சிம்பு வழி தனி வழி!- ‘மஹா’ இயக்குநர் ஜமீல்


க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

‘மாநாடு’ படத்தின் பஞ்சாயத்து தீர்ந்து சிம்பு நல்ல பிள்ளையாகப் படப்பிடிப்புக்கு வர ஆரம்பித்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ‘மாநாடு’ வெளிவருவதற்கு முன்பாகவே, சிம்பு நடித்திருக்கும் ‘மஹா’ படம் வெளியாகவிருப்பது அவரது ரசிகர்களுக்கு போனஸ் மகிழ்ச்சி. இந்தப் படத்தின் இயக்குநர் ஜமீலை சந்திக்கச் சென்றேன். ‘ஜிப்ஸி’ ஜீவா தோற்றத்தில் இருக்கும் ஜமீல், அதே முதிர்ச்சியுடன் அளவெடுத்த வார்த்தைகளில் பேசுகிறார்.

‘மஹா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வந்ததிலிருந்து சர்ச்சையாக இருக்கிறதே... படத்தின் கதைதான் என்ன?

இது ஒரு த்ரில்லர் படம். இதில் ஹன்சிகாவின் கதாபாத்திரத்தை மையப்படுத்தித்தான் கதை சுழலும். அந்தக் கதாபாத்திரத்துக்கு வாழ்வில் ஒரு பெரும் சோகம் இருக்கும். அந்தச் சோகத்தைப் பகிர்ந்துகொள்ள யாரும் இல்லாத சூழலில், புதிதாக ஒரு பிரச்சினை முளைக்கும். அந்தக் கதாபாத்திரம் அந்தப் பிரச்சினையை எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் படத்தின் மையக்கரு. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ஹன்சிகா காவி உடை அணிந்து கஞ்சா புகைப்பது போல் இருந்ததால் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். காசியில் சாமியார்கள் கஞ்சா புகைப்பதைப் புனிதமாகக் கருதுகின்றனர். ஹன்சிகா கதாபாத்திரத்துக்கும் காசியில் ஒரு காட்சி இருக்கிறது. அதைத்தான் ‘ஃபர்ஸ்ட் லுக்’கில் வெளியிட்டோம். சென்ஸார் போர்டு அனுமதித்தால் அந்தக் காட்சியை வைப்போம். இல்லையென்றால் நீக்கிவிடுவோம். ‘மஹா’ படத்தில் ஹன்சிகாவின் கதாபாத்திரத்துக்கு மூன்று விதமான தோற்றங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் அந்தக் காவி உடை தோற்றம்.

x