உதயநிதி எனக்கு கண்ணம்மா!- உருகும் மிஷ்கின்


க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

‘சைக்கோ’ படத்தின் வெற்றிக் களிப்பில் இருக்கிறார் மிஷ்கின். படத்துக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பரவலான வரவேற்பு கிடைத்திருக்கும் சூழலில், அவரைச் சந்திக்க அவர் வீட்டுக்குச் சென்றிருந்தோம். புத்தகங்களால் நிரம்பி வழியும் அறையில் ஓர் ஓரத்தில் ஆங்கிலப் புத்தகம் ஒன்றில் மூழ்கியிருந்தார். “புத்தகங்களுக்குப் போக மீதமுள்ள இடத்தில்தான் நான் வசிக்கிறேன்” என்று புன்னகைத்தார். புத்தகத் தாள்களின் வாசனைக்கு மத்தியில் அவருடன் நடத்திய உரையாடலின் தொகுப்பு இது:

இப்படி ஒரு சைக்கோ கதையை யோசிக்கத் தூண்டிய விஷயம் எது?

சைக்கோ கொலைகாரனைப் பின்னணியாகக் கொண்ட திரைப்படத்தை எடுக்கணும்னு ரொம்ப நாளாவே நினைச்சிட்டு இருந்தேன். அதுக்காக நிறைய வாசிக்க வேண்டியிருந்தது. நான் புத்த மதத்தைப் பற்றி ஆழ்ந்து படிச்சிட்டு இருக்கேன். இலக்கியத்துல முதன்முறையா ஒரு சைக்கோவைப் பற்றிப் பதிவு பண்ணப்பட்டது புத்த மதக் கதையிலதான்னு நினைக்கிறேன். ‘அங்குலிமாலா’ங்கிற கதாபாத்திரம் புத்தரின் கதைகள்ல இருக்கு. அவன் வசிக்கும் காட்டுக்குள்ள யார் வந்தாலும் அவங்களைக் கொன்னு அவங்களோட கை, கால்களை வெட்டி மாலையா போட்டுக்குவான். அங்கங்களை மாலையா போட்டுக்கிறதாலதான் அவன் பெயர் அங்குலிமாலா. ஒரு முறை புத்தர் அந்த வழியா வரும்போது மக்கள் அவர்கிட்ட அங்குலிமாலா பற்றி சொல்றாங்க. யார் தடுத்தும் கேட்காம அவனைச் சந்திக்க புத்தர் காட்டுக்குள்ள போறார். கொஞ்ச நேரம் கழிச்சு புத்தர் காட்டைவிட்டு வெளியே வருவார்… அவர் பின்னாடி அங்குலிமாலா தன் தவறை உணர்ந்து தலையைக் குனிஞ்சிட்டு நடந்துவருவான். காட்டுக்குள்ள என்ன நடந்துச்சுன்னு யாருக்கும் தெரியாது. புத்தரும் சொல்லலை, அங்குலிமாலாவும் சொல்லலை. அவர்கள் இறந்து பல வருஷம் கடந்தும் அவங்களுக்கிடையே என்ன நடந்துருக்கும்னு ஆளாளுக்கு ஊகம் பண்றாங்க. அது மாதிரியான ஒரு ஊகம்தான் ‘சைக்கோ’ படம். அதனாலதான் படத்துல சைக்கோ கதாபாத்திரத்தின் பெயர் அங்குலிமாலன். கௌதம புத்தரைக் குறிக்கிற மாதிரி உதயநிதியின் பெயர் கௌதம்.

x