எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in
ஓடிடி என்பது வணிக சினிமாவுக்கான நெருக்கடிகள் இல்லாத களம் என்பதால், இயக்குநர்கள் தங்களுக்கு வசதியான வட்டத்திலிருந்து வெளியேறி புதுமையான பாணியில் தங்கள் படைப்புகளை முன்வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். நெட்ஃப்ளிக்ஸில் அண்மையில் வெளியான ‘பாவக் கதைகள்’ படம் அதற்குச் சரியான உதாரணம்!
குடும்பம் என்ற அமைப்பின் பெயரால் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிலவும் அவலங்களில் சிலவற்றைத் தோலுரிக்கிறது ‘பாவக் கதைகள்’. நான்கு குறும்படங்களின் தொகுப்பாக (ஆந்தாலஜி) வெளியான இந்தப் படம், பரவலான விவாதங்களையும் கிளப்பி உள்ளது. சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன் என தமிழின் மிக முக்கியமான இயக்குநர்கள் தலா ஒரு குறும்படத்தை இயக்கியிருக்கிறார்கள்.
தங்கமான தங்கம்
முதல் குறும்படமான ‘தங்கம்’, பாலினச் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பேசிய விதத்தில் ஜொலிக்கிறது. 80-களின் மேற்கு மண்டலத்தில் நடக்கும் கதை. சத்தார் என்ற சிறுவன், பதின்மத்தில் தன்னுள் பொதிந்திருக்கும் பெண்மையை அடையாளம் கண்டு திருநங்கையாகப் பூரிக்கிறான். தனது பால்ய நண்பனையே காதலிக்கவும் தலைப்படுகிறான்(ள்). படித்து, நகரத்தில் வேலை பார்க்கும் அந்த நண்பனுக்கோ திருநங்கையின் தங்கை மீது காதல். மதங்களைக் கடந்த காதல் - பால் வேறுபாட்டில் திரியாத நேசம்; இந்த இரண்டுக்கும் மத்தியில் சமூகம் தவறவிடும் மானுடத்தைப் பேசுகிறது ‘தங்கம்’.
மூன்றாம் பாலினத்தவரின் காதலைச் சொன்னதற்காகவே கதையாளர் ஷான் கருப்பசாமி, இயக்குநர் சுதா கொங்கரா உள்ளிட்ட படக்குழுவினரைத் தாராளமாகப் பாராட்டலாம். அதிலும் சத்தாராக வரும் காளிதாஸ் ஜெயராம், ஆணின் உடலும் பெண்ணின் மனசுமாக உருக வைத்திருக்கிறார். சத்தாரின் நண்பனாக வரும் சாந்தனு பாக்யராஜுக்கும் இது முக்கியமான படம்.
தடுமாறிய விக்னேஷ் சிவன்
தனது பாணியில் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் ‘லவ் பண்ணா உட்றணும்’ குறும்படம் சுமார்தான். இரட்டையரான 2 அஞ்சலிகளில் ஒருவர் கிராமத்துப் பின்னணியிலும், மற்றொருவர் நகரத்திலுமாக வாழ்கிறார்கள். இவர்களின் கிராமத்து தந்தை வெளியே பெரிய மனிதராகவும், நிழல்மறைவில் கலப்புத் திருமண ஜோடிகளைக் கொல்லும் சாதிவெறிக் கும்பலின் தலைவராகவும் வலம் வருகிறார். மகள்கள் இருவரும் தத்தம் காதலைத் தந்தையிடம் வெளிப்படுத்த முன்வருகிறார்கள். அப்போது நடக்கும் அவலக் களேபரங்களை ‘சர்காஸ்டிக்’ உத்தியில் சொல்ல முயன்று சில இடங்களில் ஜமாய்த்திருக்கும் விக்னேஷ் சிவன், பல இடங்களில் சொதப்பவும் செய்திருக்கிறார்.
தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த அபத்தமான புரிதல், சகோதரியை ஆணவக் கொலை செய்யும் தந்தையை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் மகள், சமூக அவலத்தின் மீதான கதையில் கிச்சுகிச்சு மூட்ட முயலும் நகைச்சுவை என்பதான துறுத்தல்கள் நீள்கின்றன. முத்தக் காட்சிக்கு அப்பால் கல்கி கோச்சலினை வீணடித்திருக்கிறார்கள். ஆனாலும் இரட்டை வேட பாவனைகளில் ஈர்க்கும் அஞ்சலியும், அல்லக்கையாக வந்து அலப்பறை கூட்டும் ஜாஃபர் சாதிக்கும் ஆறுதல் தருகிறார்கள்.
கரைசேரும் கெளதம் மேனன்
மூன்றாவது, கௌதம் வாசுதேவ் மேனனின் ‘வான் மகள்’. 3 குழந்தைகளுடன் மத்திய வர்க்க தம்பதியராக கௌதம் வாசுதேவ்-சிம்ரன் இருவரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். மூத்த மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய பெருமிதத்தில் திளைக்கையில், இன்னும் குழந்தைமை விலகாத இளைய மகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை குடும்பத்தின் நிம்மதியைக் குலைத்துப்போடுகிறது. போலீஸுக்கும் போக முடியாமல், உறவினர்களுக்கும் பதில் சொல்ல முடியாமல், பாதிக்கப்பட்ட பெண் குழந்தையை எதிர்கொள்ளவும் வழியின்றி மத்திய வர்க்கப் பெற்றோர் தள்ளாடும் துயரத்தைச் சொல்ல முயற்சிக்கிறது ‘வான் மகள்’.
மகளின் மீதான கறையைத் தண்ணீரால் கழுவ முயன்று தோற்றுப்போகும் தாயாகவும், சமூகத்தின் கொள்ளிப் பார்வைக்குப் பயந்து விபரீத முடிவில் அலைபாயும் பெண்மணியாகவும் சிம்ரனுக்குக் கனமான கதாபாத்திரம். ஓரளவு ஒப்பேற்றிவிடுகிறார். ஆனால், கனம் தாங்காது கௌதம் வாசுதேவ் தத்தளிக்கிறார். அவரது தனி பாணியிலான ‘வாய்ஸ் ஓவர்’ வசனங்களில், பெண் மீதான சமூகப் பார்வையின் கசடுகளைத் தாளிக்கிறார்கள்.
வியக்கவைத்த வெற்றிமாறன்
பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் ‘ஓர் இரவு’ மிகுந்த கவனம் ஈர்க்கிறது. ஆணவக் கொலை தலைவிரித்தாடும் கிராமத்திலிருந்து ஓடிச்சென்று, நகரத்தில் காதல் கணவனுடன் மகிழ்வாக இருக்கிறார் சாய் பல்லவி. சூலுற்ற மகளைச் சந்தித்து, “பழசெல்லாம் போகட்டும், வளைகாப்பு செய்யலாம் வா...” என்று பாந்தமாய் தந்தை பிரகாஷ் ராஜ் அழைத்து வருகிறார். அதன் பிறகான இரவொன்றில், சாதியில் ஊறிய தந்தைக்கும் அவரது அப்பாவி மகளுக்கும் இடையிலான தவிப்புகளைச் சொல்வதே ‘ஓர் இரவு’.
மிகவும் நெருடலான பாத்திரத்தைக் கவனமாக உள்வாங்கி, மிகையின்றி வெளிப்படுத்தியிருக்கிறார் பிரகாஷ் ராஜ். ஆண்டுகள் கழித்து தந்தையைக் கண்டதில் எட்டிப் பார்க்கும் தவிப்பு, கர்ப்பவதியாக அப்பா மடியில் சாய்ந்துகொள்ளும் வாஞ்சை, அந்த அப்பாவின் சுயரூபம் தெரிந்த பின்னரும் அவருடன் கைவிடாத உரையாடல்… என சாய் பல்லவிக்கும் சவாலான கதாபாத்திரம். தீர்வு என்று எதையும் முன்வைக்காது அவலத்தை மட்டும் முகத்திலறைந்து போகும் கதையில், இயக்குநர் வெற்றிமாறனின் முத்திரை பளிச்சிடுகிறது. தலைப்பையும் கதையின் உள்ளடக்கத்தையும் பிரதிபலிக்கும் இருட்டின் சாயல்களில் நீளும் ஓர் இரவின் ஒளிப்பதிவும் அபாரம்.
ஆணவக் கொலைகள், பாலினச் சிறுபான்மையினரின் துயரம், பெண் மீதான பாலியல் வன்கொடுமை என நாளிதழ்களில் இயல்பாக வாசித்துக் கடக்கும் செய்திகளைத்தான் இந்த ஆந்தாலஜி படைப்புகளின் மையமாக இடம்பெறச் செய்திருக்கிறார்கள். அந்த செய்திகளின் பின்னே பாதிக்கப்பட்டவர்களின் சிரமங்களை நெருக்கமாகப் பதிவுசெய்த வகையில் ‘பாவக் கதைகள்’ தனித்து நிற்கின்றன. அதேநேரம், கேட்கவே காதுகூசும் கெட்ட வார்த்தைகளைச் சேர்ப்பதும் வெற்றிப்படத்துக்கான இலக்கணம் என நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது. அதனால், சகிக்க முடியாத அந்த வார்த்தைகளையும் சரளமாய் சுமந்து வருகின்றன இந்தப் ‘பாவக் கதைகள்’
பொதுச் சமூகத்தின் கூட்டு மனசாட்சியைப் போர்த்தியிருக்கும் தடித்தோலுக்கும் உறைக்கும் வகையிலான இதுபோன்ற படைப்புகளை, அவற்றின் ஒருசில சொதப்பல்களுடன் வரவேற்றாக வேண்டியதும் தற்போதைய சூழலுக்கு அவசியமாகிறது!