1980-ல் நடந்த துருக்கி ராணுவப் புரட்சி அந்நாட்டின் அனைத்து வர்க்கத்தினரின் வாழ்க்கையையும் அடியோடு புரட்டிப்போட்டது. அதற்கு முன்பு 1960-ல் ஒரு முறையும், 1971-ல் ஒரு முறையும் அங்கே ராணுவப் புரட்சி நடந்தது. 20 ஆண்டுகளுக்குள் அடுத்தடுத்து நடந்த ராணுவப் புரட்சிகளால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சி என்ற உணர்வொன்று இருப்பதையே ஏறத்தாழ மறந்து, விரக்தி மனநிலையிலேயே வாழ்ந்துவந்தார்கள். 1980 புரட்சிக்குப் பின்பு வலதுசாரிகளின் கை ஓங்க ஆரம்பித்ததன் விளைவாக நிலைமை இன்னும் மோசமானது. புரட்சியின் விளைவாகச் சிறைச்சாலைகள் நிரம்பிவழிந்தன. அக்காலகட்டத்தில் சிறையிலிருந்து சிறு விடுமுறை அளிக்கப்பட்டு வீடுதிரும்பும் ஐந்து கைதிகளின் கதைதான் ‘யோல்’ (YOL) திரைப்படம்.
1982-ல், துருக்கிய மொழியில் வெளியான இப்படம் ஆங்கிலத்தில் 'தி ரோட்' (The Road) என்ற பெயரில் வெளியானது. படத்தின் இயக்குநர்கள் செரிஃப் கோரென் மற்றும் இல்மாஸ் குன்னேய். ஐந்து கைதிகளின் பயணங்களை மையமாக வைத்துக்கொண்டு துருக்கியின் அவல நிலையைக் குறுக்கும் நெடுக்குமாக விவரிக்கும் படம் இது. அதனால், வெளிவந்தவுடன் துருக்கியில் இப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், கான் திரைப்படவிழாவின் மதிப்புமிகு விருதான ‘தங்கப் பனை’ விருது உட்பட பல விருதுகளை அள்ளிக்குவித்தது இத்திரைப்படம். 1999-ல் பல்வேறு தணிக்கைகளுக்குப் பிறகு, சர்ச்சைக்குரியவை என்று கருதப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டு இத்திரைப்படம் துருக்கியில் வெளியானது.
ஐந்து வாழ்க்கைப் பயணங்கள்
கைதிகள் சிறு விடுமுறையில் வீட்டுக்கு அனுப்பப்படும் காட்சியில் படம் தொடங்கும். குறிப்பிட்ட நாட்களுக்குள் கைதிகள் சிறைக்குத் திரும்ப வேண்டும். திரும்பிவரத் தவறினால் அரசாங்கம் அவர்களை வேட்டையாடும். அப்படி வீட்டுக்குக் கிளம்பும் கைதிகளில் ஐந்து பேர் ஒரே திசையில் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். சிறைச்சாலை கொடுத்த வேதனையிலிருந்து சில நாட்களாவது விடுதலையை நிம்மதியாக அனுபவிக்கலாம் என்ற உவகை அவர்கள் நெஞ்சம் நிறைந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் ஒவ்வொருவராக அவர்களுக்கான பாதையில் தனித்துப் பயணிக்க ஆரம்பிக்கின்றனர்.
சிரியாவின் எல்லை அருகே இருக்கும் தன் கிராமத்துக்குச் சென்று அங்கிருந்து சிரியாவுக்குத் தப்பிச்செல்லும் கனவில் ஒருவர், வீட்டில் தனக்குத் திருமணத்துக்காகப் பார்த்து வைத்திருக்கும் பெண்ணைச் சந்திக்கப்போகும் உற்சாகத்தில் ஒருவர், தான் ஊரில் இல்லாத நேரத்தில் வறுமையின் பிடியில் சிக்கி பாலியல் தொழிலாளியாக மாறிப்போன தன் மனைவியைக் கொலை செய்யும் முடிவோடு பயணப்படும் ஒருவர், தன் கோழைத்தனத்தால் தன்னுடைய மைத்துனர் உயிரிழந்தார் என்ற உண்மையைத் தன்னைப் பிரிந்து சென்று வாழும் மனைவியிடமும், குழந்தைகளிடமும் சொல்லப் பயணப்படும் ஒருவர், தன் வளர்ப்புப் பறவையை எடுத்துச் சென்று தன் துணைவிக்குக் காட்ட வேண்டும் என்ற ஆசையில் செல்லும் ஒருவர் என்று இவர்களது பயணத்தின் நோக்கங்களுடன், வாழ்வின் உயிர்த் துடிப்பைச் சுமந்தவண்ணம் நம்மை ஆட்கொள்கிறது கதை.
இவர்களின் நோக்கம் ஒன்றுகூட முழுமையாக வெற்றிபெறுவதில்லை என்பதுதான் பெரும் சோகம். சமூகமும், அதனுடைய போக்கும் இவர்களின் வாழ்வுக்காக, நின்று நிதானித்துப் பரிதாபப்படத் தயாராக இல்லை. ரத்தம்சொட்டும் கோரைப்பற்கள் கொண்ட ஒரு கொடிய விலங்கைப் போலவே வாழ்க்கை இவர்களை நடத்துகிறது. இப்படத்தைப் பார்க்கும்போது இந்த ஐவரில் ஒருவரது கனவாவது பலித்துவிடாதா என்ற ஏக்கம் மனதில் எழுந்து மறையும். ஒரு கட்டத்தில் ஏன் இந்த வாழ்க்கை இவ்வளவு கடினமானதாக இருக்கிறது என்ற அயர்ச்சியை இப்படம் அளிக்கும். தங்களுடைய ராணுவப் புரட்சிக்குத் துருக்கி அரசாங்கம் ஆயிரம் காரணங்கள் சொல்லி அதை நியாயப்படுத்தினாலும் காலம் உள்ள வரை ‘யோல்’ போன்ற படங்கள் அவர்கள் கூறும் காரணங்களைச் சுக்கல் நூறாகச் சிதறடித்துக்கொண்டே இருக்கும்.
கம்பிகளுக்குப் பின்னே உருவான கதை
இப்படத்தின் திரைக்கதை போலவே படம் உருவான கதையும் வலி நிறைந்தது. ஒரு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் இயக்குநர் இல்மாஸ் குன்னேய். சிறையில் அரசியல் கைதிகளுக்கு நிகழ்ந்த மனித உரிமை மீறல்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், சிறையிலிருந்தபடியே இப்படத்தை எடுக்க முடிவு செய்தார். தன்னுடைய உதவியாளரும் நண்பருமான செரிஃப் கோரெனுக்கு திரைக்கதையையும், அது எப்படி படமாக்கப்பட வேண்டும் என்பதையும் விரிவாக எழுதி அனுப்பி சிறைக்குள் இருந்துகொண்டே அதைப் படமாக்கினார்.
செரிஃப் கோரெனுக்கு முன்பு எர்டன் கிரால் என்ற இயக்குநரை வைத்து இம்முயற்சியை மேற்கொண்டார் குன்னேய். ஆனால், அவர் நினைத்தபடி காட்சி அமைப்பு வராததால் செரிஃப் கோரெனை வைத்து இரண்டாம் கட்ட முயற்சியில் வெற்றி பெற்றார். மனிதர் அத்துடன் நிற்கவில்லை. சிறையிலிருந்து உயிரைப் பணயம் வைத்துத் தப்பித்து இத்திரைப்படத்தின் படச்சுருள்களை எடுத்துக்கொண்டு சுவிட்சர்லாந்து சென்று, பின்பு பாரீஸில் எடிட்டிங் பணிகளை முடித்து கான் திரைப்பட விழாவில் இத்திரைப்படத்தைத் திரையிட்டார். உலக அரங்கின் கவனம் துருக்கி நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் மீது திரும்பியது.
இன்றும் உலகின் பல மூலைகளில் மனித உரிமை மீறல்களும் மானுடத்துக்கு எதிரான வன்முறைகளும் நடந்தவண்ணமே உள்ளன. இன்னும் பல படைப்பாளிகள் தங்கள் படைப்புகளின் மூலம் உரக்கக் கேள்வி எழுப்ப வேண்டிய தேவை இங்கிருக்கிறது. கலை என்பதே பெரும் சமூக ஆயுதம்தானே?