உலகம் சுற்றும் சினிமா - 32: உறைந்த உள்ளத்தின் கதை


இந்த உலகத்திலேயே கெட்டவர்கள் யார் என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொண்டால், பலரை மனது அடையாளம் காட்டும். உலகில் நல்லவர் யார் என்று கேட்டாலோ தயக்கமே இல்லாமல், ‘என்னைவிட நல்ல மனிதர் யார்?’ என்ற எண்ணம்தான் எல்லோருக்கும் வரும். இது இயல்பான ஒன்று. அனைவரிடமும் குறை காணும் மனது, மற்றவர்களின் பார்வையில் நாம் பல குறைகளுடன் இருந்தாலும், நாம் பரிசுத்தமானவர்தான் என்றே நம்மை நம்பவைக்கிறது. இந்த எண்ணம் நம் சுற்றத்தாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். உறவுகள் சிதையும். ‘நான் ஒருவனே பரிசுத்தமானவன்’ எனும் மயக்க நிலையிலிருந்து விலகி வெளிவருவதே பெரும் வாழ்க்கைப் பாடம். அந்தப் பாடத்தைப் புகட்டவல்ல திரைப்படம்தான் ‘வின்டர் ஸ்லீப்’. 2014-ல், துருக்கிய மொழியில் வெளிவந்த படம் இது.

பனியில் உறைந்தது போன்ற கள்ள மவுனத்துடன் இருக்கும் மனதின் நிர்வாணத்தை, உள்ளது உள்ளபடி காட்சிப்படுத்திய இத்திரைப்படம், ஆண்டன் செகாவ் எழுதிய ‘தி வைஃப்’ என்ற சிறுகதையையும், ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி எழுதிய ‘கரமசோவ் பிரதர்ஸ்’ புதினத்தில் வரும் கிளைக் கதையையும் தழுவி எடுக்கப்பட்டது.

முரண் நிறைந்த வாழ்க்கை

முன்னாள் மேடை நடிகரான அய்டின், தனக்கு இருக்கும் பல சொத்துகளை வாடகைக்கு விட்டுவிட்டு, ஒரு தங்கும் விடுதியை நடத்திவருவார். அய்டினுக்கு இருக்கும் சொந்தமெல்லாம் அவரைவிடப் பல வருடங்கள் இளமையான அவரது மனைவி நிகாள், அவரது சகோதரி நெக்லா, அவரது பணியாள் ஹிதாயத் ஆகியோர்தான். தான் வாழும் பகுதியில் பிரசுரமாகும் நாளிதழில் ஒவ்வொரு வாரமும் கட்டுரைகள் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார் அய்டின். இதுபோக, துருக்கிய நாடக வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியிருப்பார்.

அய்டினைப் பொறுத்தவரையில் அவர் ஒப்பற்ற மனிதர், அப்பழுக்கற்றவர். மற்றவர்களும் தன்னைப் போலவே அனைத்து விஷயங்களிலும் கச்சிதமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர். தான் சந்திக்கும் குறைபாடுள்ள மனிதர்களை
யும், அவர்களது செயல்களையும் மூலமாக வைத்துப் பல கட்டுரைகள் எழுதிவருவார்.

ஆரம்பத்தில் இவரது எழுத்துகளைப் பாராட்டும் அய்டினின் சகோதரி, நாளடைவில் காட்டமான விமர்சனங்களை முன்வைப்பாள். “வளமையான வாழ்க்கையின் நிழலில் இளைப்பாறிக்கொண்டு, ஏழ்மையில் வாடுபவனைப் பார்த்து, ‘நீ அசுத்தமாக இருக்கிறாய்’ என்ற மனசாட்சியற்ற விமர்சனங்களைத்தான் நீ எழுதிக்கொண்டிருக்கிறாய்” என்று விமர்சிப்பாள். இருவருக்குள்ளும் வாக்குவாதம் வலுத்து சொற்களால் தாக்கிக்கொள்வார்கள்.

அய்டினின் மனைவி நிகாளும் தனது கணவரின் போக்கில் வெறுப்பு உள்ளவராக இருப்பாள். தன் இளமைக் காலம் முழுவதும் அய்டினுடன் சண்டை போட்டே கழித்திருப்பாள். தனது வாழ்வுக்கு அர்த்தம் சேர்க்கும் விதமாக, ஏழை மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களுக்கு நன்கொடை திரட்டுவாள். அது அய்டினுக்குப் பிடிக்காது. தன் வீட்டில் வாடகைக்கு வசிக்கும் குடிநோயாளியான இஸ்மாயிலின் குடும்பத்துடனும் மனக்கசப்பில் இருப்பார் அய்டின். இந்தச் சூழலில் இவர்களின் வாழ்க்கை என்னவாகிறது என்பதுதான் படத்தின் கதை.

உணர்வு ததும்பும் உரையாடல்கள்

அய்டினின் பார்வையில் அவரைச் சுற்றியுள்ள அனைவரிடத்திலும் குறை இருக்கிறது. அவர்களது பார்வையிலோ அய்டின் மிக மோசமான மனிதர். ஆனால், இவையனைத்தும் அந்தக் கதாபாத்திரங்களின் எண்ணங்களே. பார்வையாளர்களான நாம் இவர்
கெட்டவர், இவர் நல்லவர் என்ற குறுக்கு விசாரணையே செய்ய முடியாத வண்ணம் திரைக்கதை அமைக்கப்
பட்டிருக்கும். காட்சிகள் அனைத்தும் உரையாடல்களின் மூலமாகக் கட்டமைக்கப்பட்டிருப்பது இத்திரைப்படத்தின் தனிச்சிறப்பு. ஒவ்வொரு கதாபாத்திரமும் நேர்த்தியாக, கச்சிதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. கதாபாத்திரத்
தின் குணாதிசயங்களும் உரையாடல் மூலமாகவே கட்டமைக்கப்பட்டிருக்கும். திரைக்கதை எழுதுவோருக்கு இத்திரைப்படம் சிறந்த கையேடாக இருக்கும்.

நீ...ண்ட காவியம்

2014-ம் ஆண்டுக்கான கான்ஸ் திரைப்பட விழாவில் இப்படம் இரண்டு விருதுகளைப் பெற்றது. இத்திரைப்பட விழாவில் விருது பெற்ற மிக நீளமான படம் இதுதான். 3 மணி நேரம் 26 நிமிடங்கள் ஓடக்கூடியது. படத்தில் நடக்கும் உரையாடல்கள் நம் கண்முன்னே ஒரு கண்ணாடிக்கு அப்பால் நடப்பது போன்ற உயிரோட்டமுள்ள வகையில் உருவாக்கியிருப்பார் இயக்குநர் ந்யூரி பில்ஜ் சீலன்.
வயது முதிர்வால் உடலால் தளர்ந்தும், மனதால் இறுகியும் போன அய்டினுக்கும் அவரது இளம் வயது மனைவிக்கும் இடையே நடக்கும் உறவுப் போராட்டத்தை ஆண்டன் செகாவ் எழுதிய ‘தி வைஃப்’ சிறுகதையிலிருந்தும், குடிக்கு அடிமையாகி குடும்பத்தைப் பரிதவிக்கவிடும் இஸ்மாயிலின் கதையை ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி எழுதிய ‘கரமசோவ் பிரதர்ஸ்’ நாவலின் கிளைக் கதையிலிருந்தும் உருவாக்கியிருப்பார் இயக்குநர்.

படத்தின் இறுதிக்காட்சியில் அய்டின் நடத்தும் விடுதியின் முழுத்தோற்றம் வானிலிருந்து காட்டப்படும். துருக்கிக்கே உரித்தான கரடுமுரடான பாறைப் பிரதேசங்களுக்கு இடையே அந்த விடுதி வசதியாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும். அந்தக் காட்சியைப் பார்க்கும் போது, ஆயிரம் குறைகள் இருந்தாலும் மனதின் இடுக்கில் சுரக்கும் அன்புதான் நினைவுக்கு வரும்.

வாழக்கையை நம்முடன் பங்கிட்டு வாழும் சக மனிதர்களின் உணர்வுகளைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் ‘நான்’ என்ற பனியில் உறைந்துபோய்க் கிடக்கும் மனங்களுக்கு, ஒரு விழிப்பு மணிதான் இந்தப் படம். தவறுகளைக் கடந்து, குறைகளை மெச்சி, உறவுகளின் கரம் பிடித்து வாழ்க்கையைக் கடப்பதே சிறந்த வழி. உறவுகளைவிட உயர்ந்தது நமக்கென்ன இருந்துவிடப் போகிறது? என்ன இருந்தாலும் நாம் அனைவரும் சாதாரண மனிதர்கள்தானே!

மக்கள் புரட்சியைப் பற்றிய கதைகள் என்றுமே சுவாரசியமானதாக இருக்கும். நிற்காமல் ஓடும் ரயிலுக்குள் ஒரு புரட்சி நடந்தால்? அடுத்த வாரம் பார்ப்போம்.

x