காணாமல் போன தம்பியாக நடித்து சொத்தை அடையத் துடிக்கும் ஒருவன், அந்தக் குடும்பத்தில் ஒருவனாகவே மாறிவிடுவதுதான் ‘தம்பி’.
எம்எல்ஏ-வான சத்யராஜின் மகன் 15 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டைவிட்டு ஓடிப்போகிறார். அவனது மீள்வருகைக்காக மொத்தக் குடும்பமும் ஏங்கிநிற்க, ஓடிப்போன மகனாக குடும்பத்துக்குள் நுழைகிறார் கார்த்தி. பணத்தை திருடும் நோக்கத்தோடு போலியாக நுழையும் கார்த்தி, அன்பை பொழியும் குடும்பத்தின் முன்னால் சரண் அடைவதும், ஓடிப்போன மகனுக்கு நிஜமாகவே என்ன நடந்தது என்பதும்தான் திரைக்கதை.
‘த்ரிஷ்யம்’ படத்தின் சென்டிமென்ட், த்ரில்லரை வைத்து புதிய கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப். ஆனால், படத்தின் க்ளைமாக்ஸ் வரை அதே மாதிரியான கதைதான் இதுவும் என யோசிக்க முடியாதபடி திரைக்கதையை வடிவமைத்திருப்பது சிறப்பு
திருட்டுத்தனத்துடன் கார்த்தி காட்டும் ஒவ்வொரு ரியாக்ஷனும் ரசிக்க வைக்கிறது. தன்னைச் சுற்றி இருப்பவர்களிடமே விஷயத்தைத் தெரிந்துகொண்டு, அதைவைத்து அவர் நடிக்கும் காட்சிகள் கலகலப்பாக இருக்கின்றன.