சினிமா பிட்ஸ்


உலக சினிமாக்களில் நடிப்பதில் அதீத ஆர்வம் காட்டிவருகிறாராம் டாப்ஸி. ஏற்கெனவே, ‘இன்விஸிபில் கெஸ்ட்’ என்ற ஸ்பானிஷ் படத்தின் ரீமேக்கான ‘பத்லா’ என்ற இந்திப் படத்தில் நடித்தவர், தற்போது ‘ரன் லோலா ரன்’ என்ற ஜெர்மானிய படத்தின் ரீமேக்கிலும் நடிக்கவிருக்கிறார். ‘ரன் லோலா ரன்’ படம் என்ன கதையென்று தலையைப் பிய்க்க வேண்டாம், ஏற்கெனவே தமிழில் ‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’ வந்ததே... அது அந்தப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டதுதான்.
ரெண்டு `ரன்' இருந்தும் `மூன்று களவாணிகளும்' ஓடலியே, ஏன்?

சாதி சர்ச்சையால் பிரபலமாகியிருக்கும் திரௌபதி படத்தில் நடித்திருக்கும் ரிச்சர்ட் ரிஷி, நடிகை ஷாலினியின் சகோதரர். இந்தப் பிரச்சினையில் எங்கே தன்னையும் கோத்துவிட்டுவிடுவார்களோ என்று பயப்படுகிறாராம் தல. தனது மச்சான் ரிச்சர்ட்டை அழைத்து, “திரௌபதி படம் பற்றி பேசும்போது என்னைப்பற்றி எதுவும் பேசிறாத சாமி” என்று கண்டிப்புடன் சொல்லி இருக்கிறாராம் அஜித்.
தேரை இழுத்து தெருவுல விட்டுறாதீங்க மச்சான்...

“‘புன்னகை மன்னன்’ படத்தில் அந்த முத்தக்காட்சிக்கு நான் மறுப்பு சொன்னேன். ஆனால், பாலச்சந்தர் சாரும் கமல்ஹாசனும் முன்பே பேசி வைத்து நான் எதிர்பார்க்காதபோது கமல் எனக்கு முத்தம் கொடுத்துவிட்டார்” என்று நடிகை ரேகா சமீபத்தில் சொன்ன விஷயம் சமூக வலைதளங்களில் பரபரப்பாகியுள்ளது. ‘இது பாலியல் அத்துமீறல். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?’ என்று கமலிடம் ட்விட்டரில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கட்சி ஆரம்பிச்சதுக்கே இப்படின்னா... ஒருவேளை அவர் முதல்வரானா... கிளிண்டன் கதை தானா?

‘தலைவி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏகப்பட்ட விமர்சனங்களைச் சந்தித்தது. ‘கங்கனா ரணாவத் ஜெயலலிதா மாதிரியே இல்ல... மேக் - அப் சுத்தமா செட்டாகல’ என்று கலாய்த்துத் தள்ளினார்கள் இணையவாசிகள். அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது சமீபத்தில் வெளியான செகண்ட் லுக். “இப்பத்தான்யா, அவங்க ஜெயலலிதா மாதிரி இருக்காங்க” என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
படப்பிடிப்பு முடியுற வரைக்குமாச்சும் நல்லாச் சாப்பிடுங்க அம்மையாரே...

x