எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in
அரசியல் அதிகாரத்தை விட்டுக்கொடுக்காத தந்தைக்கும் அதைக் கைப்பற்றத் துடிக்கும் மகனுக்கும் இடையிலான போராட்டம்... அரசியல் தலைவர் எதிர்பாராத வகையில் இறந்துபோனதும் அதுநாள் வரை உயிருக்குயிராய் பழகியவர்களின் முகமூடிகள் கழன்றுவிழும் காட்சிகள்... ஆட்சிக் கட்டிலைப் பிடிப்பதற்கான அரசியல் சதுரங்கத்தில் வெட்டுப்படும் நியாய – தர்மங்கள்... இப்படி நாளும் நாம் கண்டு துணுக்குறும் அரசியல் அவலங்களுக்குச் சற்றே புனைவு அரிதாரம் பூசி திரை வடிவில் வந்திருக்கிறது ‘தாண்டவ்’. அமேசான் பிரைம் வீடியோவில் ஜனவரி 14-ல் வெளியான இந்த வலைத்தொடரின் 9 அத்தியாயங்களைக் கொண்ட முதல் சீஸன், ஓ.டி.டி ரசிக வட்டத்துக்கு அப்பால் பல சர்ச்சைகளையும் சேர்த்திருக்கிறது.
விலையில்லா விளம்பரம்
‘தாண்டவ்’ வலைத்தொடர் ஒருசாராரின் மத நம்பிக்கைகளைப் புண்படுத்திவிட்டதாக லக்னோ, மும்பை உட்பட பல்வேறு இடங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. வட இந்திய நகரங்களில் போராட்டங்களும் நடந்தன. மராட்டியத்தின் ‘கர்னி சேனா’ என்ற அமைப்பு ‘தாண்டவ்’ குழுவினரின் நாக்குகளை அறுப்போருக்கு 1 கோடி ரூபாய் தருவதாக அறிவித்து அதிரவைத்திருக்கிறது. மேற்படி எதிர்ப்புகளும் போராட்டங்களும் அமேசானுக்கும், இந்த வலைத்தொடருக்கும் பெரிய அளவில் விளம்பரமானது தனிக்கதை!