நடிகர்கள் முதல்வராக ஆவதற்கான முயற்சிகள் உச்சம் பெற்றிருக்கும் இன்றைய சூழலில், ‘ஒன்’ எனும் மலையாளப் படத்தில் முதல்வராகவே நடிக்கிறார் மம்மூட்டி. இந்தப் படத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் வேடத்தில் மம்மூட்டி நடிப்பதாகச் சிலர் கிளப்பிவிட்டதால், படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைத்திருக்கும் சூழலில், இயக்குநர் சந்தோஷ் விஸ்வநாத்தைத் திருவனந்தபுரத்தில் சந்தித்தேன். அவரிடம் பேசியதிலிருந்து…
இந்தப் படத்தில் பினராயி விஜயன் பாத்திரத்தில் மம்மூட்டி நடிப்பதாகச் சொல்லப்பட்டதே. அது உண்மையா?
இல்லை. இந்தப் படத்துக்கும் பினராயி விஜயனுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. படத்தில் மம்மூட்டியின் பாத்திரத்தின் பெயர் கடைக்கால் சந்திரன். இது அரசியல் த்ரில்லர் படம். ஒரு குடும்ப விவகாரத்திலிருந்து தொடங்கி அரசியல் பின்னணிக்குள் நகரும் கதை. சமூகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை விதைக்க, பெரிய பதவிகளில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. விடாமுயற்சியோடு தொடர்ந்து போராடினால் சாமானியனும் புரட்சி செய்ய முடியும்…மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதை ஒரு குடும்பத்தின் பின்னணியில் சொல்லியிருக்கிறேன்.
படப்பிடிப்புத் தளத்தில் பினராயி விஜயனும் மம்மூட்டியும் சந்தித்துக்கொண்டது பற்றிச் சொல்லுங்கள்…