உலகம் சுற்றும் சினிமா - 29: சர்வாதிகாரியின் சரித்திரப் புனைவு


இடி அமீன்! உலக வரலாற்றின் இருண்ட பக்கங்களில் ரத்தம் தோய்ந்த இந்தப் பெயரை யாராலும் மறக்க முடியாது. சாதாரண எடுபிடி வேலையாளாக உகாண்டா ராணுவத்தில் சேர்ந்து, ராணுவத் தளபதியாகி இறுதியில் உலகையே நடுங்கவைத்த சர்வாதிகாரியாக உருவானவர். சாத்தானின் மறு உருவம் என்றே இன்றும் ஆப்பிரிக்க மக்களால் நினைவுகூரப்படுபவர். மனிதக் கறி உண்டவர், வதை முகாம்கள் நடத்தியவர் என்று அவரைப் பற்றி உலா வரும் தகவல்களும் திகைக்க வைக்கக்கூடியவை.

இப்படிப்பட்ட இடி அமீனின் வாழ்வின் ஒரு பகுதியைக் கற்பனையும் நிஜமும் கலந்து பதிவுசெய்த திரைப்படம்தான் ‘தி லாஸ்ட் கிங் ஆஃப் ஸ்காட்லேண்ட்’. பாப் மார்லி, விட்னி ஹாஸ்டன், மிக் ஜாகர் போன்ற பாடகர்களைப் பற்றிய ஆவணப் படங்களையும், ‘ஸ்டேட் ஆஃப் ப்ளே’ (2009), ‘தி ஈகிள்’ (2011), ‘ப்ளாக் ஸீ’ (2014) போன்ற திரைப்படங்களையும் இயக்கிய கெவின் மெக்டொனால்ட் இயக்கிய படம் இது. ஜைல்ஸ் ஃபொடன் எழுதிய ‘தி லாஸ்ட் கிங் ஆஃப் ஸ்காட்லேண்ட்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இடி அமீனின் உண்மை முகத்தைப் பதிவு செய்ததற்காக இத்திரைப்படம் கொண்டாடப்பட்டது.

தனக்குப் பல்வேறு பட்டப் பெயர்களைச் சூட்டிக்கொள்வதில் புளகாங்கிதம் அடையும் இடி அமீன், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தன்னை ஸ்காட்லாண்டின் கடைசி மன்னன் என்று கூறிக்கொண்டார். அதுவே இப்படத்துக்கும், இதன் மூலமான நாவலுக்கும் பெயராகிப்போனது.

சுவாரசியத்தைத் தேடி

இப்படத்தில் இடி அமீனைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் உண்மையில் நடந்தவைதான் என்றாலும் கதையில் பிரதானமாக இடம்பெறும், நிக்கோலஸ் காரிகனின் கதாபாத்திரம் கற்பனையாகப் புனையப்பட்டது. ஸ்காட்லாண்டைச்  சேர்ந்த, செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவனாக இந்தக் கதையில் காரிகனின் பாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்த காரிகன் சுவாரசியங்களே இல்லாத குடும்ப மருத்துவர் பணியை ஏற்க மனமில்லாமல் இருப்பான். உலக உருண்டையைச் சுழற்றிவிட்டு தன் விரல் தொடும் இடத்துக்குப் பயணப்படலாம் என்று முடிவெடுப்பான். அவனது விரல் தொடும் இடம் உகாண்டா.

உடனே அந்நாட்டுக்கு மருத்துவப் பணியாற்றக் கிளம்புவான். அவன் உகாண்டா போய்ச் சேரும் தினத்தில்தான், ராணுவப் புரட்சி செய்து மில்டன் ஒபாடோவின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு உகாண்டாவின் அதிபராகியிருப்பார் இடி அமீன். சில நாட்கள் கழித்து, காரிகன் வேலை செய்யும் சிறிய கிராமத்துக்கு வருவார் இடி அமீன். அப்போது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு காரிகனுக்குக் கிடைக்கும். அவனது சாதுரியத்தால் ஈர்க்கப்படுவார் இடி அமீன். அவன் ஸ்காட்லாண்டைச் சேர்ந்தவன் என்பதை அறிந்துகொண்டதும் அவன் மீது அவருக்கு மேலும் ஆர்வம் பிறக்கும். இடி அமீன் ராணுவத்தில் இருந்தபோது அவருடன் இணைந்து பணியாற்றிய ஸ்காட்லாண்ட் வீரர்கள் மீதும், ஸ்காட்லாண்ட் கலாச்சாரத்தின் மீதும் அவருக்கும் இருந்த ஈடுபாடே அதற்குக் காரணம்.

தகர்ந்துபோகும் நம்பிக்கை

இடி அமீனுக்கும் அவரது குடும்பத்துக்கும் பிரத்யேக மருத்துவராகும் வாய்ப்பு காரிகனுக்குக் கிடைக்கும். கூடுதலாக அமீனுக்கு அரசாங்க ரீதியாக ஆலோசனை வழங்கும் வாய்ப்பும் கிடைக்கும். ஆரம்பத்தில் இடி அமீன் உகாண்டாவின் தலையெழுத்தை மாற்றி அமைப்பார் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் காரிகனுக்கு அவரது சர்வாதிகாரப் போக்கு பேரதிர்ச்சியாக இருக்கும். அவனது அதிருப்தி மனநிலையை உணர்ந்துகொள்ளும் இடி அமீன், அவன் உகாண்டாவைவிட்டு வெளியேறாத வண்ணம் அவனது பாஸ்போர்ட்டை மாற்றியிருப்பார்.

இதற்கிடையே, இடி அமீனின் மூன்றாவது மனைவியான கே என்ற யுவதியுடன் காரிகனுக்குப் பழக்கம் ஏற்படும். அது காதலாக மாறும். அதன் விளைவாக கே கர்ப்பம் தரிப்பாள். இது இடி அமீனுக்குத் தெரிந்துவிடும். அவரது கோபத்திலிருந்து காரிகனும், கேவும் தப்பித்தார்களா என்பது படத்தின் மீதிக் கதை.

உண்மைச் சம்பங்களின் நகல்

மோசமான சர்வாதிகாரியின் உண்மைப் பக்கங்களில், ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தை உலவவிட்டு அந்தக் கதாபாத்திரத்தின் கண்ணோட்டத்திலேயே அந்த வரலாற்று நிகழ்வுகளை அற்புதமாக ஆவணப்படுத்தி யிருப்பார் இயக்குநர் கெவின் மெக்டொனால்ட். இடி அமீன் மனித மாமிசத்தை உண்டவரா, தனது இறப்பைப் பற்றி அவர் முன்கூட்டியே கனவு கண்டது உண்மையா, ஆசிய மக்களை 90 நாட்கள் கெடு வைத்து தன் நாட்டை விட்டு ஏன் துரத்தினார் என்பன போன்ற பல கேள்விகளுக்கான பதில்களும் படத்தின் ஓட்டத்தில் ஆங்காங்கே தென்படுவதைக் கவனிக்கலாம்.

இடி அமீனாக மாறிப்போன நடிகர்

இந்தத் திரைப்படத்தில் இடி அமீனாக நடித்தவர் ஃபாரஸ்ட் விட்டேகர். நடித்தார் என்பதைவிட இடி அமீனாக வாழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும். அதனால்தான் மறுபரிசீலனைக்கே இடமில்லாமல் ஆஸ்கர் விருது அவரைத் தேடி வந்தது. உலகம் முழுக்க வெளியான இத்திரைப்படம் உகாண்டாவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. விட்டேகர், இடி அமீனாகவே பார்க்கப்பட்டார். ‘எக்ஸ் மென்’ படங்களில் புரொஃபசர் சார்லஸ் சேவியராக வரும் ஜேம்ஸ் மெக்காவி இத்திரைப்படத்தில் நிக்கோலஸ் காரிகனாகத் தன் அபார நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருப்பார்.

பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் இஸ்ரேல் விமானம் கடத்தப்பட்டு, உகாண்டாவின் என்டபி நகர விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட நிகழ்வும் படத்தில் பிரதானமாக இடம்பெறுகிறது.

ஒரு நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரமும் தனி மனிதனின் கைகளில் சிக்கினால் என்னவாகும் என்பதற்கு இடி அமீனும் ஒரு உதாரணம். அந்த உதாரணத்தைச் சமரசமின்றி பதிவுசெய்த ‘தி லாஸ்ட் கிங் ஆஃப் ஸ்காட்லேண்ட்’ ஒரு சுவாரசியமான வரலாற்றுப் புனைவு.

இடியாப்பச் சிக்கலான கதையம்சம் கொண்ட காலப் பயணக் கதையின் அடிப்படையில் உருவான திரைப்படத்தைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

x