சினிமா பிட்ஸ்


கங்கணா ரணாவத்தின் சகோதரி ரங்கோலி சாண்டல் பாலிவுட் ஹீரோயின்களை சொடக்குப் போட்டு சவாலுக்கு அழைத்திருக்கிறார். ’’ஹீரோக்கள் துணையின்றி 60 கோடி பட்ஜெட்டுக்கு மேல் உருவாகும் படங்களில் நடித்து அதனை ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆக்க முடியுமா? அப்படிச் செய்தால், கங்கணா இனிமேல் படத்தில் நடிக்கமாட்டாள்” என்பதே அவரது சவால். கங்கணாவை விமர்சித்து இயக்குநர் கபீர் கான் போட்ட ட்விட்டுக்கு பதிலடியாகத்தான் இந்தச் சவாலாம்.
இந்த விஷயம் அக்காவுக்குத் தெரியுமா? கோத்துவிடுற மாதிரில்ல இருக்கு...

‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க தீவிரம் காட்டிவருகிறார் பிரசாந்த். கதாநாயகியாக, தமிழகத்திலிருந்து மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
ஒரு காலத்துல உலக அழகியோட ஜோடி போட்டவரு...

மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறார் ‘ஆடுகளம்’ தயாரிப்பாளர் கதிரேசன். மலையாளத்தில் ப்ரித்விராஜ் நடித்த கதாபாத்திரத்தில் தனுஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.
அது முன்னாள் ராணுவ அதிகாரி வேடமாச்சே?!!!

தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் யாஷிகாவுக்கும் காதல் என்ற செய்தி கடந்த வாரம் முழுவதும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. யாஷிகாவும் மறுப்பேதும் சொல்லாமல் மௌனம் காத்தார். ஆனால் தம்பி ராமையாவோ, “அய்யய்யோ, இதுல உண்மையில்லை சாமி. என் மகனுக்கு மலேசியாவில் பெண் பார்த்து வருகிறேன்” என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மைக்க பையன்கிட்ட கொடுங்க சார்...

x