உலகம் சுற்றும் சினிமா - 38: அன்பு ஒண்ணுதான் அநாதையா? - ஈரம் பேசும் ஈரானியப் படைப்பு


இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் இன்னொரு உயிரின் துணையை நாடி நிற்கிறது. பரிணாம வளர்ச்சியின் கொடையாக மனிதன், சக மனிதனுக்கு மட்டுமல்லாமல் பிற உயிர்கள் மீதும் அன்பு காட்டுகிறான். பிற உயிர்களின் மீதான வாஞ்சை தரும் மகிழ்ச்சியைப் பலரும் வாழ்வின் ஏதோ ஒரு தருணத்திலாவது உணர்ந்திருக்கக்கூடும். அப்படியான அளவு கடந்த வாஞ்சையே ஒரு மனிதனின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப்போடக்கூடும் என்பதைப் பேசிய படம்தான் பாரசீக மொழிப் படமான ‘தி கவ்’ (1963).

ஈரானிய சினிமாவின் தொடக்கப் புள்ளிகளில் ஒன்று என வர்ணிக்கப்படும் இந்தப் படம், ‘ரியலிசம்’ வகைத் திரைப்படங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. ஈரானிய சினிமாவின் முன்னோடி எனக் கருதப்படும் டாரிஷ் மெக்ருஜி எடுத்த படம் இது.

ஹசனும்... அவரது பசுவும்

ஈரானின் ஒரு சிறிய கிராமத்தில் தனது மனைவியுடன் வசிக்கும் ஏழைக் குடிமகன் மஷ்ட் ஹசான். தம்பதிக்குக் குழந்தைகள் இல்லாத நிலையில், மனைவியிடம்கூட அவ்வளவாக நேரம் செலவழிக்காத ஹசான், தன் பசு மாட்டுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பார். சொல்லப்போனால், ஹசனுக்கு ஒரே உற்ற துணை அவரது வளர்ப்புப் பசு மட்டும்தான். அந்தக் கிராமத்தில் ஒரே பசு அதுதான். அதனால் கிராம மக்களின் பால் தேவைக்கு ஹசான்தான் ஒரே தீர்வு. அதுவே ஹசானுக்குப் பெருமிதமாக இருக்கும்.
ஒரு நாள், வீட்டில் பசுவைக் கட்டிப்போட்டுவிட்டு, அருகில் இருக்கும் நகருக்குச் செல்வார் ஹசான். அப்போது அவரது பசு மர்மமான முறையில் இறந்துவிடும். விஷயம் தெரிந்தால் ஹசானால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது என கிராமத்தினர் கருதுவார்கள். எனவே, பசுவின் உடலைப் புதைக்க முடிவெடுக்கும் அவர்கள், பசு ஓடிப் போய்விட்டது என்று அவரிடம் சொல்ல வேண்டும் என்றும் தீர்மானித்துக்கொள்வார்கள்.

கிராமத்துக்குத் திரும்பி வரும் ஹசான் இந்த விஷயத்தை எப்படி எதிர்கொண்டார், அவரது வாழ்க்கை என்னவானது என்பதை நூறு நிமிட திரைக்கதையில் சொல்லியிருப்பார் டாரிஷ் மெக்ருஜி.

தடைசெய்யப்பட்ட படைப்பு

ஈரானிய புரட்சிக்கு முன்பே இத்திரைப்படம் தன்னளவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. உலக அரங்கில் ஈரான் என்பது சொர்க்க பூமி என்ற போலி பிம்பத்தை நிலைநிறுத்த அன்றைய மன்னராட்சி எத்தனித்துக்கொண்டிருந்த வேளையில், அந்நாட்டின் கிராமங்களில் நிலவும் வறுமையின் மீது இப்படம் வெளிச்சம் பாய்ச்சியது.

‘ரியலிசம்’ வகை சினிமா என்பது மிகைப்படுத்தாமல் உள்ளதை உள்ளபடி காட்டுவது. அதற்கு அர்த்தம் சேர்த்த படமாக ‘தி கவ்’ இருந்தது. படத்தின் ஆரம்பக் காட்சி முதல் இறுதி வரை மனிதர்கள் அனைவரின் முகத்தில் இருக்கும் சோகமும், வறுமையும் அன்றைய ஈரானின் கண்ணாடி பிம்பம் என்றே சொல்ல வேண்டும். இதனால் இத்திரைப்படம் ஈரானில் தடை செய்யப்பட்டது. பின்னர், அரசுக்குத் தெரியாமல் கடத்தப்பட்டு வெனிஸ் திரைப்படத் திருவிழாவுக்கும், பெர்லின் திரைப்படத் திருவிழாவுக்கும் அனுப்பப்பட்டது. பல விருதுகளையும் குவித்தது.

எல்லையற்ற அன்பு

சமூக அமைப்பு, அதில் பெண்களின் நிலை, பொருளாதார நெருக்கடிகள், பக்கத்துக் கிராமத்துடனான பகை, மூட நம்பிக்கைகள் என்று பல்வேறு விஷயங்களை இயல்பாகப் பதிவுசெய்ததால்தான் இத்திரைப்படம் இன்றளவும் போற்றிப் புகழப்படுகிறது. ஹசான் தன் மாட்டை இழந்த பின்பு, மனச் சிதைவுக்கு உள்ளாகும் இடங்களில் மனித மனம் எவ்வளவு பலவீனமானது எனும் உண்மை முகத்தில் அறைகிறது.

அன்பு என்பதற்கு வரையறைகள் இல்லை. ஏதோ ஒரு கணத்தில் அது சட்டென்று முறியும்போது மனம் தன் தடத்திலிருந்து புரண்டு, வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிடும். அதனால்தான் ஹசான் தன்னையே பசுவாகக் கருதிக்கொண்டு இருளில் தெருவெங்கும் அலறிக்கொண்டு திரிவார். இறுதியில், தன் நண்பர்களின் கைகளாலேயே ஒரு மாட்டைப் போல அடிபடும் ஹசானின் கண்ணீருக்குப் பின்னால் தூய்மையான அன்பு மட்டுமே எஞ்சி நிற்கும்.

‘யாரும் இன்றி யாரும் இங்கு இல்லை, இந்தப் பூமியின் மீது தன்னந்தனி உயிர்கள் எங்குமில்லை’- எனும் நா.முத்துக்குமாரின் வார்த்தைகளில்தான் எத்தனை உண்மை பொதிந்துள்ளது!

x