உங்களுக்கென்று ஒரு ரசிகர் ஷோ!- திருப்பூரில் பிரமாதப்படுத்தும் ‘பிரைவேட் ஸ்க்ரீனிங்’


இரா.கார்த்திகேயன்
karthikeyan.r@hindutamil.co.in

கரோனா காலத்தில் மூடப்பட்ட திரையரங்குகள், 8 மாதங்களுக்குப் பிறகு 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படத் தொடங்கிவிட்டன. எனினும், பெரிய நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், ரசிகர்கள் முழுவீச்சில் திரையரங்குகளின் பக்கம் திரும்பவில்லை. இந்நிலையில், ‘பிரைவேட் ஸ்க்ரீனிங்’ எனும் பெயரில் பிரத்யேகக் காட்சிகளைத் திரையிடும் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது திருப்பூர் ‘ஸ்ரீசக்தி சினிமாஸ்’ திரையரங்கு.

பிறந்தநாள், திருமணநாள், அலுவலகக் கொண்டாட்டங்கள் என விசேஷ தினங்களில் தாங்கள் விரும்பிய திரைப்படத்தைத் திரையிட்டு திருப்தியுடன் பார்த்து ரசிக்க, ரசிகர்களுக்கு இது ஒரு புதிய வாய்ப்பு. திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் நடத்தும் திரையரங்கு இது.

“நம் வீட்டுப் பிறந்தநாள் மற்றும் திருமண நாள் விசேஷங்களைப் பொதுவாக உணவகங்களில் கொண்டாடிப் பார்த்திருப்போம். திரையரங்குகளிலும் பலர் கேக் வெட்டிக் கொண்டாடுவார்கள். இதையே விரிவாக்கலாம் என்று நினைத்தோம். இரண்டரை மணி நேரம் அவர்களுக்குப் பிடித்த படத்தையோ அல்லது எங்களிடம் ஓடும் புதிய படத்தையோ ஒளிபரப்பி, திரையரங்கிலேயே கேக் வெட்டி மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதற்காக இந்த ஏற்பாடு செய்துள்ளோம். தமிழகத்தில் முதல்முறையாகத் திருப்பூரில் இதை அறிமுகப்படுத்துகிறோம்” என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம். இதற்கு ரூ.3,999 கட்டணம் செலுத்திவிட்டால் போதுமாம்!

x