கதை இப்படத்தின் பெரும் தூண்!

பலகோணக் காதல்

15 வயதில் சந்தித்து, 17 வயதில் திருமணம் செய்துகொண்டவர்கள் கால் வீவரும் எமிலியும். பல ஆண்டுகள் கழித்து, தனக்கு விவாகரத்து வேண்டும் என்று எமிலி கேட்கும் காட்சியில் படம் தொடங்கும். தன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் டேவிட் என்ற நபரிடம் தனக்கு காதல் ஏற்பட்டுள்ளதாக எமிலி கூறியதும் மனதளவில் உடைந்துவிடுவார் வீவர். விவாகரத்துக்கு ஒப்புக்கொண்டு மனைவி, மகன் ராபி, மகள் மோலி ஆகியோரைப் பிரிந்து தனியாக வாழ ஆரம்பிக்கும் வீவர், தன் தனிமையைப் போக்க மதுபானக் கடையை நாடுவார்.

பாரில் தன் சோகக் கதையை அனுதினமும் கூறிப் புலம்பும் வீவரைக் கவனிப்பான் ஜேக்கப் பால்மர் எனும் இளைஞன். எப்படிப்பட்ட பெண்ணையும் மயக்கக்கூடிய ஜேக்கப்புக்கு வீவர் மீது இரக்கம் உண்டாகும் (கல்லூரி மாணவி ஹான்னா மட்டும் ஜேக்கப்பை மறுதலித்துவிடுவாள்!). பெண்களைக் கவரும் சிறந்த ஆண்மகனாக வீவரை மாற்றுவதாக உறுதியளிப்பான். ஜேக்கப்பின் பயிற்சியின் பலனாக வீவரும் நாளடைவில் புதுப் புதுப் பெண்களுடன் பொழுதைக் கழிக்க ஆரம்பிப்பார். ஆனால், மனதின் அடியாழத்தில் எமிலி மீதான காதல் அணையாமல் கனன்றுகொண்டேயிருக்கும்.

வீவரின் வீட்டில்  மோலியைப் பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்டிருக்கும் ஜெஸிகா என்ற 17 வயது பெண் மீது காதல் வயப்பட்டிருப்பான் ராபி. ஜெஸிகாவோ வீவரின் மீது மையல் கொண்டிருப்பாள். இது தவிர, தன்னுடைய காதலனின் செயலால் மனமுடைந்து போயிருக்கும் கல்லூரி மாணவி ஹான்னா, அவனைப் பழிவாங்க ஜேக்கப்பைச் சந்திக்க வருவாள். ஆனால், அவளின் நோக்கம் மாறி இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துவிடும். இதற்கிடையில், எமிலிக்குத் தன் மீது இன்னும் காதல் இருக்கிறது என்பதை அறியும் வீவர், அவளுடன் மீண்டும் இணைந்து வாழ முயற்சிப்பார். படத்தின் உச்சபட்சத் தருணத்தில் அனைவரும் ஒரே இடத்தில் சந்திக்கும்போது அவர்களது அனைத்து திட்டங்களும் சிதறிப்போகும். அதற்குப் பிறகும் காதல் என்ற பெரும் சக்தி இவர்களை வாழ்வில் இணைத்ததா... அல்லது வெவ்வேறு துருவங்களாகத் துண்டாடியதா என்பதைக் கவித்துவமாகச் சொல்லியிருப்பார்கள் இயக்குநர்கள்!

காதல் பாடம்

காதலின் ஈரத்தையும் பிரிவின் துயரையும் மிகச் சிறந்த முறையில் காட்சிப்படுத்திய படம் இது. பிரிவின் ஆற்றாமை பொறுக்க முடியாமல் எமிலி ஏதோ பொய்க் காரணம் சொல்லி வீவரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவதும், எமிலியை மறைந்திருந்து பார்த்துக்கொண்டே, வீவர் அவளிடம் உரையாடுவதுமாக விரியும் காட்சி மிக அழகானது.

காதலுடன் ஒட்டிப்பிறந்த இரட்டையர் போன்ற பொறாமை மற்றும் சுயப்பெருமை என்ற துர்குணங்களை மட்டும் விட்டுவிட்டால், வாழ்க்கையைக் கொண்டாடித்தீர்க்க எந்தத் தடையும் இருக்காது; உங்கள் காதலுக்குப் பாத்திரமானவர்களுக்காக நேரத்தைச் செலவிடுவதே மகிழ்ச்சியான வாழ்வின் சூட்சுமம் எனும் பாடங்களை மயிலிறகின் வருடலைப் போல உணர்த்தும் திரைப்படம்தான் ‘கிரேஸி, ஸ்டுப்பிட், லவ்’.

படத்தின் மேலும் சிறப்பான விஷயம், விருதுகளை அள்ளிக்குவித்த ‘லா லா லேண்ட்’ (2016) திரைப்படத்தில் பிரதான ஜோடியாக நடித்த ரயான் காஸ்லிங் மற்றும் எம்மா ஸ்டோன் ஜோடி ‘கிரேஸி, ஸ்டுப்பிட், லவ்’ படத்திலும் ஜேக்கப்-ஹான்னா என்ற அற்புதமான ஜோடியாக நடித்திருப்பார்கள். ஜேக்கப்பின் வீட்டில் இரவில் இருவரும் பேசியே கழிக்கும் இரவுப்பொழுது அவ்வளவு கவித்துவமானது.
பல ‘ரோம்-காம்’ (ROMantic-COMedy) திரைப்படங்கள் இருந்தாலும் 13 வயது சிறுவனின் காதலில் தொடங்கி 50 வயதை நெருங்கும் தம்பதியினரின் காதல் வரை பல காதல்களை உயிர்ப்புடன் கூறிய இப்படம், இன்னும் பல வருடங்கள் கழித்தும் காதலர்களுக்கு கவித்துவமான பாடமாக இருக்கும்!

x