சில்லுக் கருப்பட்டி- திரை விமர்சனம்


காதலின் நான்கு படிநிலைகளை மழலையின் சிரிப்பு போல, குற்றாலச் சாரல் போல மென் உணர்வுகளால் நம்மைத் தீண்டிச் செல்லும் படம்தான் ‘சில்லுக் கருப்பட்டி’.

நான்கு தனித்தனிக் கதைகளை முழுப்படமாக்கிக் கொடுத்துள்ளார் இயக்குநர் ஹலிதா ஷமீம். கதை
களின் மைய நோக்கம் காதல், அன்பு, பரஸ்பர புரிதல்தான். முழுநீள சினிமா என்ற வரையறைக்காக ஒரு கதைக்கும் அடுத்த கதைக்கும் சிறிய தொடர்பை ஏற்படுத்த முயன்றுள்ளார்.

சிறு வயது, இளம் வயது, நடுத்தர வயது, முதிர் வயது என மனித வாழ்வின் நான்கு படிநிலைகளிலும் காதலின்/அன்பின் புரிதலை, தேவையை, மகிமையை அழகியலுடன் உணர்த்திச் செல்கிறது படம். ஒவ்வொன்றும் அதனதன் வயதுக்கேற்ற புரிதலுடன் அழகாய் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் அச்சில் வார்த்தது போல் பொருந்தியுள்ளனர். சிறிது பிசகினாலும் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்திவிடும் கதையை, கயிற்றின் மேல் நடப்பது போலத் தாங்கியிருப்பதில் கதாபாத்திரங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், லீலா சாம்ஸன், நிவேதிதா சதீஷ், ‘க்ரவ் மகா' ஸ்ரீராம், சாரா அர்ஜுன், ராகுல் என அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.

x