க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in
திரைத் துறையில் 20 வருடங்களைக் கடந்திருக்கும் நடிகை த்ரிஷா, தனது 60-வது படமான ‘பரமபதம் விளையாட்டு’ மூலம் ரசிகர்களுக்கு விருந்தளிக்க வருகிறார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தை இயக்கியிருக்கும் திருஞானம், இதற்கு முன் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரியாதவர். தயாரிப்பாளராக இருந்து இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் திருஞானம், திரைத் துறையின் நுட்பங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். அவருடனான உரையாடலிலிருந்து:
த்ரிஷாவின் 60-வது படம் இது... என்ன ஸ்பெஷல்?
இது மாதிரியான ஒரு படத்துல த்ரிஷா, இதுவரை நடிச்சதில்லை. இந்தப் படத்துல ஹீரோ, ஹீரோயின், வில்லன்னு யாருக்கும் பிரத்யேகமான கதாபாத்திரங்கள் கிடையாது. கதைதான் எல்லாம். சந்தர்ப்ப சூழ்நிலையால யார் என்னவா மாறுறாங்கன்னு பேசுற படம் இது. ‘நான்- லீனியர்’ திரைக்கதையா இதை வடிவமைச்சிருக்கேன். ஒரு நாள் ராத்திரியில நடக்கும் விஷயங்கள்தான் கதையின் முக்கிய அம்சம். அதோட கொஞ்சம் அரசியல் ஆட்டத்தையும் சேர்த்திருக்கோம்.