க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in
செய்தி வாசிப்பாளராக கேமரா முன்பு தோன்றி, நெடுந்தொடர் நடிகையாக வளர்ந்து, இன்று தமிழ்த் திரையுலகின் பிஸியான ஹீரோயினாக மிளிர்கிறார் ப்ரியா பவானி சங்கர். ஷூட்டிங் ஓய்வில் இருந்த சமயத்தில் அவரைச் சந்தித்தேன். சிரித்த முகம் மாறாமல் அத்தனை கேள்விகளுக்கும் ஆழ்ந்த நிதானத்துடன் பதிலளித்தார் ப்ரியா.
‘இந்தியன் - 2’ படத்துல என்ன கதாபாத்திரத்துல நடிக்கிறீங்க?
அந்த படத்தைப் பற்றி எதுவும் வெளியே இப்போ சொல்ல முடியாது. அதிகாரபூர்வ அறிவிப்பு வரட்டும். என் வாழ்க்கையோட ஒரு முக்கிய நிகழ்வாகத்தான் ‘இந்தியன் 2’ படத்தைப் பார்க்கிறேன். சில மாதங்களுக்கு முன்னால, ‘கமல் இனி நடிக்க மாட்டார்’னு ஒரு செய்தி வந்துச்சு. அதைக் கேள்விப்பட்டதும் ரொம்பக் கவலைப்பட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு, ‘மாஃபியா’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிச்சிடுச்சு. முதல் நாள் படப்பிடிப்புல கலந்துக்கிட்டப்போ ஒரு போன் கால். ‘இந்தியன் - 2’ படத்துல நடிக்க ஷங்கர் சார் அலுவலகத்துல இருந்து வந்த அழைப்பு அது. உடனே போய்ட்டேன். ஸ்கூல்ல படிச்சப்போ ‘இந்தியன்’ பட பாட்டுக்குக் கலை நிகழ்ச்சியில ஆடியிருக்கேன். இப்போ அதே படத்தின் ரெண்டாவது பாகத்துல நடிக்க வாய்ப்பு வரும்போது மிஸ் பண்ணிடக் கூடாது. ஏதாவது சின்ன ரோலா இருந்தாலும் யோசிக்காம பண்ணிடணும்னு நினைச்சிட்டுப் போனேன். ஷங்கர் சார் என்கிட்ட கதையை விவரிச்சார். என் கதாபாத்திரத்துக்குத் திரைக்கதையில முக்கியமான பங்கு இருந்தது. கதையைச் சொல்லி முடிச்சிட்டு, “யோசிச்சு சொல்லுங்க”ன்னு சார் சொன்னார். “யோசிக்கிறதா? எப்ப ஷூட்டிங்னு சொல்லுங்க…வந்துடுறேன்”னு சொல்லிட்டேன்.