உலகம் சுற்றும் சினிமா - 30: ஆதியும் நானே அந்தமும் நானே


காலத்தின் ஆரம்பம் எது, முடிவு எது? யாரால் இதற்குப் பதில் சொல்ல முடியும்? காலத்தின் சூட்சும சக்கரத்தின் ஒரு துளி அளவை வாழ்நாளாகக் கொண்ட நாம், காலத்தை அவதானிக்க முயலுவதே வேடிக்கையான விஷயம்தான். இப்படியான நிலையில், கால சூட்சுமத்தை ஒரு கதையாகச் சொல்ல முடியுமா? இதுதான் ஆரம்பம் என்று அறுதியிட்டுக் கூறாமல், இதுதான் முடிவு என்று முற்றுப்புள்ளியும் வைக்காமல் ஒரு கதையை உருவாக்க முடியுமா?

முடியும் என்பதை ‘ப்ரீடெஸ்டினேஷன்’(2014) படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள் ஸ்பீரிக் சகோதரர்கள். இரட்டை இயக்குநர்களான பீட்டர் ஸ்பீரிக் மற்றும் மைக்கல் ஸ்பீரிக் உருவாக்கிய இந்தப் படம், வழக்கமான காலப் பயணக் கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படம். சிக்கலான கதைக்கருவைக் காட்சிமொழியாகப் பார்வையாளர்களுக்கு எளிமையாகக் கடத்துவது எப்படி என்பதை விளக்கும் இத்திரைப்படம், சிறந்த திரைக்கதைக்கு உதாரணம்.

முடிவில்லாக் காலப்பயணம்

காலப் பயணம் மேற்கொண்டு, தவறுகள் நடக்கும் முன்பே அவற்றைத் தடுக்கும் காலப் பயண ஏஜென்டாகப் பணிபுரிபவர் டோ. தொடர் வெடிகுண்டு வைக்கும் ‘ஃபிஸில் பாமர்’ எனும் சைக்கோ கொலைகாரன் வைத்த வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்ய முயலும் காட்சியில் படம் தொடங்கும். அந்த முயற்சி தோற்றுப்போக முகம் சிதைந்த டோ, எதிர்காலத்துக்குத் தப்பிச் சென்று அறுவைசிகிச்சையின் மூலம் புது முகத்தைப் பெறுவார். தனது இறுதி அசைன்மென்ட்டை முடிக்க 1970-க்குப் பயணப்படுவார். அங்கே தனது அடையாளத்தை மறைத்து மதுபானக் கடையில் பணியாளராக இருப்பார்.

அந்த மதுபானக் கடைக்கு ஜான் எனும் நபர் வருவார். மகளிர் பத்திரிகை ஒன்றில் பெண் புனைப்பெயரில் பொய்யான அனுபவங்களை எழுதும் ஜான், தன் வாழ்க்கைக் கதையை ஏஜென்ட் டோவிடம் பகிர்ந்துகொள்வார். பிறக்கும்போது பெண்ணாகப் பிறந்த ஜான், அனாதை இல்லத்தில் ஜேன் என்ற பெயரில் வளர்கிறாள். இளம் வயதில் தன் வாழ்வில் சந்திக்கும் ஒருவனுடன் காதல் வயப்பட்டு கர்ப்பமுற்றுவிடுகிறாள். அந்தக் காதலன் ஒரு நாள் காற்றோடு காற்றாகக் கலந்தது போல் காணாமல் போய்விடுவான். மருத்துவமனையில் ஜேனுக்குப் பெண் குழந்தை பிறந்த பின்புதான், அவளது உடலுக்குள் ஆணுக்கான பாலின உறுப்புகளும் இருக்கின்றன என்பது தெரியவரும். பிள்ளைப்பேறின் போது அவளின் பெண் அங்கங்களை அகற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதால், அவள் ஆணாக மாறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று மருத்துவர்கள் கூறுவார்கள். அதனால் ஜானாக மாறுவாள் ஜேன். இதற்கிடையில் அவளது குழந்தை மருத்துவமனையில் மர்ம மனிதனால் கடத்தப்படும். தன் வாழ்க்கை சீரழிந்ததற்குக் காரணம் தனது காதலன்தான் என்றும் அவனைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் கூறுவான் ஜான்.

நானே நானா?

ஜானின் காதலனை அவன் கண்முன் நிறுத்தினால், தான் பார்க்கும் ஏஜென்ட் வேலையை தனக்கு அடுத்து ஏற்றுக்கொள்ளத் தயாரா என்று டோ கேட்பார்.

அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வான் ஜான். ஏஜென்டுடன் காலப் பயணம் மேற்கொள்வான். தான் பெண்ணாக இருந்தபோது தன் காதலனைச் சந்தித்த நேரத்துக்கு சில மணித்துளிகள் முன்னதாக சென்று அதே இடத்தில் காத்திருப்பான் ஜான். அப்போது தன் கடந்த காலப் பெண் உருவமான ஜேன் மீது மோதிவிடுவான். இருவருக்கும் இடையில் காதல் மலரும். அப்போதுதான் ஜானுக்கு ஓர் உண்மை புரியும். தன் காதலன் வேறுயாருமில்லை தான்தான் என்று அறிந்துகொள்வான்.

தன்னுடன் தானே கூடி, ஜானுக்கு ஒரு குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தையும் காணாமல் போய்விடும். உண்மையில், குழந்தையைத் திருடுவது ஏஜென்ட் டோதான். அந்த குழந்தையைக் காலத்தில் பின்னோக்கி அழைத்துச்சென்று 1945-ம் ஆண்டுக்குச் சென்று, ஓர் அனாதை இல்லத்தில் விட்டுவிடுவார். அந்தக் குழந்தைதான் ஜேன். ஏஜென்ட் வேறு யாருமல்ல. அறுவைசிகிச்சைக்குப் பிறகு புது முகத்துடன் இருக்கும் ஜான்தான், ஏஜென்ட். அந்த ஏஜென்ட்தான், தன்னையே 1970-ல் மதுபானக் கடையில் சந்தித்து, காலத்தில் பின்னோக்கி பயணிக்கவைத்து, தன் பெண் உருவத்துடன் சந்திக்க வைத்து, அதன் மூலம் தனக்குத் தானே குழந்தையாகப் பிறந்து, அந்தக் குழந்தை தான் தான் என்று தெரிந்தும் அதை அனாதை இல்லத்தில் கொண்டு போய்விடுவார்.

திறமையான திரைக்கதை

இதைப் படிக்கும்போது லேசாகத் தலைசுற்றுகிறது அல்லவா? ஆனால், இதைக் காட்சிமொழியாகக் கொஞ்சம்
கூட பிசிறு தட்டாமல் நேர்த்தியாகச் சொல்லியிருப்பார்கள் ஸ்பீரிக் சகோதரர்கள். இந்தப் படம் பார்த்த பிறகு ஜேனின் பிறப்பு எப்போது தொடங்குகிறது, இந்த கதையின் ஆரம்பப்புள்ளி என்பது எது என்ற கேள்வி நம்மை நிச்சயம் துரத்தும்.
திரைக்கதையின் இந்த முடிச்சுதான் இந்தப் படத்தைக் காலப் பயணப் படங்களின் வரிசையில் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறது. இறுதியில் ‘ஃபிஸில் பாம’ரை ஏஜென்ட் டோ, எதிர்கொள்ளும் காட்சி ஸ்பீரிக் சகோதரர்களின் திரைக்கதைத் திறனுக்கு ஒரு துளி பதம்.

வித்தியாசமான திரைக்கதையம்சம் கொண்ட ஸ்பானிய மொழி க்ரைம் த்ரில்லர் படத்தைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

x