உலகம் சுற்றும் சினிமா - 23: வீடியோ கேம் வெறித்தனம்


மனித மனத்துக்குள்தான் எத்தனை அதிசயங்களும், புதிரும் ஒளிந்துள்ளன! உடல் பிணக்கைவிட மனப் பிணக்கு சிக்கலானது. சரியான மருத்துவமும், கவனிப்பும் தரப்படாவிட்டால் மனதளவில் இருக்கும் நோய் இறுதியில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடலாம். ஆபத்து, சம்பந்தப்பட்ட உயிருக்கா அல்லது மற்றவர்களின் உயிருக்கா என்பதெல்லாம் காலம் போடும் கணக்கு. பொதுவாகவே உலகம் முழுக்க உள்ள மக்கள் உடல்நலனுக்குக் கொடுக்கும் அக்கறையை மனநலன் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தருவதில்லை. மனநோய் பற்றி விழிப்புணர்வே இல்லாமல் இருக்கிறோம் என்பதுதான் பரவலான உண்மை. அப்படிப்பட்ட ஓரு மனோவியாதி ஸ்கிட்சோபிரீனியா. மருத்துவ உலகில் இதனை எஃப்20 (F20) என்று அடையாளப்படுத்துகிறார்கள். இந்த நோயைக் கதையின் கருவாக எடுத்துக்கொண்டு எளிய முறையில் எடுக்கப்பட்ட யதார்த்தமான த்ரில்லர் படம் ‘எஃப்20’.

குரேஷிய சினிமாவின் சமகால நம்பிக்கையாகத் திகழும் இயக்குநர் ஆர்சன் ஆண்டோனின் நான்காவது படம் இது. அவருடைய ‘எ வொண்டர்ஃபுல் நைட் இன் ஸ்ப்லிட்’(2004), ‘நோ ஒன்ஸ் சன்’(2008), ‘ஹலிமாஸ் பாத்’(2012) ஆகிய முந்தைய படங்களைத் தொடர்ந்து உலக அரங்கில் குரேஷிய மொழிப் படங்களின் இருப்பை நிலைநிறுத்தியுள்ளது ‘எஃப்20’. ஹெர்வோயி சடாரிக் எழுதிய திரைக்கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. குறிப்பாக, வீடியோ கேம் காட்சிகளை நிஜ உலகாகக் கற்பிதம் செய்துகொண்டு கற்பனையில் வாழும் இளைஞர்களின் நிலையை அப்பட்டமாகச் சொன்ன படமும்கூட!

மடைமாற்றும் மனநோய்

குரேஷியாவின் ஸாக்ரெப் நகரில் பீட்ஸா கடை நடத்திவருபவர் மேட்டே. அவரது மகள் மார்டீனா. வேலைக்குப் பணியாட்களை அமர்த்த முடியாமல், தன் மகளைப் பீட்ஸா விநியோகத்துக்குப் பயன்படுத்துவார் மேட்டே. 21-ம் நூற்றாண்டு இளைஞர்களுக்கான சகல இலக்கணங்களுடன் இருப்பவள் மார்டீனா. கொண்டாட்ட மனநிலையை எப்போதும் தன்னுடன் சுமந்துசெல்பவள். தன் தோழியுடன் வார இறுதியில் கடற்கரையில் நடக்கும் பார்ட்டிக்குப் போக விருப்பப்படுவாள். ஆனால், மேட்டே மறுத்துவிடுவார். இதற்கிடையில் ஃபிலிப் என்னும் இளைஞனுடன் மார்டீனாவுக்குக் காதல் அரும்பும். ஏற்கெனவே ஒரு காதலன் இருப்பான் அவளுக்கு.

ஃபிலிப் வெறித்தனமான வீடியோ கேம் ரசிகன். பெற்றோர் விடுமுறையைக் கழிக்க வெளியூர் சென்றிருக்கும் நிலையில் நாள் முழுவதும் வன்முறை நிறைந்த வீடியோ கேம்களை விளையாடுவதிலும் மூன்று வேளையும் பீட்ஸா சாப்பிடுவதிலும் கழிப்பான். ஃபிலிப்பின் துணையுடன் மார்டீனா அவள் அப்பாவிடம் பணத்தைத் திருடிக்கொண்டு கடற்கரை பார்ட்டிக்குச் செல்லத் திட்டமிடுவாள். அப்பாவின் பணப்பெட்டியை எடுக்கும்போது அதில் இருக்கும் துப்பாக்கியும் ஃபிலிப் கையில் சிக்கும். அந்நேரம் பார்த்து அவளது அப்பா அங்கே வர, துப்பாக்கி முனையில் அவரை மிரட்டிவிட்டு இளம் ஜோடி தப்பிவிடும். வழியில் குறுக்கிடும் மார்டீனாவின் முன்னாள் காதலனை சுட்டுக்கொன்றுவிடுவான் ஃபிலிப். இதுவரை டீன் ஏஜ் காதல் கதை போல் துள்ளலாகச் சென்றுகொண்டிருந்த திரைக்கதை தடம் மாறி பரபரவென்று வேகமெடுக்கும்.

ஃபிலிப் ‘எஃப்20’ நோயினால் பாதிக்கப் பட்டவன். அவன் விளையாடும் வீடியோ கேம் போலவே நிகழ்காலத்திலும் மாயத் தோற்றத்தை (illusions) உருவாக்கிக்கொள்பவன். சின்ன வயதிலிருந்தே இந்த நோயின் காரணமாகப் பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்டவன். உண்மையில், அவனது பெற்றோர் வெளியூருக்குச் செல்லவில்லை. வீடியோ கேமிலிருந்து விலகி நிற்க வற்புறுத்தும் பெற்றோரைக் கொடூரமான முறையில் கொலை செய்திருப்பான் ஃபிலிப். இப்படி அடுத்தடுத்து விரியும் அதிர்ச்சிக் காட்சிகள் திரைக்கதையின் திகிலைக் கூட்டும். மார்டீனா அவனிடமிருந்து தப்பித்தாளா இல்லையா என்பதை இறுதிக்காட்சி வரை திக் திக் நிமிடங்களாக நகர்த்தியிருப்பார் இயக்குநர்.

ஒழுங்கற்ற ஒழுங்கு

அரிதான மனநோயை மையக் கருத்தாக எடுத்துக்கொண்டு அதனின் நீட்சியாக நடக்கும் தொடர் வன்முறைகளை எந்த விதமான பாசாங்கும் இல்லாமல் யதார்த்தமாகச் சொன்ன படம் இது. ஃபிலிப்பின் பிரச்சினை, அவன் சொல்லும் கருப்பு ஆக்டோபஸ் ரைம்ஸ், அவன் எடுத்துக்கொண்ட சிகிச்சைகள், கண் முன் காட்சிகள் வீடியோ கேம் திரையாக விரிவது, வாசலில் காற்று வாங்கிக்கொண்டிருந்தவன் கண நேரத்தில் முடிவெடுத்து தாய், தந்தை இருவரையும் கோடாரியால் பிளப்பது என்று அனைத்துக் காட்சிகளும் படத்தில் உள்ள ஒழுங்கற்ற தன்மையில் இருக்கும் ஒழுங்கினுள் அழகாகப் பொருந்தியுள்ளன.

2018-ல் வெளிவந்த இப்படம் தற்போது வரை பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அமோக வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்தப் படத்தின் வெற்றி பறைசாற்றுவது ஒன்றைத்தான்: தரமான படம் எடுக்கப் பிரம்மாண்டமும், பெரிய பட்ஜெட்டும் தேவையில்லை. சிறப்பான திரைக்கதையும், அதைத் திறம்பட காட்சி மொழியாக மாற்றும் திறமை மட்டும் இருந்தால் போதுமானது.
2006-ல் வெளிவந்து ஒளிப்பதிவில் புதிய எல்லைகளைத் தொட்ட டிஸ்டோபியன் வகை ஆக் ஷன் த்ரில்லர் படத்தைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

x