க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in
இப்போதெல்லாம் ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதுமே இது எந்த ஆங்கிலப் படத்தின் மறுபிம்பம் என்று கண்டுபிடிப்பதையே தங்களது தலையாய கடமையாக வைத்திருக்கிறார்கள் இணையவாசிகள். சமீபத்தில், ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி வரும் ‘நான் சிரித்தால்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. உடனே, டி.சி காமிக்ஸின் ‘ஜோக்கர்’ படத்தைக் காப்பி அடித்திருக்கிறார்கள் என்று இணையத்தில் கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள். எனக்கும் அப்படியே தோன்ற, அந்தப் படத்தின் இயக்குநர் ராணாவைத் தொடர்பு கொண்டேன். “நேரா வாங்க ப்ரோ பேசுவோம்...” என்று ரொம்பவே கூலாக அழைத்தார்.
ட்ரெய்லரைப் பாத்துட்டு பலர் டிசி காமிக்ஸின் ‘ஜோக்கர்’ படத்திலிருந்து காப்பினு விமர்சிச்சு இருக்காங்களே?
இந்தப் படத்தில் ஹீரோவா வரும் காந்தி என்ற கதாபாத்திரத்துக்குக் கவலை, துக்கம், வலி, பயம் எது வந்தாலும் அழுகைக்குப் பதிலா சிரிப்புதான் வரும். அதனால் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதுதான் படத்தின் கதை. இதே பிரச்சினைதான் ‘ஜோக்கர்’ படத்தின் முக்கியக் கதாபாத்திரத்துக்கும் இருக்கும். இதை வச்சுத்தான் நான் அந்தப் படத்தைக் காப்பி அடிச்சுருக்கதா சொல்றாங்க. ஆனால், ஜோக்கர் படம் வந்தது 2019-ல். நான் 2017-ல், ‘கெக்க பிக்க கெக்க பிக்க’ என்ற ஷார்ட் ஃபிலிமை எடுத்துட்டேன். அதோட மூலக் கதைதான் ‘நான் சிரித்தால்’ படத்தின் கதை. இந்தக் கதை உருவானதே ஒரு சுவாரசியமான நிகழ்வு.