குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத தம்பதிக்கு விந்தணுவைக் கொடையளிக்கும் இளைஞனுக்கு அதனால் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களும் உணர்வுப் போராட்டங்களுமே ‘தாராள பிரபு’.
‘விக்கி டோனர்’ இந்திப் படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தை கிருஷ்ணமூர்த்தி மாரிமுத்து இயக்கியிருக்கிறார். அசல் கதையில் பெரிய மாற்றங்களைச் செய்யாமல் திரைக்கதையில் மட்டும் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்து அசலைப் போலவே கலகலப்
பாகவும் சுவாரசியமாகவும் கொடுத்திருக்கிறார்.
கொஞ்சம் கவனக் குறைவாக இருந்திருந்தால்கூட விரசத்தைத் தொட்டுவிட்டிருக்கக் கூடிய கருவை கவனமாகவும் நேர்த்தியாக
வும் கையாண்டிருக்கிறார் இயக்குநர். இரட்டை அர்த்த நகைச்சுவை வசனங்கள்கூட பூடகமாக வருவதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் முகம் சுளிக்காமல் ரசிக்க முடிகிறது.
படத்தின் முன்பகுதி கலகலப்பாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் கொஞ்சம் தொய்வு ஏற்படத் தொடங்குகிறது. இறுதிக் காட்சியை முன்கூட்டியே ஊகித்துவிட முடிவதால் சுவாரசியமும் போய்விடுகிறது.