மாஸ்டர் - திரை விமர்சனம்!


திரை விமர்சனம் என்பது வெவ்வேறு கோணங்களைக் கொண்டது. அதன் அடிப்படையில், பல்வேறு இதழ்களில் வெளியாகும் திரை விமர்சனங்களின் தொகுப்பை ‘காமதேனு’ வாசகர்கள் இனி வாரம் தோறும் படிக்கலாம்.

‘லோகேஷ் கனகராஜ் படம் என்பதைவிட விஜய் படமாக இருந்தாலும் மாஸ் ஹீரோவை வைத்து கமர்ஷியல் படம் கொடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர். விஜய்யின் முந்தைய ஹிட் படங்களின் ரெஃபரன்ஸ் பொருத்தமாக உள்ளது. சீர்திருத்தப் பள்ளிக்குள் கபடி ஆடும் இடத்தைப் பார்த்ததும் கில்லி படம் தான் நினைவுக்கு வருகிறது’ என்கிறது ‘சமயம் தமிழ்’ இணைய இதழின் விமர்சனம்.

‘படத்துக்குப் படம் ஏதோவொரு அரசியலை முன்னிறுத்தி பேசும் விஜய், இந்தப் படத்தில் அரசியல் குறித்த விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசியுள்ளார். மேலும், அரசியல்வாதிகள் பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதாகவும் மக்கள் சொல்வதை அரசாங்கம் கேட்பதில்லை என்பது போன்ற அரசியல் வசனங்களும் இப்படத்தில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன’ என்று குறிப்பிட்டிருக்கும் ‘நியூஸ் 18 தமிழ்’ விமர்சனம், ‘துணைக் கதாபாத்திரங்களில் நடித்தவர்களில் அர்ஜுன் தாஸ் மற்றும் பூவையார் ஆகியோர் மட்டுமே ஓரளவு மனதில் நிற்கிறார்கள்’ என்பதையும் பதிவுசெய்திருக்கிறது.

‘பவானியாக வரும் விஜய் சேதுபதி, கொடூர வில்லனாக வந்து மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். விஜய்க்கு இணையாக இவருக்கும் காட்சிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதிகம் பேசாமல் அவர் செய்யும் வில்லத்தனம் ரசிக்க வைக்கிறது. விஜய்யுடன் மோதும் காட்சிகளில் தானும் ஒரு மாஸ் ஹீரோ என்பதை உணர்த்துகிறார்’ என்று விஜய் சேதுபதிக்குப் புகழாரம் சூட்டுகிறது ’மாலை மலர்’ திரை விமர்சனம்.

x