ஈஸ்வரன் - திரை விமர்சனம்


‘பாரதிராஜா காலத்து அரதப் பழைய கிராமத்துக் கதையை, பாரதிராஜாவை வைத்தே சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்’ என்று விமர்னத்தைத் தொடங்கியிருக்கும் விகடன் இணையதளம், ‘ஈஸ்வரன் யார் தெரியுமா, ஈஸ்வரன் எப்படிப்பட்டவர் தெரியுமா என ஏகப்பட்ட பில்ட்-அப்களோடு படம் ஆரம்பிக்கிறது. போலீஸ் ஸ்டேஷனுக்குள் ஈஸ்வரன் யார் எனத் தெரியாமல் சப்-இன்ஸ்பெக்டர் எஃப்ஐஆர் போடத் துடிக்க, ஈஸ்வரனுக்காக இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி, அமைச்சர் என எல்லா இடங்களிலிருந்தும் போன் வருகிறது. 'அட, அப்ப ஈஸ்வரன் யாருப்பா?' என நிமிர்ந்து உட்கார்ந்தால், பழனி கோயிலுக்கு வரும் விஐபிகள், அவர்கள் நண்பர்களுக்கெல்லாம் சாமியைப் பார்க்க ஏற்பாடு செய்துதரும் ஏஜென்ட் எனச் சொல்லி சஸ்பென்ஸை உடைக்கும்போது நிமிர்ந்து உட்கார்ந்த நம் நெஞ்சில் ஈட்டி இறங்குகிறது. இப்படிப் பல ஈட்டிகள் படம் முழுக்க இறங்குகின்றன’ என்று விளாசித் தள்ளியிருக்கிறது.

‘தன்னுடைய அக்கா நந்திதா சிம்புவைக் காதலிப்பதாகச் சொல்லி, பிறகு திருமணம் செய்ததால், அக்காவைப் பழிவாங்க சிம்புவைக் காதலிக்கிறாராம் நிதி. இவர் எதற்கு தன் சொந்த அக்காவையே பழிவாங்குகிறார்? இந்தக் கதாநாயகிகள் எடுக்கும் முடிவுகள் எல்லாம் கதாநாயகர்களுக்கே சாதகமாக இருக்கின்றன’ என்று சொல்லும் பிபிசி தமிழ், ‘இந்தப் படம் சிம்புவுக்கு நிச்சயமாக ஒரு மீட்சியைத் தரும் திரைப்படம்தான். ஆக் ஷன், அழுகை, காமெடி என எல்லா உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகிறார். முடிவில் சம்பந்தமே இல்லாமல் யாரோ ஒரு 'அசுர’னுக்கு எச்சரிக்கையும் விடுக்கிறார்’ என்று கேலி செய்திருக்கிறது.

‘இயல்பான, தரமான படங்களைத் தந்து ஆரம்பத்தில் கவனம் ஈர்த்த சுசீந்திரன், சமீபகாலமாக குறுகிய கால - பட்ஜெட் படைப்புகளைக் கொடுத்துவருகிறார். பட்ஜெட் குறைவது நல்லதுதான், தரமும் குறைந்தால் ஆபத்து’ என்று நயமாகச் சுட்டிக்காட்டுகிறது நக்கீரன் இணையம்.

படத்தில் பாரதிராஜாவின் மகனாக மனோஜ் பாரதியே நடித்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள 'இந்து தமிழ் திசை’ இணையதளம், ‘பாரதிராஜாவின் மகன், பேத்திகளுக்கு இடையேயான வயது வித்தியாசம் லாஜிக் பிழை. படமாக்கும் விதத்தில் பல காட்சிகளில் இயக்குநர் கோட்டை விட்டிருக்கிறார். பார்வையாளர்களைத் திருப்தி செய்யும் விதத்தில் சுவாரஸ்யமான காட்சிகளோ, திருப்புமுனைகளோ படத்தில் இல்லை. கதாபாத்திரங்களுக்கான சவால்களும் பெரிய அளவில் இல்லை’ என்கிறது.

x