டாணா- திரை விமர்சனம்


பரம்பரைப் பரம்பரையாகப் போலீஸாக இருக்கும் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தன் குரலில் உள்ள பிரச்சினையால் போலீஸ் வேலையில் சேர மாட்டேன் என்று முடிவெடுத்த ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலையால் உந்தப்பட்டுப் பல தடைகளைக் கடந்து போலீஸாகும் கதையே ‘டாணா’.

டாணாவின் கடந்தகாலக் கதையைத் தோல்பாவைக் கூத்தின் ஊடே வெளிப்படுத்தியது நல்ல ரசனை. தான் போலீஸாகவிட்டாலும், தன் மகனைப் போலீஸாக்க விரும்பும் அப்பாவாக நடிப்பில் பாஸாகியிருக்கிறார் பாண்டியராஜன். அதேநேரம் அவரது வழக்கமான நக்கல், நையாண்டித்தனத்தை இயக்குநர் பயன்படுத்திக்கொள்ளத் தவறியிருக்கிறார்.

வைபவ் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பெண் குரலால் அவதிப்படும்போது மருகுவது, சுடுகாட்டுக்கே போய் பேயிடம் வம்பிழுத்துப் பின்பு பயந்து பம்முவது என்று பெர்ஃபார்மன்ஸில் ஸ்கோர் செய்கிறார்.

நாயகி நந்திதா ஸ்வேதா குறைவான காட்சிகளே வந்தாலும் நிறைவாகவே செய்துள்ளார். எனினும், இறந்துபோன கர்ப்பிணி தொடர்பான வழக்கின் பிளட் டெஸ்ட் ரிசல்ட்டைக் கையில் வைத்துக்கொண்டு, முத்தம் கொடுத்தால்தான் முடிவைச் சொல்வேன் என நாயகி சொல்வதெல்லாம் பக்கா சினிமாத்தனம்.

x