உலகம் சுற்றும் சினிமா - 41: கொலையாளி, கேங்க்ஸ்டர், போலீஸ்!- கொரியாவிலிருந்து ஒரு கமர்ஷியல் கதை


எந்த ஒரு கதைக்கும் இரண்டு கோணங்கள் உண்டு என்பது வழக்கமாகச் சொல்லப்படும் கூற்று. வழக்கமான கதை சொல்லல் முறை என்பது இதுதான். நல்லவன் - தீயவன், தப்பி ஓடுபவன் - துரத்துபவன், கொலைகாரன் - கொலை செய்யப்படுபவன் என்கிற ரீதியில் உலகில் பெரும்பாலான கதைகள் இரண்டு கோணத்துடன்தான் சொல்லப்பட்டு வருகின்றன. இந்த வகைமையிலிருந்து முரண்பட்டு மூன்று கோணங்கள் கொண்ட கதை சொல்லும் முறை, வாடிக்கையான திரைக்கதைகளில் சுவாரசியம் கூட்ட ஆரம்பித்தது. திரையுலகில் இக்கதை சொல்லல் முறைக்கு முக்கோணக் கதைக்களம் என்று பெயர். இதை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படம் ‘தி கேங்க்ஸ்டர், தி காப், தி டெவில்’.

2019-ல் கொரிய மொழியில், லீ-வொன்-டே இயக்கத்தில், தென் கொரியாவின் முன்னணி நடிகர்களான மா-டோங்-சொக், கிம்-மியூ-யோல் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த படம் இது. கொரிய சினிமாவின் புதிய அலைப் படைப்புகளில் முக்கியமானதாக இத்திரைப்படம் கருதப்படுகிறது. உணர்வுபூர்வமான திரைப்படங்களைத் தரும் கொரிய சினிமா கலைஞர்கள், அவ்வப்போது ஹாலிவுட்டுக்கு நிகரான கமர்ஷியல் படங்களைத் தருவதிலும் தங்களது திறமையைக் காட்டிவருகின்றனர். இத்திரைப்படம் அதற்குச் சிறந்த உதாரணம். இதில் மேலும் சுவாரசியமான விஷயம்… இத்திரைப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பதுதான்!
போலீஸ் - கேங்க்ஸ்டர் கூட்டணி

இரவில் ஆளில்லாத சாலையில் பயணிக்கும் கார்களைப் பின்னாலிருந்து தன் காரினால் மோதுகிறான் ஒருவன். தங்கள் காருக்கு என்ன ஆனது என்று பதற்றத்துடன் கீழே இறங்கி வருவோரைக் கத்தியால் குத்திக் கொலை செய்கிறான். இதே போல அந்தச் சுற்றுவட்டாரத்தில் அடுத்தடுத்து சில கொலைகள் நடக்கின்றன. அப்பகுதியைச் சேர்ந்த நேர்மையான போலீஸ் அதிகாரியான ஜுங்-டே-சுக், இக்கொலைகளைச் செய்வது ஒரு சைக்கோ கொலைகாரனாக இருக்கக்கூடும் என்று தன் மேலதிகாரியிடம் தெரிவிப்பார். லஞ்ச லாவண்யத்தில் திளைக்கும் மேலதிகாரியோ ஜுங் சொல்வதைக் காதில் போட்டுக்கொள்ளவே மாட்டார்.

இந்நிலையில், ஏற்கனவே ஜுங்குடன் உரசலில் இருக்கும் அவ்வூரின் மிகப்பெரிய தாதாவான ஜங்-டொங்-சு, இரவில் காரில் தனியாக வரும்போது சைக்கோ கொலைகாரனின் தாக்குதலுக்கு உள்ளாவார். கடும் போராட்டத்துக்குப் பிறகு பலத்த காயத்துடன் தப்பிக்கும் ஜங், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். இந்தத் தகவல் கிடைத்ததும் போலீஸ் அதிகாரி ஜுங் அவரைச் சந்திக்க வருவார். கொலைகாரனைப் பற்றிய தகவல் தெரிவிக்குமாறு ஜங்கிடம் கேட்பார். முதலில் முரண்டுபிடிக்கும் ஜங், பின்னர் இறங்கிவருவார். இருவரும் இணைந்து அந்தக் கொலைகாரனைத் தேடலாம். யார் கைகளில் அவன் முதலில் சிக்குகிறானோ அவர்களே அவனது முடிவை நிர்ணயிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருவார்கள்.

போலீஸ் அதிகாரியான ஜுங்கின் கைகளில் கொலையாளி முதலில் சிக்கினால் சட்டப்படி தண்டனை, தாதாவான ஜங்கின் கைகளில் சிக்கினால் அவன் துண்டு துண்டாக வெட்டிப் பொதுவெளியில் வீசப்படுவான். இப்படி ஒரு விசித்திரமான உடன்படிக்கையுடன் அவர்களது தேடுதல் வேட்டை தொடரும். சைக்கோ கொலையாளி அவர்களது கைகளில் சிக்கினானா? போலீஸுக்கும் தாதாவுக்குமான போட்டியில் வெற்றி பெற்றது யார் என்பதை 109 நிமிட திரைக்கதையில் அட்டகாசமாக விவரித்திருப்பார் இயக்குநர் லீ-வொன்-டே.

முக்கோணக் கதைக்களத்தை விறுவிறுப்பு குறையாமல் படமாக்குவது எப்படி என்பதற்குச் சிறந்த உதாரணம் இந்தப் படம். மூன்று கதாபாத்திரங்களும் தங்களுடைய ஒரே நோக்கத்தை நோக்கிப் பயணிப்பது திரைக்கதையின் பிரதான போக்காக இருந்தாலும், அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் நடக்கும் விஷயங்களையும் மிக நுட்பமாக, திரைக்கதை தொய்வடையாத வகையில் சொல்லியிருப்பார்கள். உதாரணத்துக்கு, ஜங்கின் தொழில் போட்டியாளனாக இருக்கும் அவரது பழைய நண்பனின் பாத்திரம், ஜுங்குக்கும் அவரது மேலதிகாரிக்கும் இருக்கும் உரசல் போன்றவை கதையில் ஏற்படுத்தும் தாக்கம் கச்சிதமாகத் திரைக்கதையில் இடம்பெற்றிருக்கும்.

ஹாலிவுட்டில் ரீமேக்

இத்திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. கனடாவில் நடத்தப்படும் ஃபேன்டாசியா திரைப்பட விழாவையும் அலங்கரித்த இத்திரைப்படம், விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. அது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தின் ரீமேக் உரிமத்தை ஹாலிவுட்டின் பிரசித்திபெற்ற ஆக் ஷன் நடிகர் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன் வாங்கியுள்ளார். விரைவில் இத்திரைப்படத்தின் ஆங்கிலப் பதிப்பை வெள்ளித்திரைகளில் காணலாம். விறுவிறுப்பான, அதிவேகத்தில் பயணிக்கும் திரைப்படங்கள் உங்களுக்குப் பிடிக்கும் என்றால், இத்திரைப்படம் கண்டிப்பாக உங்களுக்கு மறக்கவே முடியாத திரைப்படமாக இருக்கும்.

x