நியூயார்க்... இந்தச் சொல்லைப் படித்தவுடன் நம் நினைவுக்கு வருவதெல்லாம் ஒளிவெள்ளத்தில் மிதக்கும் சாலைகள், விண்ணை முட்டும் கட்டிடங்கள், கொண்டாட்டமான தெருக்கள் நிறைந்த நவநாகரிக நகர வாழ்க்கைதான். ஆனால், வன்முறை குணம் கொண்ட கரடுமுரடான மனிதர்களும், அவர்களின் குற்றங்களும் நிரம்பியதுதான் நியூயார்க்கின் உண்மை வரலாறு.
1840-களில் நியூயார்க் தெருக்களில் ஆதிக்கம் செலுத்திவந்த வன்முறைக் குழுக்களுக்குள் ஏற்பட்ட மோதல்களையும், 1862-ல் ஆபிரகாம் லிங்கன் அரசு கொண்டு வந்த அடிமைத்தனம் ஒழிப்பு மற்றும் ராணுவ ஆட்சேர்ப்பு சட்ட வரைவால் எழுந்த கலவரத்தையும் பின்னணியாக வைத்து, மார்ட்டின் ஸ்கார்சஸி இயக்கிய படம் ‘கேங்க்ஸ் ஆஃப் நியூயார்க்’ (2002). லியனார்டோ டிகாப்ரியோ, டேனியல் டே லூயிஸ், கேமரூன் டயஸ் உள்ளிட்டோர் நடித்த இந்தப் படம், ரசிகர்களால் வழிபடப்படும் ‘கல்ட்’ திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
வழக்கமான அமெரிக்கன் கேங்க்ஸ்டர் படங்களிலிருந்து மாறுபட்டு, நியூயார்க் தெருக்களில் ரத்தமும் சதையுமாக அலைந்த ‘டெட் ராபிட்ஸ்’, ‘ப்ளக் அக்லீஸ்’, ‘பௌரி பாய்ஸ்’ போன்ற நிஜமான வன்முறைக் கும்பல்களின் கதையைச் சொல்வதே இப்படத்தின் சிறப்பு.
பழிதீர்க்கும் வாரிசு
1846-ல் நியூயார்க் நகரில் தொடங்குகிறது கதை. ‘ஃபைவ் பாயின்ட்ஸ்’ எனும் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் ஐரிஷ் குடியேறிகளில் பலர், ‘டெட் ராபிட்ஸ்’ எனும் பெயரில் வன்முறைக் கும்பலாக உருவெடுத்திருப்பார்கள். அவர்களை ‘வந்தேறிகள்’ என்று கூறி வெறுக்கும் அமெரிக்கக் கும்பலுக்கும், அவர்களுக்கும் இடையில் நடக்கும் மோதலுடன் படம் தொடங்கும். சண்டைக்கு முன்பு ‘டெட் ராபிட்ஸ்’ கும்பலின் தலைவரும் பாதிரியாருமான வாலோன் தயாராகும் காட்சியிலேயே, தன் கலை நேர்த்தியைப் பதிவு செய்திருப்பார் ஸ்கார்சஸி.
அந்தச் சண்டையில் அமெரிக்கக் கும்பல் தலைவன் ‘பில் தி புட்ச்சர்’ என்றழைக்கப்படும் வில்லியம் கட்டிங், பாதிரியார் வாலோனைக் கொன்றுவிடுவான். ‘டெட் ராபிட்ஸ்’ கும்பல் சிதறிப் போகும். வாலோனின் மகன் ஜூனியர் வாலோன், கிறிஸ்தவ சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுவான். பதினாறு வருடங்கள் கழித்து, தன் தந்தையைக் கொன்ற பில்லைப் பழிவாங்கும் வெறியுடன் ஃபைவ் பாயின்ட்ஸ் பகுதிக்குத் திரும்பும் ஜூனியர் வாலோன், தன் பெயரை ஆம்ஸ்டர்டாம் என்று மாற்றிக்கொண்டு பில்லிடமே வேலைக்குச் சேருவான்.
ஒரு காலத்தில் தனது தந்தையின் சகாக்களாக இருந்தவர்கள், தற்போது பில்லிடம் பணியாட்களாக இருப்பதைப் பார்த்து ஆம்ஸ்டர்டாம் அதிர்ச்சியடைவான். காலத்தின் கோலம் எப்படி இருந்தாலும் தன் பழிவாங்கும் படலத்தை ஆரம்பிப்பான். தன் தந்தையைக் கொன்ற நாளை நினைவுகூரும் விதமாக வருடா வருடம் பில்லே விழா நடத்துவதையும், அதில் தன் தந்தைக்கு அவனே மரியாதை செலுத்துவதையும் அறியும் ஆம்ஸ்டர்டாம், அந்த விழாவிலேயே பில்லைக் கொல்ல வேண்டும் என்று திட்டம் தீட்டுவான். அவன் திட்டம் பலித்ததா, ஊரையே மிரட்டும் பில் ஒரு இளைஞனின் சதிக்குப் பலியானானா என்பதைப் பேசும் படம் இது. இதற்கு இடையில், நியூயார்க் நகரத்தில் அரசியல் சூழல் ஐரிஷ்காரர்களை எப்படிச் சுரண்டியது என்பது பதிவுசெய்யப்பட்டிருக்கும்.
கதையைத் தாங்கும் கதாபாத்திரங்கள்
‘கேங்க்ஸ் ஆஃப் நியூயார்க்’ திரைப்படம் இன்றளவும் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்குக் காரணம், இத்திரைப்படத்தின் வலுவான கதாபாத்திரங்கள்தான். குறிப்பாக, எதிர்மறைக் கதாபாத்திரமான பில் தி புட்ச்சர் கதாபாத்திரம் படைக்கப்பட்ட விதமும், அதை டேனியல் டே லூயிஸ் வெளிப்படுத்திய விதமும்தான் இப்படத்தின் ஆன்ம பலம். உதாரணமாக, பாதிரியார் வாலோனைத் தான் கொன்றிருந்தாலும் அவர் மீது மிகவும் மரியாதை வைத்திருப்பான் பில். அதற்கான காரணமும் அவனிடம் இருக்கும்.
ஒவ்வொரு கதாபாத்திரமும் பிரத்யேகமான, அதே சமயம் வாடிக்கைக்கு மாறான காரணம்/நோக்கத்துடன் படைக்கப்படும்போதுதான் ஒரு திரைப்படம் உன்னதப் படைப்பாக மாறுகிறது. நாயகனான டிகாப்ரியோவை விட, டே லூயிஸே இத்திரைப்படத்தில் அதிகக் கவனம் பெற்றார். பிக் பாக்கெட் அடிக்கும் அழகியான கேமரூன் டயஸ், தீயை யார் அணைப்பது என்று தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளும் ஒரே ஊரின் இரண்டு தீயணைப்புக் குழுக்கள், நியூயார்க்கில் வாழ்ந்த அரசியல்வாதி வில்லியம் ட்வீட் என்று அனைத்து கதாபாத்திரங்களும் ஆழமாகவும், நேர்த்தியாகவும் எழுதப்பட்டிருக்கும்.
இத்திரைப்படம் ஹெர்பெர்ட் அஸ்பெரி எழுதிய ‘கேங்க்ஸ் ஆஃப் நியூயார்க்: அன் இன்ஃபார்மல் ஹிஸ்டரி ஆஃப் தி அண்டர்வோர்ல்ட்’ என்ற புத்தகத்தை மேலோட்டமாக தழுவி எடுக்கப்பட்டது. எனினும், ஆழமான பாத்திரப் படைப்புகளுக்கான புகழ் இப்படத்தின் திரைக்கதை ஆசிரியர்களான ஜே காக்ஸ், ஸ்டீவன் ஸைலியன், கென்னத் லோனர்கன் ஆகியோரையே சேரும்.
‘வடசென்னை’ Vs ‘கேங்க்ஸ் ஆஃப் நியூயார்க்’
‘கேங்க்ஸ் ஆஃப் நியூயார்க்’ படத்தை ஆழ்ந்து கவனித்தால், தமிழில் வெற்றிமாறன் இயக்கிய ‘வடசென்னை’ திரைப்படத்துக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதைக் கவனிக்க முடியும். ‘வடசென்னை’ திரைப்படத்தில், மத்திய சிறையில் செந்திலின் கும்பலுக்குள் கறுப்பு ஆடாக நுழையும் அன்பு கதாபாத்திரத்தில் ஆம்ஸ்டர்டாம் கதாபாத்திரத்தின் சாயலைப் பார்க்கலாம். பில்லின் லேசான சாயலைச் செந்தில் கதாபாத்திரத்திலும், பிக்பாக்கெட் அடிக்கும் ஜென்னி கதாபாத்திரத்தின் சில அம்சங்களை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த பத்மா கதாபாத்திரத்திலும் காணலாம்.
வெளிப்படையாக இக்காரணிகள் புலப்படா விட்டாலும் இரண்டு படத்துக்குமான அடிநாதம் ஒன்றுதான். அவ்வளவு ஏன்... உலகம் முழுக்க இருக்கும் கேங்க்ஸ்டர்களின் உண்மைக் கதையும் இதுதான். அரசாங்கம் சீர்கெட்டு இருக்கும்போது தங்களுடைய அடிப்படைத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள மக்கள் சிறு குழுக்களாகச் சேர்ந்து வன்முறையில் ஈடுபடுகின்றனர். நாளடைவில் அவர்கள் கேங்க்ஸ்டர்களாக அறியப்படுகிறார்கள். மற்ற குழுக்களுடன் மோதல் வளரும், இவர்களின் மத்தியில் பெண்களின் வாழ்வு சுரண்டப்படும். இறுதியில் எப்போதும் வெல்வது… இவர்கள் வளரக் காரணமாக இருந்த அரசாங்கமும், அரசியல்வாதிகளும்தான்.
கையில் ஆயுதத்துடன் அலையும் கேங்க்ஸ்டர்களைவிடவும் மாசற்ற உடையணிந்து மேடையில் தேனாகப் பேசும் அரசியல்வாதிகளே மிகவும் ஆபத்தானவர்கள் என்பதை, அழுத்தமாகப் பதிவுசெய்த படம் இது. இப்படத்தின் கடைசிக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும் விதத்தை அவ்வளவு எளிதாக ஜீரணித்துவிட முடியாது!