பத்ம விருது பெறும் பாட்டு மேதைகள்- சின்னக் குயில் சித்ராவின் மறக்கமுடியாத தருணம்!


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளின் பட்டியலில், மறைந்த இசைமேதை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பெயருடன், பாடகி சித்ராவின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இது தற்செயல் நிகழ்வாக இருக்கலாம். ஆனால், இசைப் பயணத்தில் தனது வழிகாட்டியாக இருந்த ஒரு மாபெரும் கலைஞருக்காக வழங்கப்படும் விருதுடன், தனக்கும் விருது வழங்கப்பட இருப்பது சின்னக் குயில் சித்ராவின் வாழ்வில் மறக்க முடியாத தருணமாகவே இருக்கும். கிட்டத்தட்ட தந்தை - மகளுக்கு நிகரான உறவில் இசையுலகில் பயணித்த இருவருக்கும் காலம் செய்திருக்கும் கவுரவம் இது.

அள்ளக் குறையாத அன்பு

டிஎம்எஸ் - பி.சுசீலா இணைக்குப் பிறகு தமிழில் மிகுந்த கவனம் பெற்ற எஸ்பிபி - எஸ்.ஜானகி இணை, புதிதாக வரும் பாடகர்களின் மீது செலுத்திய அக்கறையும் அன்பும் அலாதியானவை. குறிப்பாக, மனோ - சித்ரா இணை மீது மிகுந்த அன்பைப் பொழிந்தவர்கள் எஸ்பிபியும் ஜானகியும். மேடைகளில் சித்ராவின் கன்னத்தில் ஜானகி முத்தமிடுவதையும், பயபக்தியுடன் அவரது பாதம் பணிந்து சித்ரா ஆசிர்வாதம் வாங்குவதையும் பார்க்கக் கண்கோடி வேண்டும்.

x