க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in
ஹாலிவுட் இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக் இயக்கிய ‘தி ஷைனிங்’ (1980) ஒரு வித்தியாசமான பேய்ப் படம். அந்தப் படத்தின் அமானுஷ்ய அம்சங்களில் ஒன்று ‘ரெட்ரம்’ என்ற வார்த்தை. ‘REDRUM’ என்ற வார்த்தையைக் கண்ணாடியின் பிரதிபலிப்பில் பார்த்தால் ‘MURDER’ என்று தெரியும். ‘ரெட்ரம்’ என்ற பெயரில் தமிழில் ஒரு படம் வரப்போகிறது என்றவுடன், ‘ஊருக்கே தெரிந்த ஸ்டான்லி குப்ரிக் படத்தையும் காப்பி அடிக்க ஆரம்பித்து விட்டீர்களா?’ என்ற கேள்வியுடன் இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரனைத் தொடர்புகொண்டோம். “நேர்ல வந்தே பேசுறேன் பாஸ்” என்று நம்மை அழைத்தவர், அனைத்துக் கேள்விகளுக்கும் ஆழமான பதில்களைத் தந்தார்.
‘தி ஷைனிங்’ படத்தோட ரெண்டாவது பாகமான ‘டாக்டர் ஸ்லீப்’ வெளியாகி ஓடிட்டு இருக்கு. இந்த நேரத்துல ‘ரெட்ரம்’ங்கிற டைட்டில் வச்சிருக்கீங்களே?
முதல்ல ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திடுறேன். என் படத்துக்கும் ‘தி ஷைனிங்’ படத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஹாலிவுட் திரைமேதை ஸ்டான்லி குப்ரிக் மேல எனக்கு அளவு கடந்த மரியாதை இருக்கு. யார்கிட்டயாவது அசிஸ்டென்டா இருந்து வந்திருந்தா அவரையே நம்மளோட குருவா பார்ப்போம். இன்னைக்கு டிஜிட்டல் யுகத்துல உலக சினிமாவில இருந்து நிறைய கத்துக்க முடியுது. நான் அப்படித்தான் கத்துக்கிட்டேன். அந்த வகையில ஸ்டான்லி குப்ரிக்தான் என்னோட குரு. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், கிறிஸ்டோபர் நோலன் மாதிரி யான ஜாம்பவான்கள்கிட்ட இருந்தும் நிறைய கத்துக்கிட்டேன்.